ஜிம்பாப்வே அதிபராக இரண்டாவது முறையாக எம்மர்சன் தேர்வு


ஜிம்பாப்வே பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான  ஜனு பி.எப். கட்சி வெற்றி பெற்றது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 10 மாகாணங்களுக்கான தேர்தல் முடிவுகளை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி ஆளும் கட்சிக்கு 50.8 சதவீத ஓட்டும், எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சாமிசாவுக்கு 44.3 சதவீத ஓட்டும் கிடைத்தன.


இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அதிபராக எம்மர்சன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் இந்தத் தேர்தல் முடிவை எதிர்க்கட்சி முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

இந்த வெற்றி குறித்து எம்மர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜிம்பாப்வேவின் அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பெருமை கொள்கிறேன். வாக்குகளில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நமது கனவுகளில் நாம்  ஒற்றுமையுடன் உள்ளோம். இது புதுப் பயணம். புதிய ஜிம்பாப்வேவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

ஜிம்பாப்வே நாட்டில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக முறையில்  எந்த வன்முறையும் இல்லாமல் பொதுத்தேர்தல் செவ்வாய்க்கிழமை  நடந்து முடிந்தது.

இந்தத் தேர்தலில் தற்போது ஜிம்பாப்வேவின் அதிபராக இருக்கும் எம்மர்சனுக்கும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான நெல்சன் சாமிசாவுக்கும் கடும் போட்டி  நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ஆளும் கட்சியான ஜனு பி.எப். ( ZANU–PF ) பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

ஜிம்பாப்வேவில் 37 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே பதவியில் இருந்து நீக்கப்பட்டபின் நடைபெற்ற முதல் தேர்தல் இது.