முக்கிய செய்திகள்

மருத்துவ சிகிச்சை பெற விஜயகாந்த் இன்று அமெரிக்கா பயணம்..


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று நள்ளிரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். பாரீஸ் சென்று அங்கிருந்து நியூயார்க் நகருக்கு செல்கிறார்.

தமிழக அரசியலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மக்கள் செல்வாக்கு பெற்று முக்கிய இடத்தை பிடித்தார்.

முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்தார்.

அ.தி.மு.க.-தி.மு.க. இரு கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்து தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி பொறுப்புகளிலும் கட்சியினர் அங்கம் வகித்தனர். தமிழக அரசியல் கட்சிகளில் 3-வது இடத்திற்கு வளர்ந்து வந்த தே.மு.தி.க. கடந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

கடந்த சில வருடங்களாக விஜயகாந்தின் பேச்சுத் திறன் குறைந்து குரல் வளமும் பாதித்தது. மேலும் அவரது உடல் நலமும் பாதிக்கப்பட்டது. பொது இடங்களில் அவரால் நீண்ட நேரம் பேச முடியாத நிலை ஏற்பட்டது. பொதுக் கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளை கூட அவர் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்ற அடைய தேவையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதற்காக அவர் இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். பாரீஸ் சென்று அங்கிருந்து நியூயார்க் நகருக்கு செல்கின்றார். விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் செல்கிறார்கள்.

அமெரிக்கா செல்லும் விஜயகாந்த் அங்கு 40 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது.

அவருக்கு தைராய்டு, குரல் வளம் குறித்த பிரச்சனைகள் இருப்பதால் அவற்றை குணமாக்கவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்து அதன் பிறகு சென்னை திரும்புவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜயகாந்த் சுகம் பெற்று திரும்பி வர கட்சி தொண்டர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்கள். அமெரிக்கா செல்வதற்காக அவர் குடும்பத்தினருடன் இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார். தொண்டர்கள் யாரும் தன்னை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth