பிரதமர் மோடி, மக்களின் கேள்விகளுக்கு தமது பேட்டியில் பதில் கூறவில்லை என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, அதற்கான பத்துக் கேள்விகளையும் முன்வைத்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் புதிய விஷயங்கள் எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஊடங்கள், பத்திரிக்கைகள் எழுப்பி வரும் எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அவரது பேட்டி என்பது ‘நான்’, ‘எனது’, ‘எனக்கு’, ‘எனது செயல்பாடு’ இவை மட்டும் தான் உள்ளன. தன்னைச் சுற்றி மட்டுமே அவர் அரசியல் செய்கிறார்.
அவரது பேட்டியில் தான் என்கிற ஆணவத்தை மட்டுமே அவர் வெளிப்படுத்துகிறார். நியாயமான கேள்விகளுக்கு, மக்கள் படும் அவதிகளுக்கு, பிரதமர் மோடியிடம் எந்த பதிலும் இல்லை. கீழ்க்கண்ட முக்கியமான பத்துக் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லவில்லை.
1. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவேன் என்றீர்களே… அது என்னவாயிற்று?
2. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றீர்களே… அப்படியானால் இதுவரை 9 கோடி பேருக்கு வேலை அளித்திருக்க வேண்டுமே.. இதுவரை 9 லட்சம் பேருக்கு மட்டுமாவது வேலை அளித்துள்ளீர்களா…?
3. விவசாயிகளின் லாபத்தை 50 சதவீதம் அதிகரிப்பதாக சொன்னீர்களே… வழக்கமான வருவாயாவது அவர்களுக்கு கிடைத்திருக்கிறதா…?
4. வர்த்தக நடைமுறைகளை எளிமைப்படுத்துவோம் என்றீர்களே… ஜிஎஸ்டி மூலம் அத்துறையையே ஒடுக்கி விட்டீர்களே…?
5. உங்களது பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்புப் பண முதலைகள் தங்களது கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொள்ள உதவியுள்ளது. அப்பாவி ஏழை, எளிய பெண்களின் சேமிப்பில் இருந்து ரூ 3.5 லட்சம் கோடியை சுரண்டி உள்ளீர்கள். பணமதிப்பிழப்பின் போது 120 பேர் பலியானார்கள். இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பது…?
6. ஜம்மு காஷ்மீரில் கடந்த 55 மாதங்களில் 428 ராணுவ வீரர்களும், 278 அப்பாவி பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 248 வீரர்களும் 378 பொதுமக்களும் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். உங்கள் ஆட்சியில் தேசிய பாதுகாப்பின் நிலை இதுதானா…?
7. ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெறவில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு விடத் தயங்குவதேன்?
8. கங்கையின் 48 பகுதிகளில் 38 இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு விட்டதாக உங்களது சுற்றுச்சூழல் வாரியம் சொல்கிறதே… ஆனால் கங்கை இன்னும் அழுக்காகத்தானே இருக்கிறது… 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதாக சொன்னீர்களே… ஒன்றாவது செய்து முடித்திருக்கிறீர்களா…?
9. தொழில் வளர்ச்சிக்கென்று ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா என பல திட்டங்களை அறிவித்தீர்கள். ஆனால், தொழில்துறை வளர்ச்சி 0.5 விழுக்காடுதான் என்கிறது உங்களது நிதி ஆயோக். இதுதான் தொழில் வளர்ச்சியா…?
10. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சரிந்தாலும், பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்… இதுதான் நீங்கள் தரும் நற்செய்தியா…?
இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஜ்வாலா தெரிவித்துள்ளார்.