பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடரின் இன்றைய போட்டியில் 3-0 என இத்தாலியை வீழ்த்தி இந்திய அணி காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.
பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் லண்டனில் நடந்து வருகின்றன. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் நான்கு அணிகள் என மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் இந்தியா அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெரும். 2 மற்றும் 3 வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெரும்.
முன்னதாக, இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. 2-வது ஆட்டத்தில் அயர்லாந்துடன் 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடனான போட்டியில் 1-1 என சமநிலை பெற்றது.
இந்நிலையில், காலிறுதிக்கு தகுதி பெற இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இத்தாலியை எதிர்த்து களமிறங்கியது.
இன்றைய பரபரப்பான ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை லால்ரேம்சியாமி முதல் கோலை அடித்தார். இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நேகா கோயல் இரண்டாவது கோலையும், ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா 3-வது கோலையும் அடித்து அசத்தினர்.
இறுதிவரை போராடிய இத்தாலி வீராங்கனைகளால் கோல் எதுவும் அடிக்க முடியாததால் 3-0 என இத்தாலியை வீழ்த்தி பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.