புத்தம் புது  பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)

இயற்கையிலிருந்து  பிறந்தோம் இயற்கையுடன் வாழ்வோம். கோடானு கோடி உயிர்களை தன்னகத்தே கொண்டு ஓயாது இயங்கிக்கொண்டிருக்கும்  இப்புவியை அதிகம் சொந்தம்கொள்வதும் அதிகம்  சீரழிப்பதும்  மனித  உயிர்களாகிய  நாம்  மட்டுமே.

ஆறறிவுடன்  சிறிது  ஆணவமும்  சேர்ந்து கொண்டதால் இந்நிலை வந்ததோ? அறிவியல் வளர்ச்சி என்று இயல் வாழ்க்கையை சற்று கைவிட்டோமோ? போகட்டும். கடந்தவை  உண்டுமுடித்த  உணவாக இருக்கட்டும்.  இருப்பில்… கையில் உள்ள உணவை சற்று கவனிப்போம்.

இங்கு  உணவே  உடலாய்  உயிராய்  வாழ்க்கையாய்  இருப்பது  நாம் அறிந்ததே.  ஆம்  ஓடியாடி  உழைப்பதும்  ஒரு  சாண்  வயிற்றிற்காகத்தானே… அப்படியென்றால் நம் வாழ்வியலின் அடிப்படையே உணவில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. சற்றே பின்னோக்கி காலச்சக்கரத்தைச் சுற்றிவிட்டால்… ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு  முன்பு  வரை  நம்  வாழ்வில்  சில  விஷயங்கள்… சில விஷங்கள்… பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்.

பெரும்பாலும் ஊர்களைச் சுற்றி வயல்களும் நீரோடைகளும் ஏரி குளங்களும் இருந்தன. எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த புத்துணர்வளிக்கும் காற்றும் நிறைய கிடைத்தது.  மண் தரைகள், வீட்டிற்கு வீடு சிறிய கொல்லைகள், அதில் முருங்கை, வாழை, கொய்யா, வாசமிகு பூச்செடிகள், சளி பிடித்தால் உடனை துவையல் அரைக்க, கஷாயம் வைக்கவென துளசி, தூதுவேளை, கற்பூரவல்லி.

பூச்சிக்கடியெனில் உடனே பற்றுப்போட குப்பைமேனி, திருநீற்று பச்சிலை, வேப்பிலை, அழகுப் பெண்களின் வளைகரங்களை மேலும் அழகாக்குவதுடன் உடல் சூட்டை சரியாக வைத்து, கர்ப்பப்பைப் பிரச்சினைகள் வராது காக்கும் மருதாணி, விதவிதமான கீரைகள், தக்காளி, பச்சைமிளகாய்… உண்மையில் மிக எளிதான வாழ்வியல் முறையில்தானே வாழ்ந்தோம். அப்போதும் புயல் மழை வெள்ளம் வெயில் எல்லாமே இருந்தது தானே. ஆனால் அன்று இத்தனை சர்க்கரை நோயாளிகள் இல்லையே. காய்ச்சல்கள் இல்லையே. இத்தனை விதமான  புற்றுநோய்  பாதிக்கப்பட்டவர்கள்  இல்லையே. இவையனைத்தையும் விட இத்தனை கருத்தரிப்பு மையங்கள் இல்லையே…

ஆனால் நம் அறிவுத்திறன், வருமானம், அறிவியல் திறன் எல்லாம் வளர்ந்தும் உயிர் தாங்கும் உடல் வளம் குறைந்து விட்டதே. இனிவரும் வாரங்களில் நம் உடல் நலத்தையும் உயிர் வளத்தையும் மீட்டெடுக்கும் எளிய சற்றே மறந்துவிட்ட நம்  பாரம்பரிய  வாழ்வியலை  புதிய கோணத்தில் புத்தம் புதிய பூமி வேண்டும் என்று பார்ப்போம்.

 

தொடரும்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை கைவிட முதல்வர் வலியுறுத்தல்..

கஜா இடைக்கால நிவாரணமாக ரூ.353 கோடி : மத்திய அரசு ஒதுக்கீடு

Recent Posts