உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதலாவது கால்இறுதியில் பிரான்ஸ், உருகுவே அணிகள் இன்று மோதுகின்றன.
21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் மற்றும் 2–வது சுற்று முடிவில் மொத்தம் 24 அணிகள் வெளியேறி விட்டன. 8 அணிகள் கால்இறுதி சுற்றில் எஞ்சி நிற்கின்றன. இதுவரை நடந்துள்ள 56 ஆட்டங்களில் 146 கோல்கள் பதிவாகியுள்ளன. இதில் பரபரப்பான கடைசி 10 நிமிடங்களில் மட்டும் 31 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. சாதனை எண்ணிக்கையாக இந்த தொடரில் மொத்தம் 28 பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டு அதில் 21 கோலாகமாறியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ள இந்த கால்பந்து திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டு கால்இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இதில் ஒரு கால்இறுதியில் முன்னாள் சாம்பியன்கள் பிரான்சும், உருகுவேயும் கோதாவில் குதிக்கின்றன.
லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்ற உருகுவே அணி 2–வது சுற்றில் 2–1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை விரட்டியது. தாக்குதல், தற்காப்பு இரண்டிலும் பலவீனங்களுக்கு இடம் கொடுக்காமல் அருமையாக விளையாடியுள்ள உருகுவே இதுவரை ஒரு கோல் மட்டுமே விட்டுகொடுத்துள்ளது.
அந்த அணிக்கு இப்போது பின்னடைவு என்று பார்த்தால், நட்சத்திர வீரர் எடின்சன் கவானி காயத்தால் அவதிப்படுவது தான். போர்ச்சுகலுக்கு எதிராக இரட்டை கோல் போட்டு அசத்திய அவர் அந்த ஆட்டத்தின் போது இடது பின்னங்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக 74–வது நிமிடத்தில் வெளியேறினார். தொடர்ந்து 3 நாட்கள் பயிற்சியில் ஈடுபடாத கவானி களம் காண வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
லூயிஸ் சுவாரசும், கவானியும் உருகுவே அணியின் இரட்டை தூண்கள் ஆவர். இவர்கள் இரண்டு முனைகளிலும் நின்று கொண்டு கோல் அடிப்பதிலும், வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதிலும் கச்சிதமாக செயல்படக்கூடியவர்கள். கவானி உடல்தகுதியை எட்ட முடியாத நிலையில் இருப்பதால் அவரது இடத்தில் கிறிஸ்டியன் ஸ்டுவானி நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உருகுவே நடுகள வீரர் லுகாஸ் டோரீரா கூறுகையில், ‘இது மிகவும் கடினமான ஆட்டமாக இருக்கப்போகிறது. நடுகளத்தில் அதிவேகமாக ஓடக்கூடிய முக்கியமான வீரர்கள் பிரான்ஸ் அணியில் உள்ளனர். நாங்கள் அவர்களின் பலவீனம் மற்றும் களத்தில் நடந்து கொள்ளும் விதத்தை அலசி ஆராய்ந்து உள்ளோம். அதற்கு ஏற்ப செயல்பட்டு அவர்களை வீழ்த்த முடியும்’ என்றார்.
உலக கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் பிரான்ஸ் அணியும், நடப்பு தொடரில் இதுவரை தோற்றதில்லை. 2–வது சுற்றில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை 4–3 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து மிரட்டியது. குறிப்பாக அந்த ஆட்டத்தில் இரட்டை கோல் அடித்த 19 வயதான கைலியன் பாப்பேவின் கால்கள் மைதானத்தில் பரமபதம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
எதிராளிகளை விட மின்னல் வேகத்தில் ஓடுவது, சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை கோலாக்க முயற்சிப்பது என்று களத்தில் பாப்பே பம்பரமாக சுழன்று வருகிறார். அவரை தவிர்த்து ஆன்டோன் கிரிஸ்மான், பால் போக்பா, ஆலிவர் ஜீரட் உள்ளிட்டோரும் அந்த அணியில் சிறப்பாக ஆடுகிறார்கள்.
இதுவரை 2 கோல்கள் அடித்துள்ள 27 வயதான கிரிஸ்மானுக்கு, உருகுவே அணியினர் கால்பந்து விளையாடும் ‘ஸ்டைல்’ மிகவும் பிடிக்கும். உருகுவேயை தனது 2–வது சொந்த நாடு என்று அடிக்கடி சொல்வார். அவர் கூறுகையில், ‘உருகுவே நாட்டையும், அந்த தேசத்து மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே இது எனக்கு உணர்வுபூர்வமான ஆட்டமாக இருக்கும்’ என்றார்.
உருகுவே கேப்டன் டியாகோ காடின், ஜோஸ் ஜிமெனஸ் மற்றும் கிரிஸ்மான் ஆகியோர் அத்லெட்டிகோ மாட்ரிட் கிளப்பில் ஒன்றாக இணைந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
1978–ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை போட்டிகளில் தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிக்கு (உருகுவே இந்த கண்டத்தை சேர்ந்தது தான்) எதிராக பிரான்ஸ் தோற்றதாக வரலாறு கிடையாது. அதாவது கடந்த 40 ஆண்டுகளில் தென்அமெரிக்க அணிக்கு எதிராக 9 ஆட்டங்களில் விளையாடி அதில் 5–ல் வெற்றியும், 4–ல் டிராவும் கண்டுள்ளது. அந்த பெருமையை தக்கவைப்பதோடு 6–வது முறையாக அரைஇறுதிக்குள் நுழையும் வேட்கையுடன் பிரான்ஸ் அணி காத்திருக்கிறது.
இரு அணிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான பலத்துடன் காணப்படுவதால் வெற்றி வாய்ப்பு என்பது மதில்மேல் பூனையாகவே தெரிகிறது. ஆனால் முதல் கோலை சீக்கிரம் அடிக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்2, சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
World cup : Quarter Final Today