அணு உலைகள் இல்லா தமிழகம் : சுற்றுச்சூழலை முன்னிறுத்தி மதிமுக தேர்தல் வாக்குறுதி

அணு உலைகள் இல்லா தமிழகம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு என சுற்றுச்சூழலை முன்னிறுத்தி மதிமுக தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது.

மதிமுக தேர்தல் அறிக்கையை இன்று (புதன்கிழமை) கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். மதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்:

மதச்சார்பின்மை

இந்துத்துவா பாசிச சனாதன சக்திகளின் பிடியில் இருந்து நாட்டை மீட்கும் மாபெரும் வரலாற்றுக் கடமை ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு இருக்கின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கும், நாட்டின் மதச்சார்பற்ற தத்துவத்தை நிலைநிறுத்தவும் மதிமுக அரசியல் களத்தில் முனைந்து செயல் ஆற்றவும், நாடாளுமன்றத்திலும் தீவிர பணியாற்றவும் உறுதி மேற்கொள்கின்றது.

சமூக நீதி

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை மதிமுக வலியுறுத்தும்.

பாஜக அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரான முயற்சிகளை முறியடிக்க மதிமுக ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயலாற்றும்.

69 விழுக்காடு அளிக்கும் தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும், பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 77 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளிப்பது கூடாது என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்தும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு, பட்டியல் இனத்தவர்களுக்கான இடஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மதிமுக குரல் கொடுக்கும்.

மாநில சுயாட்சி

இந்திய அரசியல் சாசனம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

நடைமுறையில் நிதி ஆயோக்கின் செயல்பாடுகள் மாநில உரிமைகளுக்கு எதிராக இருப்பதால், ‘நிதி ஆயோக்’ அமைப்பை கலைக்க வேண்டும் என்பதை மதிமுக வலியுறுத்தும்.

மாநிலங்களின் அதிகார வரம்பில் தலையிடாமல், நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து மாநிலங்களுடன் கருத்து ஒற்றுமையுடன் செயல்படத் தகுந்த ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

மத்திய-மாநில உறவுகள் சீரமைப்புக்கும், வலிமையான கூட்டாட்சி முறைக்கும், மாநில சுயாட்சி நிலைபெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மதிமுக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும்.

ஆளுநர்களைக் கொண்டு மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடும் மத்திய அரசின் எதேச்சாதிகாரத்திற்கு முடிவு கட்டுவோம்.

நதிநீர் உரிமைகள்

காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி அமைத்து, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநட்ட மதிமுக நாடாளுமன்றத்தில் வலிமையாகக் குரல் எழுப்பும்.

மேகேதாட்டு தடுப்பு அணை கூடாது

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணைக் கட்டும் முயற்சியை முறியடிக்க மதிமுக முனைப்புடன் செயலாற்றும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டங்களைக் கைவிட்டு, காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மதிமுக குரல் கொடுக்கும்.

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட மத்திய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் ஆய்வு அனுமதியை உடனடியாக ரத்து செய்ய மதிமுக வழிவகை செய்யும்.

பாலாறு

தமிழக அரசு ஆந்திர மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்து, ஹிந்திரி நீவா சிரவண சுஜாலா திட்டத்தில் இருந்து தமிழகத்தில் பாலாற்றில் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தால், வட தமிழ்நாட்டில், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தென்சென்னை மாவட்ட மக்களுக்குப் பெரிதும் பயன் அளிக்கும். எனவே, தமிழக அரசு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மதிமுக போராடும்.

பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட பிற நீர்த் திட்டங்கள்

பாண்டியாறு-புன்னம்புழா மற்றும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டங்களைச் செயல்படுத்திட வலியுறுத்தப்படும்.

தென்பெண்ணை, பாலாறு, ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு ஆகியவைகளின் உபரி நீரைத் தடுத்தும், கடலில் கலந்து நீர் பாழாகிப் போவதைத் தடுத்தும், தடுப்பு அணைகள், கதவு அணைகள் அமைத்திடவும், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு, சட்டத்திற்கு எதிராகத் தடுப்பு அணைகளைக் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தவும், மதிமுக குரல் கொடுக்கும்.

செண்பகவல்லி அணையைச் சீரமைக்க, கேரள மாநில அரசை வலியுறுத்துவோம்.

நதிநீர் இணைப்பு

தீபகற்ப நதிகளை இணைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

அணைப் பாதுகாப்பு மசோதா

ஜூன் 26, 2018-இல் தமிழ்நாடுசட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று அணைப் பாதுகாப்பு மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்துவோம்.

நிரந்தரத் தீர்ப்பாயம்

காவிரிப் பிரச்சினைக்கு நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைச் செயற்படுத்துவது ஒன்றுதான் மத்திய அரசின் பொறுப்பும் கடமையும் என்பதை உணர வேண்டும். நிரந்தரத் தீர்ப்பாயம் அமைத்திட நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மதிமுக வலியுறுத்தும்.

நதிநீர்ப் படுகை மேலாண்மைத் திட்டம்

மத்திய அரசு, நதிநீர்ப் படுகை மேலாண்மைச் சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முடிவை எதிர்த்து மதிமுக போரடும்.

வேளாண்மை

தொடர் வறட்சி, விளைச்சல் இழப்பு, விளைபொருட்களின் விலை வீழ்ச்சி, அதிகரிக்கும் உற்பத்திச் செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அனைத்து வங்கிகளிலும் உள்ள வேளாண் கடன்களை ரத்து செய்யவும்,

தேசிய விவசாய ஆணையத்தின் பரிந்துரையான உற்பத்திச் செலவு c +50 % விதிமுறையின்படி வேளாண் பொருட்களுக்கு விலை உறுதி செய்யவும், தேசிய வேளாண் பயிர்க் காப்பீடு திட்டத்திற்குத் தனி நபர், தனி நிலம் பாதிப்புக்கு இழப்பீடு கிடைக்கும் வரையில் விதிகளை மாற்றம் செய்யவும்,

தடையில்லா மின்சாரம் வேளாண்மைக்குக் கிடைக்கவும், வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தைத் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையமாக மாற்றி, அதில் 50ரூ விவசாயிகள் இடம் பெறவும், உணவு பதப்படுத்தும் மற்றும் மதிப்புக் கூட்டும் வேளாண் தொழிற்சாலைகளை அமைக்கவும்,

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு, அர்ஜூன்சென் குப்தா குழு, விஜய் கேல்கர் குழு, ரங்கராஜன் குழு, வைத்தியநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்றித் தரவும், வேளாண்மைத் தொழில் செழிக்கவும் மதிமுக பணியாற்றும்.

வேளாண் நிதிநிலை அறிக்கை

விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் விதத்தில் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துவதற்காக, விவசாயத்திற்காக ‘தனி நிதி நிலை அறிக்கை’ வெளியிட வலியுறுத்துவோம்.

பருவமழை பொய்த்துப் போவதாலும், நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்குக் கீழே சென்று விட்டதாலும், பாசனத்திற்கு நீர் இன்றித் தவிக்கும் நிலை அதிகரித்து வருகின்றது. எனவே, நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவோம்.

விவசாயிகளுக்கு நீர் மேலாண்மைப் பயிற்சித் திட்டங்கள் முறைப்படுத்தப்படும். வெள்ளம் பெருக்கெடுத்து ஒடும் காலங்களில், மழைநீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தடுத்து, நீர்பாசனத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்திட, மழைநீர் சேகரிப்பு தடுப்பு அணைகள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரப்படும்.

வேளாண் கடன் தள்ளுபடி

விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கவும், வங்கிகள் கடன் உதவி அளித்திடும் வழிமுறைகளை எளிமைப்படுத்தவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்யவும் வலியுறுத்துவோம்.

தற்போது தேசிய வங்கிகள் வழங்கும் கடன் 9 விழுக்காடு மட்டுமே இருக்கின்றது. இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, விவசாயத்திற்கு 18 விழுக்காடு நிதி வழங்க வலியுறுத்துவோம்.

பயிர்க் காப்பீடு

பயிர்க் காப்பீட்டிற்கான பிரிமியம் தொகையை, மத்திய, மாநில அரசுகளே முழுமையாக ஏற்கவும், இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, பயிர்க் காப்பீட்டுத் தொகையை, காப்பீட்டுக் கழகங்கள் உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுப்போம்.

விளைபொருள்களுக்கு உரிய விலை

மஞ்சள், தேயிலை, கொப்பரைத் தேங்காய் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு, விவசாயிகளின் கருத்தை அறிந்து, சீரான விலை கிடைக்க வலியுறுத்துவோம்.

அழுகும் தன்மை கொண்ட விளைபொருட்களை, சேமிப்புக் கிடங்குகளில் சேகரித்துப் பாதுகாத்து ஏற்றுமதி செய்திட, கட்டமைப்பு வசதிகள் கொண்ட வேளாண் ஏற்றுமதி மண்டலங்களை அமைக்க நடவடிக்கை எடுப்போம்.

கரும்பு விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, உபரி கரும்பில் இருந்து எத்தனால் தயாரிக்க, மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்க ஆவன செய்வோம்.

விவசாய மானியங்களை அதிகரிக்கவும், இரசாயன உரங்கள், யூரியா, பூச்சிக்கொல்லி மருந்துகள் விலையைக் கட்டுப்படுத்தவும், இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப் படுத்தவும் மதிமுக பாடுபடும்.

வேளாண் பொருட்கள் இறக்குமதி

உள்நாட்டில் விளைவிக்கப்படும் வேளாண் பொருட்களை, அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால், கட்டுப்படியான விலை கிடைக்காமல் விவசாயிகள் அல்லல்படுகின்றனர். அத்தகைய விளை பொருட்கள் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் கொண்டு வரவும், இறக்குமதி வரி விதிக்கவும் வலியுறுத்துவோம்.

எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம்

தமிழக அரசு விவசாயிகளின் கொந்தளிப்பைப் புரிந்து கொண்டு, ஏழு மாவட்டங்களில் விளைநிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் ‘கெயில்’ நிறுவனத்தின் திட்டத்திற்குத் துணை போகாமல், தேசிய நெடுஞ்சாலை வழியாக எரிவாயு கொண்டு செல்ல மதிமுக நடவடிக்கை மேற்கொள்ளும்.

விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் கூடாது

விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதைக் கைவிட்டு, சாலை ஓரமாகவோ அல்லது கேரள மாநிலத்தில் உள்ளதைப் போல் பூமிக்கு அடியில் புதைவடக் கம்பி வழியாகக் கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க மதிமுக போராடும்.

கஜா புயல் பாதிப்பு

கஜா புயல் பாதிப்புகளிலிருந்து காவிரி டெல்டா மக்களைக் காப்பாற்ற மத்திய பாஜக அரசு 25 ஆயிரம் கோடி ரூபாய் உதவித்தொகை அளிக்க வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில், விவசாயப் பணிகளையும் உள்ளடக்கி, விவசாயத்தில் ஏற்பட்டு உள்ள ஆள் பற்றாக்குறையைப் போக்கவும், விவசாய உற்பத்தி வளர்ச்சிக்கும் பயனுள்ள வகையில் மாற்றி அமைத்திடவும், வேலை நாட்களை 100 இல் இருந்து 200 நாட்களாக உயர்த்திடவும், பயனாளிகளுக்கான ஊதியம் முறைப்படி கிடைக்கவும் வலியுறுத்துவோம்.

தமிழ் ஆட்சி மொழி

இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழி ஆக்க வலியுறுத்துவோம். அதுவரையில் ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழியாகத் தொடரவும், இதற்கான நடவடிக்கைகளைச் செய்திட அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதையும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்.

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் தாய் மொழியாகிய இந்தி மொழியை, ஆட்சி மொழி ஆக்கி ஆதிக்கம் செலுத்த முயலும் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்போம்.

செம்மொழி நிறுவனம்

செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் சிறப்பாகச் செயல்பட, மதிமுக பெரிதும் பாடுபடும் என உறுதி அளிக்கின்றது.

நீதிமன்றத்தில் தமிழ்

சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை உயர் நீதிமன்றக் கிளையிலும் தமிழ் மொழியை அலுவல் மொழியாக வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துவோம்.

கல்வி

கல்வித்துறையை மீண்டும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவோம்.

கட்டாய இலவசக் கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், தொடக்கக் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காட்டைக் கல்விக்காக ஒதுக்கீடு செய்வதற்கும் குரல் கொடுப்போம்.

போதிய அளவு மாணவர்கள் வருவது இல்லை என்று காரணம் சொல்லி, அரசுப் பள்ளிகள், உள்ளாட்சி நிர்வாகம் நடத்தும் பள்ளிகளை மூடுவதைத் தடுத்து நிறுத்துவோம். மாணவர்கள் கல்வி இடைநிற்றலைக் களையப் பாடுபடுவோம்.

கடும் எதிர்ப்பு காரணமாகக் கைவிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை-2016 இன் பரிந்துரையை, நடைமுறைக்குக் கொண்டுவரும் தந்திர முயற்சியைத் தடுத்து நிறுத்துவோம்.

உயர்கல்வி

மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில், இளநிலை பட்டப் படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் அமைப்பதற்கு முன் முயற்சி எடுப்போம்.

இந்தி, சமஸ்கிருதம் மொழித் திணிப்பை எதிர்ப்போம்

நாட்டின் பன்முகத் தன்மையைத் தகர்க்க நினைக்கும் பாஜக அரசின் இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பு முயற்சிகளைத் தகர்க்கும் முயற்சிகளில் மதிமுக ஈடுபடும்.

பிற்போக்குக் கல்வித் திட்டத்தை செயல்படுத்த ஒருபோதும் மறுமலர்ச்சி தி.மு.க. அனுமதிக்காது.

பொருளாதாரம்

கடந்த 4 ஆண்டு காலமாகப் பொருளாதாரத் தேக்க நிலை, தொழில்துறை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு, பொட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றம், வேலைவாய்ப்புக்கு வழி செய்யாத திட்டங்கள், பன்னாட்டு, உள்நாட்டுப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான செயல்பாடுகள் ஆகியவற்றால் நாட்டைப் பாழ்படுத்தி வரும் பாஜக அரசை வீழ்த்த மக்கள் ஆயத்தமாக வேண்டுமென என மதிமுக அறைகூவல் விடுக்கின்றது.

சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தம் தேவை (ஜிஎஸ்டி)

ஜவுளித் தொழிலில் இருந்து சிறு, குறு நிறுவனங்களை நடத்துவோர் வெளியேறும் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் ஜவுளித் தொழில் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண மதிமுக முன்முயற்சி எடுக்கும்.

கோவை சிறுதொழில் துறை

கோவை மாவட்டத்தில் உள்ள 30 ஆயிரம் சிறு தொழிற்கூடங்களில் பணி ஆணை கிடைக்காமல் மூட வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு, பணி ஆணைகள் மீதான 18 ரூ ஜிஎஸ்டியை நீக்குவதற்கு மதிமுக முயற்சி மேற்கொள்ளும்.

தொழில்துறை

தொழில்துறை வீழ்ச்சி குறித்து அதிமுக, அரசு அக்கறை இல்லாமல் அலட்சியம் காட்டுவது தமிழகத்தின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்டுவதுடன், தொழில்துறை சீரமைப்புக்குத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள மதிமுக நடவடிக்கை மேற்கொள்ளும்.

தொழிலாளர் நலன்

நிரந்தரத் தன்மை உள்ள பணிகள் அனைத்தையும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் சொற்ப ஊதியம் வழங்கி நிறைவேற்றி வரும் சூழலில், வேலை இருக்கும்போது வர வேண்டும்; இல்லையெனில் வெளியேற வேண்டும் என்று தினக்கூலிகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களை மாற்றும் வேலை வரம்பு ஒப்பந்தத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மதிமுக குரல் கொடுக்கும்.

சிறு மற்றும் குறுந்தொழில்கள் பாதுகாப்பு

தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களோடு, உள்நாட்டு சிறு-குறுந்தொழில்களின் பாதுகாப்பிற்கும் உத்திரவாதம் அளிக்கும் விதத்தில் தொழிற் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.

விசைத்தறி, கைத்தறி நெசவுத் தொழில்

கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட 22 ரகங்களை நீடிக்க வகை செய்தல், பஞ்சு, சிட்டா நூல், தட்டுப்பாட்டைப் போக்குதல், கைத்தறி பட்டு நெசவுத் தொழிலுக்குத் தேவையான வெள்ளி, தங்க சரிகை விலை உயர்வைக் கட்டுப்படுத்துதல் மற்றும் துணிகளைச் சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி போன்றவற்றை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

தீப்பெட்டி, பட்டாசுத் தொழில்

பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசை அணுகி, இத்தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்துவோம்.

பொதுத்துறை

தொழிலாளர் நலச் சட்டங்களின்படி, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யவும், ஒப்பந்தத் தொழிலாளர் முறையையே அடியோடு ஒழிக்கவும் குரல் கொடுப்போம்.

தகவல் தொழில்நுட்பத் துறை

பணிப் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் எதுவும் இல்லாமல், ஐடி பணியாளர்கள் நவீன கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதைத் தடுக்கக் குரல் கொடுப்போம்.

பன்னாட்டு நிறுவனங்கள்

பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டப் பாடுபடுவோம்.

வருங்கால வைப்பு நிதி

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்படுவதைத் தடுத்து, 12 விழுக்காடு வட்டி கிடைத்திட வலியுறுத்துவோம்.

தொலைத் தொடர்புத் துறை

அமையப் போகின்ற மத்திய அரசுக்கு மதிமுக போதிய அழுத்தம் தந்து, பிஎஸ்என்எல் உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும்.

தமிழக ரயில்வே திட்டங்கள்

கிடப்பில் உள்ள அனைத்துத் திட்டங்களையும் விரைவு படுத்தி, தமிழகம் பயன்பெற மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்றுத் தருவோம்.

1. திண்டுக்கல்-பெரியகுளம்-தேனி-குமுளி

2. திருப்பெரும்புதூர்-ஆவடி

3. காரைக்கால்-சீர்காழி

4. மதுரை-மேலூர்-திருப்பத்தூர்-காரைக்குடி

5. கன்னியாகுமரி-இராமேஸ்வரம் கிழக்குக் கடற்கரையை ஒட்டி புதிய இரயில் பாதைகள் அமைக்கக் குரல் கொடுப்போம்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுத் தாமதமாகி வருகின்ற திட்டங்களான,

1. திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி

2. மதுரை-போடிநாயக்கனூர்

3. பழனி-உடுமலைப்பேட்டை-பொள்ளாச்சி-பாலக்காடு

பணிகள் துவக்கப்படாத இரயில் பாதைகளான

1. திண்டிவனம்-நகரி

2. மாமல்லபுரம்-கடலூர்-புதுச்சேரி

3. மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி

போன்ற திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கிழக்குக் கடற்கரையை ஒட்டி, சென்னை-கன்னியாகுமரியை இணைக்க ‘கிழக்குக் கடற்கரை ரயில்வே பாதை’ அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

நெல்லை ரயில்வே கோட்டம்

திருவனந்தபுரம் இரயில்வே கோட்டத்தில் இருந்து பிரித்து, திருநெல்வேலியை மையமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைக்க வலியுறுத்துவோம்.

மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி மற்றும் மணியாச்சி-திருநெல்வேலி- நாகர்கோவில்-குமரி இரட்டை ரயில் பாதையை விரைவாக அமைத்திடக் குரல் கொடுப்போம்.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களிலும், தொடரித்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிலும் சமூக நீதியைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த படித்த இளைஞர்களுக்கு 90 விழுக்காடு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தும்.

வேலைவாய்ப்பு

வேலை வாய்ப்புக்களை உருவாக்காமல், வெற்று ஆரவார அறிவிப்புக்களை வெளியிடும் மோடி அரசு, அதற்கு துணை போகும் எடப்பாடி பழனிசாமி அரசு இரண்டும் ஆட்சி பீடத்திலிருந்து அகற்ற மதிமுக மக்கள் சக்தியைத் திரட்டும்.

சேதுக் கால்வாய்த் திட்டம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய ஆய்வுகள் நடத்தி, மீனவர்களின் அச்சம் தீர்க்கப்பட்டு, அவர்களது இசைவைப் பெற்று, மாற்று வழித்தடத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

வணிகர் நலன்

சில்லரை வணிகத்தில் அயல்நாட்டு முதலீடு

சிறு-குறு வணிகர்களின் நலனைப் பாதுகாக்கும் விதத்தில் புதிய சட்டத்தை ஏற்படுத்த மறுமலர்ச்சி தி.மு.க. பாடுபடும்.

இணையதள வணிகத்திற்குத் தடை

அயல் நாடுகளின் முதலீட்டை அனுமதிக்காமல் கட்டமைப்புத்துறைகளில் அரசின் முதலீடுகளைப் பெருக்கவும், தொழில்துறையிலும், நிதித்துறையிலும், பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்தவும் பங்குச்சந்தையில் மட்டும் கவனம் செலுத்தாமல், உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவிக்கவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, விலை ஏற்றத்தைத் தடுக்கவும் உரிய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் 22 ஆண்டு காலம் தொய்வின்றி தொடர்ந்து போராடிய மதிமுக ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க விடாமல் செய்து தமிழ் மக்களை காக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபடும் என உறுதி அளிக்கிறது.

நியூட்ரினோ

தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு முயன்றால், மதிமுக மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கடுமையாக எதிர்க்கும்.

சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியில் உள்ள நீதிமன்றத் தடைகளை தகர்த்து, தொடர்ந்து சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு, விவசாயத்தையும் சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் பணியில் மதிமுக கடமை ஆற்றும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இயற்கை வளங்களைக் காப்பாற்றவும், சுற்றுச்சூழல் மாசு அடைந்து மக்கள் நல்வாழ்வு சீர்கெட்டு வருவதைத் தடுக்கவும் தொடர்ந்து குரல் கொடுப்போம். கேரளாவில் இருந்து மின்னணுக் கழிவுகளும், குப்பைக் கழிவுகளும் தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்து கொட்டி, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பூர் சாயக்கழிவு நீர் மறுசுழற்சித் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு மானியங்கள் கிடைக்க ஆவன செய்யப்படும்.

குப்பைகள் மறு சுழற்றி, திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை விரிவுபடுத்த வலியுறுத்துவோம்.

காலநிலை மாற்றங்கள்

கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகம் நான்கு புயல்களைச் சந்தித்து உள்ளது. அதைத் தவிர, சென்னை வெள்ளமும் பல்வேறு இன்னல்களை மக்களுக்கு அளித்துள்ளது. நடைபெற்று வரும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான விஷயங்களைக் கண்காணிக்கவும், அவற்றை எதிர் கொள்ளவும், மேற்கு உலக நாடுகளில் உள்ளது போன்ற இந்தியாவிற்கான காலநிலைச் சட்டம் இயற்ற வலியுறுத்துவோம். அதன்படி, அனைத்துத் துறைகளும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள வாய்ப்பாக அமையும்.

மணல் கொள்ளை

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் தங்கு தடை இல்லாமல் மணல் கொள்ளை நடப்பதால், இயற்கை வளம் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றது. மழைநீர் சேமிக்கப்படாமல், நிலத்தடி நீர்வளமும் குன்றி விட்டது. தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம், மணல் அள்ளுவதற்கு விதித்து உள்ள தடை உத்தரவைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்திட வலியுறுத்துவோம்.

கூடங்குளம் அணு உலை

கூடங்குளம் அணுஉலைகள் இயங்குவதை நிறுத்தவும், கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தை முழுமையாகக் கைவிடவும், இதனை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும், அணு உலைகள் இல்லாத மாநிலமாகத் தமிழகம் திகழவும் பாடுபடுவோம்.

மக்கள் நல்வாழ்வு

தேசிய சுகாதாரக் கொள்கை 2017-ஐ திரும்பப் பெற வேண்டும்; பொது சுகாதாரத் துறை அரசுக் கட்டுப்பாட்டிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தும்.

தேசிய மருத்துவ ஆணையம்

மாநில உரிமைகளை நசுக்குவதற்கு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணைய அவசரச் சட்டத்தையும், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவையும் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக குரல் கொடுக்கும்.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்
பழங்குடியினர் மற்றும் மகளிர் நலன்

பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள இட ஒதுக்கீடு குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்துவோம்.

மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கின்ற பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவிகித இடங்களை அளிக்கும் சட்டம் இன்னமும் கிடப்பிலேயே இருக்கின்றது. மகளிருக்கு சமூக நீதி கிடைக்க வலியுறுத்துவோம்.

சிறுபான்மையினர் நலன்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், தலித் கிறிஸ்தவர்களுக்கும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது சிவில் சட்டம் கூடாது

முத்தலாக் தடை சட்டமுன்வடிவை ஆய்வு செய்திட நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு மத்திய அரசு அனுப்பிட வேண்டும்.

மீனவர் நலன்

ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்குத் தகுந்த மறுவாழ்வுத் திட்டங்களைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள தவறியது.

இலங்கை அரசின் கடற்தொழில் சட்டத் திருத்தம்

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் உரிமையைப் பாதுகாக்க மதிமுக பாடுபடும்.

கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை -2018

மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணையைத் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் நிராகரிக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தும்.

மாற்றுத் திறனாளிகள் நலன்

மாற்றுத் திறனாளிகளின் (சைகை) மொழிக்கு ஏற்பு அளிக்க வலியுறுத்துவோம்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்துவோம்.

சேலம் – சென்னை எட்டுவழி பசுமைச் சாலை

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்தைத் தமிழக அரசு வலிந்து செயல்படுத்த முனைவதைத் தடுக்கின்ற நடவடிக்கையில் மதிமுக ஈடுபடும்.

என்எல்சி 3 ஆவது சுரங்கம்

மூன்றாவது சுரங்கம் அமைத்து 11.50 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க 12,125 ஏக்கர் விளைநிலங்களைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள என்எல்சி நிறுவனத்துக்குத் தமிழக அரசு துணை போகக் கூடாது. 26 கிராம மக்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் மீறி விளைநிலங்களையும், குடியிருப்பு களையும் கைப்பற்றும் முயற்சியை என்.எல்.சி., நிர்வாகம் கைவிட வலியுறுத்தி மதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்.

தொல்லியல் ஆய்வுகள்

மத்திய கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து கழகப் பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியவாறு கீழடி தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சி தொய்வின்றித் தொடர மதிமுக வலியுறுத்தும்.

மின்சார சட்டத் திருத்தம்

மின்சார சட்ட திருத்த முன்வடிவு 2018-ஐ திரும்பப்பெற வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்தும்.

தேர்தல் சீர்திருத்தம்

தேர்தலில் கட்சிகள் பெறுகின்ற வாக்குகளின் அடிப்படையில், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் இடங்களை ஒதுக்குகின்ற வகையில், விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைத்திட, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வோம். தேர்தல்களில் பண ஆதிக்கத்தை அறவே ஒழித்திட வலியுறுத்துவோம்.

விளையாட்டுத் துறை

இளம் வயதிலேயே விளையாட்டுத் திறமையைக் கண்டறிந்து ஊக்குவிக்கவும், உரிய பயிற்சிகளை இலவசமாக அளிக்கவும், விளையாட்டுத்துறை பயிற்சி நிறுவனங்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் மூலம் உருவாக்குவதற்கு வலியுறுத்துவோம்.

சுற்றுலா வளர்ச்சி

சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்குப் புதிய தொடர்வண்டித் தடம் அமைத்தல், புதிய சுற்றுலா விடுதிகளைக் கட்டுதல், ஹெலிகாப்டர் சேவை, விரைவுப் படகுப் போக்குவரத்து, பலூன் விளையாட்டுகள், மலை ஏற்றம் என அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற புதிய திட்டங்களை விரைந்து செயற்படுத்த வலியுறுத்துவோம்.

நகர்ப்புற வறுமை நீக்க புதிய திட்டம்

நகர மயமாதல் வேகமாகி வருவதால், மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வரும் சூழலில் , நகர்ப்புறங்களிலும் வறுமையின் பிடியில் சிக்கி உள்ள மக்களுக்கான புதிய வறுமை ஒழிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.

சட்டம் மற்றும் நீதித்துறை

உச்ச நீதிமன்றத்தின் கிளையை, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைத்திடவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை, கோவையில் அமைத்திடவும் குரல் கொடுப்போம்.

சட்டக் கல்லூரிகள் கட்டமைப்பு

சட்டக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்துவோம்.

நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்திலும் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாநில நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையும், சமூக நீதியும் நலைநாட்டப்பட, சுதந்திரமான நீதிபதிகள் தேர்வு ஆணையம் அமைக்க வலியுறுத்துவோம்.

அயலகத் தமிழர் பிரச்சினைகள்

வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அயல்நாடு வாழ் இந்தியர் நலத்துறையின் மண்டல அலுவலகத்தை சென்னையில் திறக்க வலியுறுத்துவோம்.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்
தமிழ் ஈழம் மலர, பொது வாக்கெடுப்பு

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைப்பதற்கு பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, ஐநா மன்றம் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.

ஏழு தமிழர்கள் விடுதலை

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 163 (1) இன்படி தமிழக அமைச்சரவையின் முடிவைச் செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே ஆளுநருக்கு இருக்கிறது என்பதை வலியுறுத்தி ஏழு தமிழர் விடுதலைக்கு மதிமுக குரல் எழுப்பும்.

தூக்குத் தண்டனை கூடாது

இந்தியாவில் மரண தண்டனையை நீக்க வேண்டும் என வலியுறுத்துவோம்.

சாலைப் போக்குவரத்து

சாலை விபத்துகளைத் தடுக்கவும், அதற்கான ஆலோசனைகள் கூறவும், சாலை விதிகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவும் சாலை பாதுகாப்புக்கான மத்திய வாரியம் அமைக்க வலியுறுத்துவோம்.

சாலை பாதுகாப்பு மசோதா

தேசிய ஆணையம் வரிகளைத் தீர்மானிக்கும் என்ற பிரிவை நீக்கவும், அரசியல் சட்டப்படி வரிகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு நீடிக்கவும் வழிவகை செய்யப்படும்.

சுங்க வரி

கட்டுப்பாடற்ற முறையில் சாலை சுங்கவரி வசூலிப்பதை நிறுத்த வலியுறுத்தப்படும்.

வானூர்தி நிலையங்கள் மேம்பாடு

சென்னை, கொல்கத்தா வானூர்தி நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்துவோம்.

மதுவிலக்கு

முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக இருக்கின்றது.

அஞ்சல் துறை மறுசீரமைப்பு

இந்திய அஞ்சல் துறையைப் புதுப்பித்திடப் பாடுபடுவோம்.

நாடாளுமன்றத் தொகுதி அலுவலகம்

மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் நாடாளுமன்ற உறுப்பினர், தொகுதித் தலைநகரில் அலுவலகம் அமைத்து, மக்கள் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்.

புதுவை மாநிலம்

காரைக்கால், நிரவி பகுதியில் அமையப் பெற்ற ஓஎன்ஜிசி நிறுவனத்தில், வட மாநிலத்தவர்களே அதிக அளவில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதனைத் தடுத்து, புதுச்சேரி இளைஞர்களுக்கு 80 விழுக்காடு இடம் பெற்றிடக் குரல் கொடுப்போம்.

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைகளில்

ஏ-கிரேடு, பி-கிரேடு தவிர்த்த பணிகளுக்கு வட மாநிலத்தவர்களை அதிக அளவில் பணி அமர்த்தி வருவதை மாற்றி, தமிழர்களுக்கே பெருமளவு அந்தப் பணிகளை வழங்கிட நாடாளுமன்றத்தில் மதிமுக குரல் கொடுக்கும்