செந்தில்பாலாஜியை கைது செய்யாதது ஏன்?: ராமதாஸ்..


முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் தேவைக்கும் அதிகமாக 38,000 பணியாளர்களை அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமித்ததாகவும், அதனால் தான் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டதாகவும் இப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். உள்ளூர் அரசியல் மோதலின் விளைவாக இக்குற்றச்சாற்று கூறப்பட்டாலும் அதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு நிர்வாகச் சீர்கேடுகளும், ஊழலும் தான் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறது. இதே குற்றச்சாற்றை போக்குவரத்துத் துறையின் முன்னாள் அமைச்சரும், எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜியும் முன்வைத்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமி பினாமி பெயர்களில் தனியார் பேருந்துகளை வாங்கி இயக்குவதும் கட்டணங்கள் உயர்த்தப்படுவதற்கு காரணம் என்றும் அவர் குற்றஞ்சாற்றியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர்,‘‘ முந்தைய ஆட்சியில் தேவைக்கு அதிகமாக 38,000 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை செந்தில் பாலாஜி நியமித்தார். முதலமைச்சரும், அமைச்சரும் ஊழல் பணத்தில் பேருந்துகளை வாங்கி இயக்குவதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார். செந்தில்பாலாஜி எத்தனை பேருந்துகளை வாங்கினார் என்ற புள்ளி விவரம் எங்களிடம் உள்ளது’’ என கூறியுள்ளார். முன்னாள், இந்நாள் போக்குவரத்துத் துறை அமைச்சர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் செய்த ஊழல்களும் அம்பலமாகியிருக்கின்றன.

முந்தைய ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமித்ததில் பெருமளவில் ஊழல்கள் நடந்ததாக அப்போதே பாட்டாளி மக்கள் கட்சி குற்றஞ்சாற்றியது. 17.02.2015 அன்று தமிழக ஆளுனரிடம் பா.ம.க அளித்த ஊழல் புகார் பட்டியலிலும் இதுபற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து கடந்த மாதம் 25&ஆம் தேதி நடந்த போராட்டத்தில் பங்கேற்றுப் பேசும் போதும் இதை நான் சுட்டிக்காட்டினேன். இப்போது அந்தக் குற்றச்சாற்றை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரே உறுதி செய்திருக்கிறார். இதை சாதாரணமாக விட்டுவிடக் கூடாது.

போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவைக்கும் அதிகமாக பணியாளர்களை நியமித்தது கண்டிப்பாக சேவை நோக்கம் கொண்டதாக இருக்க முடியாது; ஊழல் நோக்கம் கொண்டதாகத் தான் இருக்க முடியும். ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கையூட்டு வாங்கப் பட்டதாக குற்றச்சாற்றுகள் எழுந்தன. 38,000 பணியாளர்களிடம் சராசரியாக ரூ.4 லட்சம் வாங்கப்பட்டதாக வைத்துக் கொண்டால், ரூ.1520 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகத் தான் அர்த்தமாகும். அதுமட்டுமின்றி ஊழல் பணத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் பேருந்துகளை வாங்கி இயக்கியதாகவும், அதுகுறித்த பட்டியல் அரசிடம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கூறும் தகவல்கள் அனைத்தும் உண்மை எனும் பட்சத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எப்போதோ வழக்குப் பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? செந்தில்பாலாஜி ஊழல்வாதி எனத் தெரிந்தும் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் அவருக்காக இப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், தங்கமணி, கருப்பணன் ஆகியோர் தேர்தல் பணியாற்றியது ஏன்? என்பது பற்றி போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளிக்க வேண்டும்.

அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர் நியமன ஊழல் தொடர்பாக இனியும் தாமதிக்காமல் உடனே வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரிக்க வேண்டும். ஊழல் செய்து சுருட்டப்பட்ட பணத்தை அவரிடமிருந்து பறிமுதல் செய்ய வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் சீர்குலைவுக்கு இதுபோன்ற ஊழல்கள் தான் காரணம் என்பது உறுதியாகி விட்டதால், இழப்பைக் காரணம் காட்டி உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்களை அரசு திரும்பப் பெற வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை….

காங்., எம்.எல்.ஏ பக்கோடா வழங்கி ஆர்ப்பாட்டம்..

Recent Posts