முக்கிய செய்திகள்

பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனத்திட்டம் : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்….


அதிமுக அரசு சார்பில் 50 சதவீதம் மானியத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதற்கான விழா கலைவாணர் அரங்கில் பிரமாண்டமாக நடக்கிறது.

 

பிரதமர் வருகையையொட்டி சென்னையில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, 2016ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட, “வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் இரு சக்கர வாகனம்” வழங்கும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடக்கிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று மாலை 3.15 மணிக்கு தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்படுகிறார். மாலை 5.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்து இறங்கும் பிரதமர், கார் மூலம் மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கம் வருகிறார்.

விழா முடிந்ததும் கார் மூலம் புறப்பட்டு இரவு 7 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு சென்று இரவு அங்கேயே தங்குகிறார். இதையடுத்து 25ம் தேதி (நாளை) காலை 9.40 மணிக்கு ராஜ்பவனில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து காலை 10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். அங்கு, ஆரோவில் பொன்விழா வாரத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். புதுச்சேரியில் நடைபெறும் விழா முடிந்ததும், நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து தனி விமானம் மூலம் சூரத்துக்கு செல்கிறார்.

தமிழக அரசு சார்பில் உழைக்கும் பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் இரு சக்கர வாகனம் (ஸ்கூட்டர்) வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை 3,36,000 பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு (2018-19) ஒரு லட்சம் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. அதன்படி, அரசு சார்பில் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மீதியுள்ள ரூ.25 ஆயிரம் ரொக்கமாக அல்லது லோன் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1000 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இன்று, பிரதமர் மோடி விழா மேடையில் 7 பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இன்று பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதால் சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் சேப்பாக்கம், கலைவாணர் அரங்கம் மற்றும் அதன் வளாகம் முழுவதையும் டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கண்காணித்து வருகிறார்கள்.

 

மேலும், இன்று இரவு சென்னையில் கவர்னர் மாளிகையில் தங்க உள்ள பிரதமர் மோடியை சந்தித்து பேச சிலருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விமான நிலையம் முதல் விழா நடைபெறும் இடம், கவர்னர் மாளிகை ஆகிய இடங்களில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓட்டல்கள், லாட்ஜ்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. ரவுடிகள், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். போலீசார் முழுமையாக உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் காவிரி பிரச்னை தொடர்பாக அனைத்துக்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமரை அனைத்துக்கட்சி தலைவர்கள் சந்தித்து பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி சென்னை வருவதால், கவர்னர் மாளிகையில் இன்று இரவே அனைத்துக்கட்சி தலைவர்கள் சந்தித்து பேசுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், ஒரே நாளில் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடியவில்லை. இதனால் இன்று அனைத்துக்கட்சித் தலைவர்கள் பிரதமரை சந்திக்கும் திட்டம் கைவிடப்பட்டது.