ஜெய்ப்பூர் குத்துச்சண்டை போட்டியில் விஜேந்தர் சிங் வெற்றி ..


இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் முன்னணி வீரராக திகழும் விஜேந்தர் சிங், இதுவரை விளையாடியுள்ள 9 பந்தயங்களிலும் வெற்றி பெற்றிருப்பதுடன் டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல் (WBO Oriental) மற்றும் ஆசிய பசிபிக் (Asia-Pacific) பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் விஜேந்தர்சிங் தனது 10-வது தொழில்முறை குத்துச்சண்டையில் கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவுடன், இன்று மோதினார். 34 வயதான எர்னெஸ்ட் அமுஜூ 25 போட்டிகளில் விளையாடி 23-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டவர்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில், விஜேந்தர் சிங் தனது இரு பட்டங்களுக்காகவும் விளையாடினார். 10 சுற்றுகளை கொண்ட இப்போட்டி தொடக்கத்தில் இருந்தே விஜேந்தர் சிறப்பாக விளையாடினார். விஜேந்தர் தனது குத்துகளால் கானா வீரரை நிலைகுலைய செய்தார். இருப்பினும் 5-வது சுற்றில் கானா வீரர் விஜேந்தரை பலமாக தாக்கியதில் விஜேந்தர் காயமடைந்தார்.

அதன்பின் ஆக்ரோஷமாக விளையாடிய விஜேந்தர் தொடர்ந்து கானா வீரரை தாக்கினார். இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் ஆட்டம் இறுதிவரை விறுவிறுப்பாக சென்றது. இருப்பினும் 10 சுற்றுகளின் முடிவில் நடுவர்களில் ஒருமித்த முடிவில் விஜேந்தர் சிங் வெற்றி பெற்றார். இதனால் விஜேந்தர் டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல் மற்றும் ஆசிய பசிபிக் பட்டங்களை தக்கவைத்து கொண்டார்.

இதுவரை 10 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் விளையாடியுள்ள விஜேந்தர் சிங், அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். 25 போட்டிகளில் விளையாடியுள்ள, எர்னெஸ்ட் அமுஜூவுக்கு இது 3-வது தோல்வியாகும். கடந்த வாரம் எர்னெஸ்ட், விஜேந்தரை 3 அல்லது 4-வது ரவுண்டிலேயே நாக் அவுட் செய்து வெளியேற்றுவேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.