மேற்கு மண்டலத்தில் கமல் : மக்கள் உற்சாக வரவேற்பு..


மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு சுற்றுப் பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21ம் தேதி மதுரையில் தனது கட்சியின் பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார். கட்சி கொடியினை அறிமுகப்படுத்தினார். திருச்சியில் ஏப்ரல் 4ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். முன்னதாக, மகளிர் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னையில் கமல் விழா நடத்தினார்.

ஈரோடு மாவட்டத்தில் பயணம் தொடக்கம் இந்த நிலையில், கமல்ஹாசன் நேற்றும், இன்றும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்தார். இன்று காலை, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் அவர் பயணத்தை தொடங்கினார். கட்சி தொண்டர் வடிவேல், கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில் திரளான தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். மொடக்குறிச்சி கிராம மக்களை கமல் சந்தித்து பேசினார். பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர்.

தந்தை பெரியார் நினைவு இல்லம் இதன்பிறகு, கமல்ஹாசன், ஈரோடு பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் நினைவு இல்லத்தை பார்வையிட்டார். அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். இதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். கிறிஸ்தவ மிஷினரிகள் தனது கட்சிக்கு நிதி உதவி செய்வதாக கூறப்படுவது நகைப்புக்குரியது என்று அவர் தெரிவித்தார்.

இதையடுத்து ஈரோடு மாவட்டத்திலுள்ள வீரப்பன்சத்திரம் சென்ற அவர் காரில் நின்றபடி கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் தொண்டர்கள் நடுவே பேசினார். உங்கள் குறைகளை புரிந்துகொள்ள முயல்வதாக அவர் கூறினார். இதையடுத்து கோபிச்செட்டிபாளையத்திற்கு சென்ற கமலுக்கு ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோபிச்செட்டிபாளையத்தை தொடர்ந்து சத்தியமங்கலம் சென்ற கமலுக்கு அங்கும் உற்சாக வரவேற்பு கிடைத்தது. இங்கும் கூட்டத்தின் நடுவே காரில் இருந்தபடி கமல்ஹாசன் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து டி.ஜி.புரம் பகுதியிலும் மக்களை அவரை சந்தித்தார். இதையடுத்து அந்தியூருக்கும் சென்றார். மேலும், ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடத்தை கமல்ஹாசன் பார்வையிட்டார்.

கமல்ஹாசன் சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த ஊர்களில் உள்ள குறைகளை கமல் கேட்டறிகிறார். கட்சி துவங்கிய நாளில், ராமநாதபுரம் மாவட்டத்தில் காரில் பேரணியாக சென்ற கமலுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் பிறந்த மாவட்டம் அது. ஆனால், இப்போது மேற்கு மண்டல மாவட்டங்களிலும் கமலுக்கு கிடைத்துள்ள உற்சாக வரவேற்பு பிற அரசியல் கட்சிகளை கிலிக்கு உள்ளாக்கியுள்ளது.