முக்கிய செய்திகள்

வேலைகேட்டு மாணவர்கள் ரயில் மறியல்: ஸ்தம்பித்தது மும்பை..


ரயில்வேயில் நிரந்தர வேலை கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் திடீரென மும்பையில் இன்று காலையில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், மாட்டுங்கா, தாதர் இடையிலான ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

காலை நேரத்தில் பெரும் பரபரப்பாக காணப்படும் மும்பையில், ரயில் போக்குவரத்து தடைபட்டதால், ஏறக்குறைய 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அலுவலகம், தொழிற்சாலைக்குச் செல்ல முடியாமலும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர்.

மும்பையில் உள்ள மாட்டுங்கா, தாதர் இடையிலான ரயில் பாதைக்கு காலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திடீரென வந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர். ரயில்வேயில் பயிற்சியாளர்களாக (அப்ரன்டிஸ்) இருக்கும் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்திலும், ரயில் மறியலிலும் ஈடுபட்டனர்.

தொடக்கத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்த நிலையில் நேரம் செல்லச் செல்ல மாணவர்கள் கூட்டம் அதிகரித்து ஒட்டுமொத்த 4 வழி ரயில் பாதையையும் முடக்கி அமர்ந்தனர். இதனால், ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதித்து, இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

மாட்டுங்கா, தாதர் பகுதியில் இருந்து மும்பை நகருக்குச் செல்பவர்கள் செல்ல முடியாமல் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ஆங்காங்கே ரயில் நிலையங்களில் தவித்தனர். மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வந்துகொண்டிருந்த ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

மும்பை நகர மக்களில் பெரும்பகுதியானோர் பேருந்துகளைக் காட்டிலும், ரயில் சேவையை நம்பியே இருக்கின்றனர். இந்நிலையில், ரயில் போக்குவரத்து திடீரென ஸ்தம்பித்ததால், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ரயில் நிலையங்களில் தவித்தனர்.இதனால், ரயில் வருகையை எதிர்பார்த்து மாட்டுங்கா முதல் தாதர் வரையிலான ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.

ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீஸார் போராட்டம் நடத்திய மாணவர்களிடம் சமாதானப் பேச்சு நடத்தினர். பலமணிநேரம் பேச்சு நடந்தும் மாணவர்கள் போராட்டத்தை திருப்பப் பெற முடியாது எனத் தெரிவித்துவிட்டனர். மேலும் மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து வந்து கொண்டு இருப்பதால், போராட்டம் இன்னும் தீவிரமடையும் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவர்கள் கூட்டத்தைக் கலைக்க ரயில்வே போலீஸார் தடியடி நடத்தினர். ஆனாலும் மாணவர்கள் கூட்டம் கலையாமல் போலீஸார் மீது கற்களை வீசி எறிந்ததால், அந்த இடம் சிறிதுநேரம் பரபரப்பானது.

இந்த விஷயம் அதன்பின், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் உறுதியளித்ததையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

இது குறித்து ரயில் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ”ரயில்வேயின் பழகுனர்கள், பயிற்சியாளர்கள் சட்டப்படி பயிற்சி பெறுபவர்களுக்கு வேலை வழங்கவேண்டும் என்று கூறப்படவில்லை. பயிற்சி மட்டுமே குறிப்பிட்ட காலத்துக்கு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், நேரடி பணி அமர்த்துதல் மூலம் 20 சதவீதம் இடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகத்துக்கு அதிகாரம் உண்டு. இது தொடர்பாக கடந்த 3-ம் தேதி அறிவிக்கையும் விடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.