முக்கிய செய்திகள்

காங்கிரசை தன் பக்கம் திருப்ப தினகரன் முயற்சியா?: சலசலப்பை ஏற்படுத்திய சசிகலா – விஜயசாந்தி சந்திப்பு

பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான விஜயசாந்தி, பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். தற்போதையை அரசியல் சூழலில், இந்தச் சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என 80 களில் புகழப்பட்ட நடிகை விஜயசாந்தி, சினிமாவில் தனது மார்க்கெட் சரியத் தொடங்கிய போது அரசியலுக்குள் நுழைந்தார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும்  மேலாக விஜயசாந்தி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 1998-ல் பாஜக.வில் இணைந்து இயங்கிய விஜயசாந்தி, பின்னர் தல்லி தெலங்கானா என்கிற தனிக் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து தனது கட்சியை தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைத்தார்.

அந்தக் கட்சி சார்பில் எம்.பி. ஆனவர், பின்னர் காங்கிரஸில் ஐக்கியமானார். ஆந்திரா மற்றும் தெலங்கானா எல்லைக்கு உட்பட்டே விஜயசாந்தி அரசியல் களமாடி வந்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக ஆதரவாளராக, குறிப்பாக மறைந்த ஜெயலலிதாவின் தீவிரப் பற்றாளர் ஆவார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது பல முறை போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசியிருக்கிறார் விஜயசாந்தி. அந்த வகையில் வி.கே.சசிகலாவுடனும் அவருக்கு நெருங்கிய நட்பு உண்டு. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை சந்தித்து பேசினார் விஜயசாந்தி. அதேபோல நடராஜன் மறைந்த போதும். சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அந்த வகையில் நட்பு அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 4) பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்து விஜயசாந்தி பேசியதாக தெரிகிறது. தற்போதைய அரசியல் சூழலில் அவரது சந்திப்பு சில பல்வேறு ஊகங்களுக்கு வாய்ப்பளிப்பதாக உள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு அரசியலில் காங்கிரஸ் கட்சியை தனது அணிக்கு கொண்டு வர டிடிவி தினகரன் முயற்சித்து வருகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட திமுக.வுடன் தனது உறவை உறுதி செய்துவிட்டது.

இந்நிலையில், டிடிவி தினகரன் சசிகலாவைச் சந்தித்த அதே நாளில் விஜயசாந்தியும் சசிகலாவைச் சந்தித்ததாக தெரிகிறது.

காங்கிரசைத் தங்கள் பக்கம் இழுக்கும்  டிடிவி தினகரன் – சசிகலா தரப்பின் திட்டத்திற்கு உதவும் வகையில் விஜயசாந்தி இந்த சந்திப்பை நடத்தினாரா? என்கிற கேள்வி அரசியல் அரங்கில்  எழுந்துள்ளது.