பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டம்: பிரதமர் 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார்


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கப்படும் இருசக்கர வாகன மானிய திட்டத்தை, சென்னையில் வரும் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள், வரும் 24-ம் தேதி அதிமுக சார்பில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதிமுக தலைமை அலுவலகத்தில் அன்று காலை நடக்கும் நிகழ்ச்சியில், அலுவலக வளாகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை திறக்கப்படுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் சிலையைத் திறந்து வைக்கின்றனர். தொடர்ந்து, அதிமுக சார்பில் புதிய நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஆகியவை தொடங்கப்படுகின்றன.

ரூ.25 ஆயிரம் மானியம்

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பணிக்கு செல்லும் பெண்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், அவர்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவர் மறைந்த நிலையில், முதல்வராக பொறுப்பேற்ற கே.பழனிசாமி, முதல் கோப்பாக, இருசக்கர வாகன மானிய திட்டத்தில் கையொப்பமிட்டார். தொடர்ந்து மானிய தொகையும் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்.24-ம் தேதி இத்திட்டத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதை முன்னிட்டு, கடந்த ஜன.22-ம் தேதி முதல், இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் வழங்கப்பட்டன.

முதலில், பிப்.5-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. மானியம் பெற இருசக்கர வாகன பழகுனர் உரிமம் அவசியம் என்பதால், விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இதையடுத்து, பிப்.10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதனால் பலர் பழகுனர் உரிமத்துக்கும் அவசரமாக விண்ணப்பித்தனர். அதன்பின் அதிகமான பெண்கள் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பித்தனர். பிப்.10-ம் தேதி மாலை 5 மணி நிலவரப்படி, சென்னையில் 35 ஆயிரத்து 28பேர் உட்பட தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 பேர் விண்ணப்பித்துள் ளனர். இதையடுத்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சென்னை மாநகராட்சியில் ஆணையர் மற்றும் இதர மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையிலான குழுவினர் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்தனர். இந்தாண்டு, 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 விண்ணப்பதாரர்களில் தகுதியான ஒரு லட்சம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.

பிரதமர் மோடி பங்கேற்பு

முதலில் இத்திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில், பிரதமர் மோடிக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் அதே நாளில் சென்னையில் நடக்கும் விழா ஒன்றில் பங்கேற்க வருவதால், இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பிப்.24-ம் தேதி மாலை 4 முதல் 6 மணிக்குள், கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கான இருசக்கர வாகன மானிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதைத் தொடர்ந்து, 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்தில் தேனி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடி கூறியதால்தான் முதல்வர் பழனிசாமியுடன் இணைந்தேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த கருத்து, அதிமுகவிலும், பாஜகவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடி, பெண்களுக்கான இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.