வாட்ஸ் – ஆப் மூலம், தவறான தகவல்கள், நாடு முழுவதும் வேகமாக பரவுவதால், பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன.
இதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், வாட்ஸ் – ஆப் நிர்வாகத்துடன், மத்திய அரசு, பல சுற்று பேச்சு நடத்தியது.
இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து, இந்தியா வந்துள்ள, வாட்ஸ் – ஆப் நிறுவனத்தின் துணை தலைவர், கிறிஸ் டேனியல்ஸ்,
மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை, டெல்லியில், நேற்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: தவறான தகவல்கள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகளை பற்றி,
அந்நிறுவனத்தின் துணை தலைவர் கிறிஸ் டேனியல்ஸ் மற்றும் அவரது குழுவினருடன் விவாதித்தேன்.
இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு என, தனியாக குறைதீர் அதிகாரியை நியமித்து இருப்பதாக, அவர் தெரிவித்தார்.
மேலும், தவறான தகவல்களை பரப்புவோரின் அடையாளம் மற்றும் இருப்பிடம் குறித்த தகவல்களை, அரசுக்கு தெரிவிக்கும்படியும் வலியுறுத்தினேன்.
இது குறித்து, தங்கள் தொழிநுட்ப குழுவுடன் ஆலோசித்து, பின், பதில் அளிப்பதாக, அவர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.