முக்கிய செய்திகள்

திருமுருகன் காந்தி மீண்டும் கைது!

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியைச் சிறையில் அடைக்க உத்தரவிடமுடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்ட து. ஆனால், அவரை சென்னை மாநகர போலீஸார் மீண்டும் கைதுசெய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவுக்குச் சென்றுவந்த திருமுருகன் காந்தியை லுக் அவுட் நோட்டீஸ் எனப்படும் விமானநிலையங்களில் தேடுதல் அறிவிக்கை தந்து, பெங்களூரு விமானநிலையத்தில் நேற்று அதிகாலை தடுத்துவைத்தனர். பின்னர் சென்னையிலிருந்து சென்ற சைபர் கிரைம் போலீஸ் பிரிவினர் அவரைக் கைதுசெய்து, இன்று காலை 8 மணி அளவில் சென்னைக்குக் கூட்டிவந்தனர்.

எழும்பூர் நீதிமன்றப் பகுதியிலுள்ள நீதிபதிகள் குடியிருப்பில் அவரை வைத்திருந்த போலீஸார், உரிய தகவல் தராமல் அலைக்கழிப்பதாக மே பதினேழு இயக்கத்தினர் கூறினர். பின்னர் அவரை சைதாப்பேட்டை நீதித்துறை 17-வது நடுவர்மன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். அவர் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவுசெய்த போலீஸார், தேசத்துரோக வழக்கிலும் சேர்த்திருந்தனர். அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, திருமுருகன் காந்தியை எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பிரிவினை வாதத்தை தூண்டும் அவரது பேச்சின் காணொலி அடிப்படையில் கைது செய்ததாக போலீசார் கூறினர். அது ஐநாவில் பேசிய காணொலி என்றால், அதற்காக எப்படி கைது செய்ய முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு விவகாரத்தை ஐநா வரை கொண்டு சென்றதால் தம்மீது ஏற்பட்ட ஆத்திரமே இந்த கைது நடவடிக்கைக்கு காரணம் என திருமுருகன் காந்தி தெரிவித்திருந்தார் .ஐநா. வில் பேசிய காணொலி அடிப்படையில்தான் திருமுருன் காந்தி மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதற்கு, ஐநாவில் பேசிய காணொலியை தாம் பதிவேற்றம் செய்யவில்லை என திருமுருகன் காந்தி பதிலளித்தார்.

வாதங்களைக் கேட்ட நடுவர் பிரகாஷ் திருமுருகன் காந்தியை சிறையிலடைக்க உத்தரவிட முடியாது என்றும் அவரிடம் 24 மணி நேரம் விசாரணை நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தார். மேலும், பெங்களூருவில் வந்திறங்கிய திருமுருகனை, கழிப்பறைக்குக் கூட செல்லவிடாமல் கைது செய்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து பழைய மாநகர போலீஸ் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்ட அவர், 6.50 மணியளவில் வெளியில் வந்தார். மே பதினேழு இயக்கத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென வந்த போலீஸார் அவரைக் கைது செய்ய முயன்றனர். கைது ஆணை இருக்கிறதா என திருமுருகனும் அவருடைய அமைப்பினரும் போலீஸாரிடம் கேட்டுக்கொண்டிருந்தபோதே, சில போலீஸார் அலேக்காகத் தூக்கிச்சென்று வேனில் போட்டனர். என்ன ஏதென அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள், அது நடந்துமுடிந்தது; உடனிருந்த வழக்குரைஞர்கள் விசாரித்ததற்குகூட முறையான பதில் தரவில்லை.

போலீஸ் வேனைப் பின் தொடர்ந்து சென்ற மே பதினேழு இயக்கத்தினர் மற்றும் பிற அமைப்பினர், ராயப்பேட்டைக்கு அவர் கொண்டுசெல்லப்படுவதை உறுதிசெய்தனர். ராயப்பேட்டை போலீஸ்நிலையத்தில் திருமுருகன் காந்தி வைக்கப்பட்டிருந்தார். பின்னர் மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

திருமுருகன் காந்தியை அடுத்து போலீசார் என்ன செய்யப் போகிறார்களோ என்ற குழப்பத்துடன் அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர்.

What will happen to Thirumurugan Gandhi?