முக்கிய செய்திகள்

காவிரிச் சிக்கல்: நாளை வரை பொறுத்திருப்போம் என்கிறார் முதல்வர்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு நாளை (மார்ச் 29) உடன் முடிவடைகிறது. இதனிடையே, தமிழக பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள், காவிரி வழக்கில் தமிழகத்தின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் சேகர்நாப்தே-வை டெல்லியில்செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், 31-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என வழக்கறிஞர் சேகர்நாப்தே தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். அதன்படி, வரும் 29 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம், முறைபடுத்துதல் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் 6 வார காலக்கெடு விதித்துள்ளது. அதற்குள் அதனை மத்திய அரசு அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அவகாசம் முடிந்த பிறகு தான் நாம் எதையும் செய்ய முடியும். அதற்கு முன் எதையும் இப்போது சொல்ல முடியாது. அமைக்காவிட்டால், ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். காலக்கெடுவிற்குள் நல்ல தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கிறோம். தமிழக மக்களின் உணர்வை புரிந்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தும் என எதிர்பார்க்கின்றோம்

இவ்வாறு அவர் கூறினார்