நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 34 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், மத்திய அரசு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதில் உறுதியுடன் இருந்துக்கின்றது.
இந்நிலையில், “அரசாங்கத்தின் தோல்விகள்” காரணமாக நீட்-ஜேஇஇ தேர்வு எழுதுபவர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் கூடாது என காங்கிரசின் முன்னால் தலைவரான ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து ஒரு மித்த கருத்தினை உருவாக்க வேண்டும் என்றும் அவர் டிவிட் செய்துள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் இந்த நாட்டின் எதிர்காலம். நீங்கள் மாணவர்கள், நீங்கள் இந்த நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லப் போகிறீர்கள். இப்படி இருக்கையில், எனக்குப் புரியாதது என்னவென்றால், நீங்கள் ஏன் அரசாங்கத்தின் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும், ஏன் உங்கள் மீது மேலும் திணிக்கப்படும் வலிகளை பொறுத்துக்கொள்ள வேண்டும்?” என்றும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
ஜே.இ.இ செப்டம்பர் 1 முதல் 6 வரை திட்டமிடப்பட்டுள்ளது, நீட் தேர்வு செப்டம்பர் 13 அன்று நடைபெற உள்ளது. 11 மாநிலங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி மனு ஒன்றை கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மாணவர்கள் ஒரு வருடம் வீணடிக்கத் தயாரா? என கேட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
காங்கிரசும் பல்வேறு எதிர்க்கட்சிகளும் நாட்டின் சில பகுதிகளில் தொற்றுநோய் மற்றும் வெள்ளம் காரணமாக இரு தேர்வுகளையும் ஒத்திவைக்க வேண்டும் என்று கோரியுள்ளன.
ஆனால் சரியான முன்னெச்சரிக்கைகளுடன் கால அட்டவணையின்படி தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.