முக்கிய செய்திகள்

வியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்..


இந்து மதத்தின் ஆணிவேரை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன் மத்திய வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்டேன். சில பாரம்பரியங்கள் பராமரிக்கப்படுவதை காணமுடிந்தது என்றாலும் சில பல மாறுதல்களையும் காணமுடிகிறது. சில பாரம்பரியங்கள் தொடர்ந்தாலும், பல தொலைந்துவிட்டன.
2000 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட சம்பா சமூகம் இன்னும் நிலைத்திருக்கிறது ஆனால் அதற்கும் முந்தைய இந்து மதம் இங்கே அழிவின் விளிம்பில் உள்ளது.

பண்டைய காலத்தில் இந்து அரசின் ஒரு பகுதியாக இருந்த சம்பா பகுதி இந்து மதத்தின் கோட்டையாக திகழ்ந்தது. சம்பாவில் இருக்கும் புராதனமான கோவில்களில் எஞ்சியிருக்கும் சில அதற்கான சாட்சியங்களாகிவிட்டன. வேறு சில கோயில்கள் இடிபாடுகளாக எஞ்சி நிற்கின்றன.

வியட்நாம் நாட்டில் இரண்டாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை உள்ளூர் சமுதாயமான ‘சம்’ பரம்பரையின் ஆட்சி நடைபெற்றது. சம் சமுதாயத்தில் இந்து மக்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. ஆனால் பிறகு அவர்களில் பலர் பெளத்தம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிவிட்டனர்.

இன்று இந்து சமுதாயம் இங்கே சிறுபான்மையாக குறுகிவிட்டது. வியட்நாம் வாழ் இந்துக்களை தேடி, ‘மை ஹியெப்’ (MY NGHIEP) என்ற கிராமத்தை அடைந்தோம்.
குக்கிராமமான ‘மை ஹியெப்’, நெடுஞ்சாலையில் இருந்து சில கிலோ மீட்டர் உள்ளடங்கி உள்ளது. உச்சி வெயில் நேரத்திலே நாங்கள் அங்கு சென்றடைந்தோம். ஒரு வீட்டின் வாசலில் குர்தா-பைஜாமா அணிந்த இளைஞர் ஒருவர் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசிக்கொண்டிருந்தது வியட்நாம் மொழி அல்ல என்பது புரிந்தது.

உரையாடலை முடித்துக் கொண்ட இளைஞர் எங்களை வரவேற்றார். தனது தந்தையுடன் ‘சம்’ மொழியில் அவர் பேசிக்கொண்டிருந்தார் என்பதை தெரிந்துக் கொண்டோம். சமையலறையில் இருந்து உணவின் மணம் அந்த இடத்தையே நிறைத்துக் கொண்டிருந்தது.
வீட்டின் வெளியே உணவு உண்பதற்காக மேசை போடப்பட்டிருந்தது. வீட்டின் கதவில் ஓரிரண்டு உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இன்ரா ஜாகாவும், அவரது தந்தை இன்ரா சாராவும் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள். இவர்களின் மூதாதையர்களும் இந்த கிராமத்தில் வசித்த இந்து மக்களின் வழித்தோன்றல்கள்.

இந்த தந்தையும் மகனும் இந்து மதத்தை வெளியில் இருந்து ஏற்படும் பாதிப்பில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சம் கலாசாரத்தை உயிர்ப்புடன் வைப்பதோடு, தொலைத்துவிட்ட இலக்கியங்களையும், கலைகளையும் மீட்டெடுக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சம் மொழிக் கவிஞரான இன்ரா சாரா உபன்யாசம் செய்பவர். அவரது கடுமையான உழைப்பின் பயனாக, சம் மொழியின் பழைய கவிதைகளையும் தேடி எடுத்து வெளியிட்டார். குழந்தைப் பருவத்தில் இருந்தே, தனது சமூகத்தின் பொற்காலம் பற்றிக் கேள்விப்பட்டு அதில் அதிக ஈடுபாடு கொண்டவாராக இருந்திருக்கிறார் இன்ரா சாரா.

அவற்றில் உண்மைகளோடு புனைவுகளும் கட்டுக்கதைகளும் கலந்திருந்ததாக அவர் கூறுகிறார். “எனது ஆசிரியர்களும், உறவினர்களும் பல நம்ப முடியாத கதைகளையும், இயல்பான வாழ்க்கையைப் பற்றியும் சொல்வதை கேட்டுத்தான் வளர்ந்தேன். புனைவு உலகம் மற்றும் உண்மை உலகம் என்ற இருவேறு உலகங்களுக்கிடையில் இருப்பதாக நான் உணர்ந்தேன்”.
தந்தை இன்ரா சாரா, இலக்கியத்தை புதுப்பிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தால், இந்து மதத்தை காப்பாற்றும் முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார் மகன் இன்ரா ஜாகா. அதற்காக இந்தியாவிற்கு நான்கு முறை பயணம் மேற்கொண்ட அவர் விஸ்வ இந்து பரிஷத்தின் இந்து மதம் தொடர்பான மாநாட்டிலும் கலந்துக் கொண்டார்.

“இந்தியாவிலிருந்து ஊக்கமளிக்கும் உத்வேகத்தை பெற்ற நான், வியட்நாமில் இந்து மதத்தைப் பற்றி எடுத்துக்கூறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். ஆனால் இங்கிருக்கும் இந்து மதம் இந்தியாவில் இருக்கும் இந்து மதத்தில் இருந்து மாறுபட்டுள்ளது” என்கிறார் இன்ரா ஜாகா.

சம் சமூகத்தில் தற்போதும் தொடரும் இந்து மதத்தின் பழைய பாரம்பரியங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் பற்றி இன்ரா ஜாகாவிடம் கேட்டேன். “கற்சிலைகளை வணங்குவோம் என்று எங்கள் பெற்றோர்களும், மூதாதையர்களும் சொல்லக் கேட்டிருக்கிறோம். கல்லில் செய்யப்பட்ட லிங்க வடிவங்களை வழிபடுவோம். இன்றும் நாங்கள் சிவ பக்தர்கள், எங்கள் கோவில்களும் சிவாலயங்களாகவே உள்ளன” என்கிறார் இன்ரா ஜாகா.
1,70,000 மக்களை கொண்டுள்ள சம் சமுதாயம், வியட்நாமின் மூன்று மாகாணங்களில் பரவியிருக்கிறது, இதில் இந்துக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பா பிராந்தியத்தில் நான்கு கோயில்கள் மட்டுமே இருக்கின்றன, அவற்றில் இரண்டில் மட்டுமே வழிபாடுகள் நடைபெறுகின்றன. இங்கு இந்து மதம் முற்றிலுமாக அழிந்து போய்விடும் நிலையில் இருக்கிறது.

ராமாயணம், பகவத் கீதை, மகாபாரதம் போன்ற புராணங்களையும், இதிகாசங்களையும் படித்திருக்கிறீர்களா என்று இன்ரா ஜாகாவிடம் கேட்டோம்.
நீங்கள் சொல்வது போன்ற மதம்சார் இலக்கியங்கள் எங்களிடம் இல்லை. எனவே ஏற்கனவே நாங்கள் அவற்றை இழந்துவிட்டோம் என்றே சொல்லலாம். எங்கள் பூசாரிகளிடம்கூட அவற்றின் பிரதிகள் இல்லை, எங்கள் சமூகத்தின் இளைய தலைமுறையினருக்கு இந்து மதம் பற்றிய பரிச்சயமும் அதிகம் இல்லை” என்கிறார் மகன் இன்ரா.

ஹோ சி மின் போன்ற வியட்நாம் நாட்டு தெற்குப் பகுதி நகரங்களில் இந்து மக்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். இப்போதும் சில கலப்பின இந்து மக்கள் இந்த நகரத்தில் வசிக்கின்றனர்.

பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயத்தை பராமரிக்கும் முத்தையா, இந்திய-வியட்நாம் பெற்றோருக்கு பிறந்தவர். அவரது மூதாதையர்கள் தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்தவர்கள். இங்குள்ள வியட்நாமியர்களை திருமணம் செய்து கொண்டு இங்கேயே தங்கிவிட்டவர்கள். இவர்களுக்கு இந்து மதத்துடனான தொடர்பு இன்னமும் தொடர்கிறது.
ஹோ சி மின் நகரில் உள்ள முருகன் கோவில் 1880ஆம் ஆண்டு தமிழர்களால் கட்டப்பட்டது.

முத்தையா சொல்கிறார்: “கடவுளுக்கு பூசைகள் செய்வது பற்றி எனது தந்தை கற்றுக் கொடுத்திருக்கிறார். பூசைக்கான மந்திரங்களும், நடைமுறைகளும் எனக்கு நன்றாகத் தெரியும். கோவில் பராமரிப்பு தொடர்பான எல்லா தகவல்களும் எனக்குத் தெரியும்”.
இந்த நகரத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன. இந்தியாவில் இருந்து வந்தவர்கள் இங்கு பூசாரிகளாக உள்ளனர். அவர்களில் பலர் சம் இந்துக்களைப் பற்றியும் அவர்களது பழைய கோவில்கள் பற்றியும் தெரிந்து வைத்துள்ளனர்.

சம் சமுதாயம் தங்களது பாரம்பரிய இந்து மதத்தையும், கலாசாரத்தையும் காப்பாற்ற முயற்சிக்கிறது. இங்குள்ள கோவில்கள் மட்டுமல்ல, அதன் இடிபாடுகளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையங்களாக இருக்கின்றன.
நன்றி
பிபிசி தமிழ்