அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வீடுகளில் லஞ்சஒழிப்புப் போலீசார் நடத்திய அதிரடி சோதனைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும், அதிமுக எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கூறியதாவது:
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு போடும் நோக்கத்தில் சோதனை நடைபெறுகிறது.
எங்களை அச்சுறுத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயார்.
தி.மு.க. அரசு இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்டபூர்வமாக இதை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது என கூறினார்.
உடன் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “விழுப்புரத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தனது சொந்த மாவட்டத்திற்கு நன்மை செய்வதற்கு மாறாக அங்கு அமையவிருக்கும் பல்கலைக் கழகத்தைத் தடுக்கிறார்” என்று கூறினார்.