மேற்கு வங்க மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று அந்த மாநில முதலமைச்சர் ம ம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை , மம்தா பானர்ஜி சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அசாமில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 19 லட்சம் பேரையும் குடிமக்கள் பதிவேட்டில் இணைக்கப்பட வேண்டும் என்றார்.
இதனை அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாகவும், இது தொடர்பாக அமித் ஷாவிடம் கடிதத்தைக் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விடுபட்ட 19 லட்சம் பேரில் இந்தி, வங்க மொழி, அசாம் மொழி பேசுபவர்கள் அதிகம் உள்ளதாகவும், உண்மையான வாக்காளர்கள் நிறைய பேர் விடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேற்கு வங்கத்துக்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையில்லை என்பதே நிரந்தர நிலைப்பாடு” என்று அவர் கூறினார்.
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவது குறித்தும் அமித் ஷாவிடம் பேசியதாக அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதுமே தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று அமித் ஷா கூறியுள்ள நிலையில்,
மேற்கு வங்கத்துக்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையில்லை என்று மம்தா பானர்ஜி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.