துல்லியமான பாஸ், பந்தைப் படிப்படியாக பாஸ் செய்து முன்னேறிச் செல்லுதல், அதிகபட்சமாக பந்தை தன் வசம் வைத்திருத்தல் என்ற எல்லா பாக்ஸிற்குள்ளும் டிக் மார்க் விழுந்தாலும் ‘திடீர் மரணம்’ எனும் பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் ரஷ்யாவிடம் வீழ்ந்து வெளியேறியது. வெறும் உள்நாட்டு ரசிகர்களின் பலத்த, உரத்த ஆதரவின் பக்கபலத்தில் ரஷ்யா காலிறுதிக்கு முன்னேறியது.
ஆனால் தோல்விக்கு ஸ்பெயின் தான் காரணம். பெனால்டியில் கோட்டை விட்டதைக் கூறவில்லை, இடைவேளைக்கு முன்னரே ஸ்பெயின் தன் முழு வலுவுடன் இறங்கி 4 கோல்களைத் திணித்திருந்தால் இந்த ரஷ்யா அதன் பிறகு இந்தப் பக்கம் தலை வைத்துக் கூட படுத்திருக்காது, ஸ்பெயின் கோல் இல்லாமல் வெறும் பாஸ்களின் அழகுதான் ஆட்டமா? ஸ்டைல் இருக்க வேண்டியதுதான் ஆனால் நோக்கம் என்ன? ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதானே?
கடைசியில் பெனால்டி ஷுட் அவுட்டில் ரஷ்யா தங்கள் 4 ஷாட்களை கோலாக மாற்ற ஸ்பெயின் தங்களுக்கான 5 வாய்ப்புகளில் 2 ஷாட்களை தவற விட்டன. இதில் ஒரு ஷாட்டை ரஷ்ய கோல்கீப்பர் மிக அருமையாக தன் இடதுகாலினா தடுத்தது அபாரமான தடுப்பு.
1970-க்குப் பிறகு உலகக்கோப்பைக் காலிறுதியில் நுழைந்தது ரஷ்யா. முதலில் ஸ்பெயினுக்காக ரஷ்ய வீரர் இக்னாஷேவிச் செல்ஃப் கோல் அடிக்க 11வது நிமிடத்தில் ஸ்பெயின் 1-0 என்று முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் நாச்சோவை இடித்துத் தள்ளினார் ஷீர்கோவ், இதனால் ஸ்பெயினுக்கு பாக்சிற்கு வெளியே ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது.
வலது புறம் நேராக கோல் அடிக்க முடியக்கூடிய கோணம்தான். ஈஸ்னிசியோ பந்தை கோல் பின்கம்பத்துக்கு அடித்தார். இங்கு இக்னாஷேவிச் ரேமோஸை ரக்பி பாணியில் உருட்டித் தள்ளப்பார்த்தார். ஆனால் இதற்கு கடவுள் தந்த தண்டனையாக பந்து இக்னாஷேவிச்சின் பின் குதிகாலில் பட்டு கோலானது, இவையெல்லாம் கோல் போஸ்ட்டுக்கு மிக அருகில் நடந்தன. இக்னாஷேவிச் அடித்த சுய கோலினால் ஸ்பெயின் வெடித்து எழுந்தது.
ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் ரஷ்யா தாக்குதல் மூவ் மேற்கொண்டது, பெர்னாண்டஸ் ஒரு ஷாட்டை பாக்சிற்குள் செலுத்தினார். அதனை ஸ்பெயின் வீரர் கோகே திருப்பி விட கார்னர் வாய்ப்பு ரஷ்யாவுக்கு. சமிதோவ் அருமையான ஒரு ஷாட்டைச் செலுத்தினார். ஸையுபா கோல் நோக்கி மண்டையால் முட்ட எழும்பினார், அவர் மண்டையில் பட்டு எதிர்பாராத விதமாக பிகேயின் கையில் பட்டுவிட்டது. பொதுவாக கையைப் பின்னால் கட்டிக் கொண்டுதான் பெனால்டி ஏரியாவில் தலையால் முட்ட கார்னர் ஷாட்டுக்கு வீரர்கள் செல்வது வழக்கம், இவர் கையை உயர்த்தியபடி ஏன் இருந்தார் என்பது புரியாத புதிர். பிறகென்ன? இல்லை… நான், தெரியாமல், இல்லை.
அவர்தான் மண்டையால்… என்றெல்லாம் அவர் கோர முயற்சி செய்தார்… ஒன்றும் நடக்கவில்லை பெனால்டி. ஸையூபா ஷாட் அடிக்கும் முன்னர் ஸ்பெயின் கோல் கீப்பர் டி ஜியா தவறான திசையில் டைவ் அடித்தார் எதிர்த்திசையில் கோலானது. ஜெரார்ட் பிகே ஆட்டம் முடிந்தவுடன் தன் சர்வதேச கால்பந்து ஓய்வை அறிவித்தார்.
இடைவேளையின் போது 1-1 என்று இருந்தது. ஸ்பெயின் மேலாளர் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தவறு செய்தார். கோக்கே, மார்கோ அசென்சியோ ஆகியோரை நடுக்களத்துக்கு அனுப்பி கொஞ்சம் கற்பனைத்திறனுடன் ஆடும் இனியெஸ்டா, தியாகோ அல்காண்ட்ரா ஆகியோரை பெஞ்சில் அமரவைத்து விட்டார். இவர்களை உள்ளே அனுப்பி முழு தாக்குதல் தொடுத்து இடைவேளைக்குள் 3-4 கோல்களைத் திணித்திருக்க வேண்டும். 75% பந்தை தங்கள் கால்களில் வைத்திருந்தாலும் 3 ஷாட்களைத்தான் கோல் நோக்கி அடிக்க முடிந்தது.
டைவேளைக்குப் பிறகும் நேரடியாக ஒரு தாக்குதல் ஆட்டத்தை ஆடாமல் தங்கள் பாஸ்களையும் பாதநளினங்களிலுமே கவனம் செலுத்தினர் ஸ்பெயின் அணியினர், மாறாக ரஷ்யா ஸ்பெயினின் பெனால்டி ஷூட் அவுட் வரலாறு தெரிந்து முழுதும் 5 வீர்ர்களை தடுப்பரணில் இறக்கியது, ஸ்பெயின் பாதியில் ரஷ்ய வீரர்கள் வரவேயில்லை, ஆனால் ஸ்பெயினோ தன் பாத நளினங்கள் நெளிவு சுளிவுகளில் கவனம் செலுத்தியது, அதாவது ‘பர்ப்பஸ்’ இல்லாத ஒரு ஆட்டமாக இருந்தது, ரஷ்யா ரொம்ப சவுகரியமாகத் தடுப்பாட்டத்தில் வெற்றி கண்டது.
இனியெஸ்டா களமிறங்கினார், ஸ்பெயினை தன் தூக்கி அடிக்கும் ஷாட்களால் படுத்திய கோல் ஸ்கோரர் ஸையூபா வெளியேற புதிய பதிலி வீரர் வந்தார், ஸ்பெயினுக்கு கொஞ்சம் இடைவெளி கிடைத்தது. இயாகோ ஆஸ்பாஸிடமிருந்து பந்தைப் பெற்ற இனியெஸ்டா பாக்சிற்கு சற்று வெளியே இருந்து மேற்கொண்ட கோல் முயற்சியை ரஷ்ய கோல் கீப்பர் அகின்ஃபீவ் அருமையாகத் தடுத்தார்.
இப்படியே போய் ஆட்டம் இறுதிவரை 1-1 என்று முடிய கூடுதல் 30 நிமிடங்கள் கிடைத்தது, இதில் ரஷ்ய பந்துடைமை 5% தான் இருந்திருக்கும், ஸ்பெயின் கால்களில் பந்து முழுதும் இருந்து என்ன பயன் இடது, வலது மையம் என பல இடங்களிலும் வெள்ளை உடை ரஷ்ய வீரர்கள் வானுலக தேவதைகளாக பந்து உள்ளே வராமல் தடுத்துக்காத்தனர். ஸ்பெயின் தன் பாத நளினங்களில் மயங்கிக் கொண்டிருந்ததே தவிர ஒரு முழுநேர ஆக்ரோஷத் தாக்குதல் செய்யவேயில்லை.
ஸ்பெயினின் பெனால்டி ஷூட் அவுட் ‘வரலாறு’:
1934-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இத்தாலியினால் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிறகே உலகக்கோப்பைகளில் அல்லது ஐரோப்பிய கோப்பைகளில் சுமார் 8 முறை போட்டியை நடத்தும் நாட்டை நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் எதிர்கொண்டுள்ளது. ஆனால் வென்றதில்லை, தென் கொரியா போட்டியை நடத்திய போது அதனுடனும் தோற்றது ஸ்பெயின். இங்கிலாந்திடம் ஒருமுறை தோற்றது, இவையெல்லாம் பெனால்டி ஷூட் அவுட் தோல்விகளே. இந்த வரலாற்றை ரஷ்யா அறிந்திருக்கும்.
அதனால்தான் சமன் செய்த பிறகே பெனால்டி ஷூட் அவுட் மனநிலைக்கு ரஷ்யா தயாரானது. பெனால்டி டாஸில் ரேமோஸ் வென்றார் ஸ்பெயின் முதலில் ஷாட் அடித்தது. இனியெஸ்டா கோல். 1-0.
ரஷ்யாவின் ஸ்மோலோவ் அடுத்தபடியாக தத்தக்காவென்று ஓடி வந்தாலும் கோல் அடித்தார். 1-1ஸ்பெயினின் பிகே கோல் அடிக்க 2-1 ஸ்பெயின் முன்னிலை. ரஷ்யாவுக்கு ஓன் கோல் ஸ்பெஷலிஸ்ட் இக்னாஷேவிச் கோல் அடிக்க 2-2.
ஸ்பெயினின் கோக்கே அடித்த ஷாட் சரியில்லாமல் போக ரஷ்ய கோல் கீப்பர் அகின்ஃபீவ் தடுத்தார். 2-2. கோலோவின் தன் கோலை அடிக்க ரஷ்யா 3-2 ரேமோஸ் வந்தார்.. வென்றார் 3-3.
ரஷ்யாவின் செரிஷேவ் வந்தார் நேராக கோலுக்குள் அடிக்க ரஷ்யா 4-3 அஸ்பாஸ் வந்தார், இவர் கோல் அடித்தால் அடுத்து அடுத்து என்று போய்க்கொண்டிருக்கும், ஆனால் அஸ்பாஸ் ஓடி வந்து நேராக அடிக்க டைவை தவறாக அடித்தாலு ரஷ்ய கோல் கீப்பர் தன் காலால் பந்தை தட்டிவிட 4-3 என்று ரஷ்யா வெற்றி. காலிறுதியில் நுழைந்தது. ஸ்பெயின் வெளியேற்றம். இன்னொரு முறை நடத்தும் அணியிடம் ஸ்பெயின் பெனால்டியில் ஆட்டத்தை இழந்து வீடு திரும்பியது.