கேள்விகள் ஏதும் அனுமதிக்கப்படாத இந்தியாவில் தனித்துவமான நாடாளுமன்ற ஜனநாயகம்: ப.சிதம்பரம் விமர்சனம்..

இந்தியாவில் தனித்துவமான நாடாளுமன்ற ஜனநாயகம் இருக்கிறது. ஏனென்றால் அங்கு கேள்விகள் கேட்கவே அனுமதி கிடையாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இதில் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா இடையிலான மோதல் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அனுமதி கோரினர். ஆனால், அதற்கு மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

மேலும், கிழக்கு லடாக்கில் எல்லைப் பிரச்சினை தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த அறிக்கையை அடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேச முயன்றபோது அவைத்தலைவர் அனுமதிக்கவில்லை. இதனால் வெளிநடப்புச் செய்த மக்களவை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே இருக்கும் மகாத்மா காந்தி சிலை முன் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

“இந்தியாவில் இன்று தனித்துவமான நாடாளுமன்ற ஜனநாயகம் இருக்கிறது. அங்கு உறுப்பினர்கள் கேள்விகள் கேட்கவே அனுமதிக்கப்படமாட்டார்கள், விவாதம் நடத்தவும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்தியா தனித்துவமான தேசம். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்லும்போது எத்தனை பேர் உயிரிழந்தார்கள், வீட்டுக்குச் சென்றபின் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்து எந்தவிதமான புள்ளிவிவரங்களையும் அரசு பராமரிக்கவில்லை.

இந்தியா தனித்துவமான பொருளாதாரத்தைக் கொண்ட நாடு, நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி)1.7 சதவீதத்தை மட்டும் பணமாகவும், தானியங்களாகவும் அளித்துவிட்டு, போதுமான அளவு பொருளாதார நிதி ஊக்கம் கொடுத்துவிட்டதாக நினைக்கிறார்கள்.

இந்தியா இன்று அதியசத்தக்க தேசம். வேகமான பொருளதாார வளர்ச்சியைக் கொண்டிருந்த தேசம், கடந்த 3 மாதங்களில் அதலபாதாள பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது”.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.