104 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் – எளிய இலக்குடன் களமிறங்கும் இந்தியா

ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில்,  104 ரன்களுடன் வெஸ்ட் இன்டீஸ் அணி சுருண்டது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதுமில்லை. மும்பையில் விளையாடிய அதே அணியோடு களம் இறங்கியது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரன் பொவேல், ரோவ்மன் பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். ஆட்டத்தின் 4-வது பந்தில் கிரன் பொவேல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஷாய் ஹோப்பை ரன்ஏதும் எடுக்க விடாமல் பும்ரா க்ளீன் போல்டாக்கினார். இதனால் இரண்டு ரன்கள் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு ரோவ்மன் பொவேல் உடன் சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியால் ஓரளவிற்குத்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. ஸ்கோர் 36 ரன்னாக இருக்கும்போது சாமுவேல்ஸ் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் ஹெட்மையரை 9 ரன்னில் ஜடேஜா வீழ்த்தினார். ஜடேஜா சுழலில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

ஹோல்டர் மட்டும் தாக்குப்பிடித்து 25 ரன்கள் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் 31.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 104 ரன்னில் சுருண்டது. ஜடேஜா அபாரமான பந்து வீசி 9.5 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். பும்ரா, கலீல் அஹமது தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். 

105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.