உலக செஸ் சாம்பியன்: பட்டம் வென்று குகேஷ் சாதனை…

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் இள வயது உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையை படைத்தார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதினார். 14 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில், 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.

இதையடுத்து நடைபெற்ற 11-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று தொடர்ச்சியான டிராக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் 6 புள்ளிகளை பெற்று முன்னிலை வகித்தார். 12-வது சுற்றில் டிங் லிரேன் வெற்றி பெற்றார். இதன் மூலம் இருவரும் 6-6 என்ற சமநிலையை எட்டினர். 13-வது சுற்று புதன்கிழமை (டிச.11) நடைபெற்றது. அதில் இருவரும் 6.5 – 6.5 புள்ளிகள் பெற்றதால் ஆட்டம் டிரா ஆனது.
இந்நிலையில் வெற்றியை நிர்ணயிக்கும் 14-வது சுற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் குகேஷ் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இருவரும் ஈடு கொடுத்து விளையாடி வந்தனர். நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட போட்டியில் குகேஷ் தனது 58-வது நகர்த்தலில் டிங் லிரெனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

சீன வீரர் டிங் லிரேன் 6.5 புள்ளிகளை எடுத்த நிலையில், 7.5 புள்ளிகளைபெற்று வெற்றி கண்டார் குகேஷ். தனது 58-வது நகர்த்தலின்போதே குகேஷின் கண்களில் கண்ணீர் வடிந்தது. இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் இளம் வயது உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையை படைத்தார். மேலும், இளம் வயது சாம்பியனான கேரி காஸ்பரோவ் சாதனை குகேஷ் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஸ்வநாதன் ஆனந்துக்குப் பின்… – முன்னதாக, உலக கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றதன் மூலமாக டி. குகேஷ் உலக செஸ் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றிருந்தார். இந்தப் போட்டியில் உலக சாம்பியன் லிரெனுடன் மோதிய, 18 வயதான தமிழக வீரரான டி. குகேஷ் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இதில் குகேஷ் வெற்றி பெற்றதன் மூலம், மிக இளம் வயதில் உலக செஸ் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை வசப்படுத்தியுள்ளார்.மதிப்புமிக்க உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை வாகை சூடியுள்ளார். அவருக்கு பின்னர், உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும் குகேஷ் வசப்படுத்தியுள்ளார்.

முந்தைய உலக சாம்பியன் என்ற முறையில், பட்டத்தைத் தக்க வைக்க குகேஷுடன் மோதியவர் டிங் லிரென். கடந்த 2023-ம் ஆண்டில் ரஷ்ய வீரர் இயான் நெபோம்னியாச்சியை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் டிங் லிரேன். சீன நாட்டைச் சேர்ந்த முதல் உலக செஸ் சாம்பியன் இவர்தான். அதேநேரத்தில், கடந்த 9 மாதங்களாக தனிப்பட்ட காரணங்களால் லிரேன் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டின் ஜிடிபி 2022-23ம் ஆண்டில் 7.1% சதவீதமாக ஆக உயர்வு : சிஏஜி அறிக்கை…

காரைக்குடி: சங்கராபுரம் ஊராட்சி தலைவராக தேவி மாங்குடி பதவியேற்பு…

Recent Posts