லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபடவைத்து,
உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்கம் திரும்பச் செய்தவர் நெல் ஜெயராமன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
170க்கும் மேர்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட சாதனை மனிதர் ‘நெல் ஜெயராமன்’ புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை அவருடைய உயிர் பிரிந்தது.
அவரது மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் பொருட்டு தனது வாழ்வை அர்ப்பணித்து 150-க்கும் மேற்பட்ட நெல் வகைகளை மீட்டெடுத்த ஒரு சாதனையாளர் என்றே அவரைச் சொல்லலாம். நோயின் தாக்கம், கடுமையாக அவரைப் பாதித்தபோதும், தனது லட்சியத்தை விட்டுவிடாமல் அதற்காக உழைத்திட்ட தூயவர் நெல் ஜெயராமன்.
லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபடவைத்து, உற்பத்தியைப் பெருக்கி அதனைச் சந்தைப்படுத்தியதன் மூலமாக உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்கம் திரும்பச் செய்தவர் ஜெயராமன்.
இயற்கை விவசாயத்தையும், வேளாண்மையையும், பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு சமூக விழிப்புணர்வாக உருப்பெற்று வரும் இச்சூழலில், நெல் ஜெயராமனின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தினகரன் தெரிவித்துள்ளார்