பட்டாசு வெடிச்சத்தங்கள் காதைப் பிளக்கின்றன.
நாடுமுழுவதும், பாஜவினரும் இந்துத்துவா அமைப்புகளும் பொங்கி வரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை இடங்களை மக்கள் அளித்திருப்பதே அவர்களது இந்தக் கொண்டாட்டத்துக்குக் காரணம்.
அவர்கள் கொண்டாடும் இந்த வெற்றி உண்மையானதுதானா?
இது ஜனநாயகத்துக்குக் கிடைத்திருக்கும் உண்மையான வெற்றியா?
நான் ஏற்கனவே எழுதியதைப் போல, அறுதிப் பெரும்பான்மை என்பது அந்த அரசியல் கட்சிக்கும், ஆட்சி அதிகாரத்தில் அமரப்போகிறவர்களுக்கும் வேண்டுமானால் வசதியானதாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கலாம். ஜனநாயக அமைப்பை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும் நிச்சயமாக இதுபோன்ற வெற்றிகள் உதவப்போவதில்லை.
இது பாஜகவுக்கும் ,நரேந்திர மோடிக்கும் கிடைத்த வெற்றியாக அக்கட்சியினரும், அவரது ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் நிச்சயமாக இல்லை.
இது, மூன்றாமுலக நாடுகளின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக விஸ்வரூபமெடுத்து, இங்கங்கெனாதபடி எங்கும் வியாபிக்கத் தொடங்கியிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைத்த வெற்றி. வரலாற்றில் இதுவரை சந்தித்திராத மிக மோசமான தோல்வியை இந்திய ஜனநாயகம் சந்தித்திருக்கிறது.
மோடி என்ற புதிய தயாரிப்பை மிகக் கச்சதிதமாக தங்களது விளம்பர யுக்தியைப் பயன்படுத்தி பிரபலப் படுத்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிகத் தந்திரத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றிதான் இது.
இந்திய மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்துச் சொல்கிறார் என்றால் அப்போதே நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?
அமெரிக்கா என்பது ஜனநாயக அரசியல் வடிவத்தின் பிரதிநிதி அல்ல. மூன்றாம் உலக கார்ப்பரேட் ஆக்டோபஸ் நிறுவனங்களின் அப்பட்டமான பிரதிநிதி. அந்த நாட்டின் அதிபர் வாழ்த்துச் சொல்கிறார் என்றால் என்ன பொருள்?
கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டம் வெற்றி பெறப்போகிறது என்பதுதானே!
இப்போது அது நடந்தும் விட்டது.
ஏன் மன்மோகன்சிங்கும், காங்கிரசும் கார்ப்பரேட்டுக்குப் பிடிக்காதவர்களா என்ன? ஏன் மற்றவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.
பத்தாண்டுகளாக பதவியில் இருக்கும் காங்கிரஸ் மீது ஊழல் கறை படியத் தொடங்கி விட்டது. காங்கிரஸ் மீதான இந்தக் கோபம் பன்னாட்டு நிறுவனங்கள் மீது நேரடியாகத் திரும்புவதற்கு நேரமாகாது. அப்படியானால் ஏஜன்டை, அதாவது ஆட்சியாளர்களை மாற்ற வேண்டும். குஜராத்தில் அதற்கான முன்னோட்டம் நடைபெற்றது. “யாவாரம்” சூடு பிடிக்கவே, அடடே இவரையே நமது இந்தியா முழுமைக்குமான ஏஜென்டாக ஆக்கிவிடலாமே என கார்ப்பரேட் நிறுவனங்கள் முடிவெடுத்து விட்டன.
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவா பரிவாரங்களுக்கு தங்களது மறைமுக வேலைத்திட்டங்களை நிறைவேற்ற ஆட்சி அதிகாரம் வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கோ தங்களது வியாபாரத்தை விரிவு படுத்த உதவும் புதிய முகமுள்ள ஏஜெண்ட் வேண்டும்.
மோடியின் முகம் அதற்குப் பரிசீலிக்கப்பட்டது. மேக்கப் டெஸ்டில் கார்ப்பரேட் ஏஜன்டாக இருப்பதற்கான ஏக களையும் அவர் முகத்தில் சொட்டுவது தெரிந்தது. விளம்பர வியூகங்கள் வகுக்கப்பட்டன. வியாபாரமும் களைகட்டியது. பங்குச் சந்தைகள் அவ்வப்போது புதிய உச்சத்தை எட்டியது மோடி என்ற முகவரின் வர்த்தக ரீதியான உத்தரவாதத்தை மேலும் உறுதிப்படுத்தியது. கார்ப்பரேட் நிறுவனங்கள் “ஆகா நமக்கான தேவதூதனைக் கண்டு பிடித்து விட்டோம்” என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டன. மோடியின் முகத்தைச் சந்தைப் படுத்தும் காரியங்கள் கச்சிதமாக நடந்தேறின. இப்போது இந்தியச் சந்தையில் தங்களுக்கான இடம் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது.
“தேர்தல் திருவிழா” என்று, ஒரு ஜனநாயக நிகழ்வின் முக்கியத் தருணத்தை எந்த வெட்கமுமின்றி நொடிக்கொருதரம் கூவிக்கூவி நமது ஊடகங்கள் விற்றனவே… அந்த ஜனநாயகத் திருவிழாதான் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சந்தை உத்தரவாதத்தை வழங்குவதற்கான அரசியல் சாசன அடிப்படையிலான ஒப்பந்தம். அது எந்தத் தடையுமில்லாமல் இந்தியாவில் நிறேவேறி விட்டது.
கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்தியா என்பது ஒரு மிகப்பெரிய சந்தையே தவிர, பன்முகச் சமூகமும், பல்வேறு தேசிய இனங்களும் வாழும் ஒரு நாடல்ல. அவர்களது அமைதி குறித்தோ, எதிர்காலம் குறித்தோ அவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்கப் போவதில்லை.
அந்த வகையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியா என்ற சந்தையை மிக லாவகமாக வளைத்துப் போட்டுவிட்டன.
இனி, இயற்கை விவசாயம், தற்சார்புத் தன்மை, மரபணு மாற்றப் பயிர்கள் என எதையுமே நாம் எதிர்த்துப் பேசத் தேவையுமில்லை. பேசினாலும் பயன் இருக்காது.
அந்த வகையில், மிகப் பெரிய ஜனநாயக நாடு என அவ்வப்போது அரசியல் வாதிகளுடன் சேர்ந்து நாமும் தம்பட்டமடித்துக் கொள்வோமே, அந்த மிகப்பெரிய ஜனநாயக நாட்டை, நமது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் எந்த மனத்தடையுமின்றி இருகரங்களாலும் தூக்கி கார்ப்பரேட் நிறுவனங்களின் காலடியில் வைத்து வணங்கி நிற்கிறார்கள். மக்களவைத் தேர்தல் என்பது அந்தக் காட்சியின் ஓர் அங்கம்தான். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பாயிற்றே.. நாமும் சேர்ந்து வணங்க வேண்டியதுதான்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையம் திடீரென 144 தடை உத்தரவைப் போட்டதற்கான காரணம் இப்போது அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறோம்.
அதிமுக தனது பணப்பட்டுவாடாவை மிகக்கச்சிதமாக சரியான தருணத்தில் செய்து முடித்து விட்டது. என்ன ஒன்று வெறும் 200 ரூபாய்க்கு தமிழக மக்கள் இத்தனை உத்வேகத்தோடு தங்களது வாக்குகளை விற்பனை செய்திருக்கிறார்ளே என்பதை நினைக்கும் போதுதான் வேதனையாக இருக்கிறது.
ஆக, 200 ஆண்டுகள் போராடிப் பெற்று, 67 ஆண்டுகளாக அதைவிடக் கடுமையான போராட்டங்களோடு கட்டிக்காத்த இந்திய ஜனநாயகம் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற வில்லை என்பதுதான் நிதர்சனம்.
மொத்தத்தில் இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைத்த வெற்றி என்பதால். இதனைக் கொண்டாட வேண்டியதும் அவர்களே!
இதன் பின்னணியில், பன்முகச் சமூகம் வாழ்வதற்கான அமைதியான நாடாக இந்தியா நீடிக்குமா என்ற என்ற மிகப்பெரிய கேள்வி நமக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. காலம் கூறும் பதிலுக்காகக் காத்திருப்போம். வெறென்ன செய்ய?
செம்பரிதி