வால்மார்ட்டால் வீழ்த்தப்பட்ட ப்ளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால்: பாலியல் குற்றம் உட்பட பல புகார்களை சுமத்தி வெளியேற்றியது

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட்டின் இணை நிறுவனர் பின்னி பன்சால் திடீரென தமது பதவியில் இருந்து விலகி உள்ளார்.

ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77சதவீத பங்குகளை கடந்த மே மாதம் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்கியது. இதையடுத்து ப்ளிப்கார்ட்டின் இரண்டு நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் பதவி விலகினார். மற்றொரு இணை நிறுவனரான பின்னி பன்சால் பதவியில் நீடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது திடீரென தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது சர்வதேச வர்த்தக உலகில் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. எனினும், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குழுவில் தாம் நீடிப்பதாக ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பின்னி பன்சால் தெரிவித்துள்ளார்.

ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும் பங்குகளை வாங்கிய வால்மார்ட் நிறுவனம், நிர்வாகக் கட்டமைப்புகளை முழுமையாக தன்வசப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே பழைய நிறுவனர்களில் ஒருவரான பின்னி பன்சாலை வெளியேறச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப்ளிப்கார்ட் பங்குகளை வாங்கிய உடனே அதன் ஒரு நிறுவனர் பதவி விலகியதை அடுத்து, எஞ்சி இருந்த பின்னி பன்சாலின் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் ப்ளிப்கார்ட் பெண் ஊழியர் ஒருவருக்கு பின்னி பன்சால் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரை பின்னி பன்சால் மறுத்ததுடன், விசாரணையில் போதிய ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால், நிறுவனத்தின் முக்கியப் பிரச்சினைகளை கையாள்வதில் பின்னி பன்சால் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்ததாக வால்மார்ட் நிறுவனம் மற்றொரு குற்றச்சாட்டை கிளப்பி உள்ளது. இதை ஏற்பதாக கூறி தற்போது பின்னி பன்சால் நிறுவனர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.

ப்ளிப்கார்ட்டை முழுமையாக தன்வசப் படுத்தும் வால்மார்ட்டின் சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி இது என்றே பின்னி பன்சாலுடன் பணி புரிந்த பழைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.