
பிரபல ராம்ராஜ் காட்டன் நிறுவனத்திற்கு எதிராக ட்விட்டரில் #Tamils_Reject_Ramraj_Products என்ற ஹெஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
ஏன்… தமிழ்நாட்டில் பலரும் ராம்ராஜ் காட்டன் தயாரிப்பு ஆடை, வேட்டிகளை விரும்பி வாங்கி வரும் நிலையில் திடீரென இந்த எதிர்ப்பு எப்படி ஏற்பட்டது?
அண்மையில் தங்கள் நிறுவனத்தின் முக்கிய உயர் பதவிகளுக்கு ஆள் எடுக்கப்படுவதாக அந்நிறுவனம் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளது. அதில், தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்புக்கு அதுவே காரணம். தமிழ்நாட்டில் நிறுவனத்தை நடத்திக் கொண்டு, முக்கியப் பதவிகளில் தெலுங்கர்களுக்கு முன்னுரிமையா… என்று தமிழ்நாட்டு நெட்டிசன்கள் கொந்தளிக்கத் தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாட்டு வேலைகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை என்ற முழக்கம் வலுத்து வரும் நிலையில், ராம்ராஜ் காட்டன் நிறுவனம் இத்தகைய விளம்பரத்தை வெளியிட்டு, தமிழர்களிடம் வசமாகச் சிக்கிக் கொண்டது. முன்னைப் போல, என்ன செய்தாலும் தமிழர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள், தாங்கிக் கொள்வார்கள் என இனி எந்த நிறுவனமும் எதிர்பார்க்க முடியாது என்பதையே, இந்த திடீர் எதிர்ப்பு வெளிப்படுத்துகிறது.