தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை : அடுத்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்..

தமிழகத்தில் சட்டமேலவையை கொண்டு வருவதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும்போது அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தாலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 1986-ம் ஆண்டு வரை சட்டமேலவைஇருந்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மேலவையைக் கலைத்து விட்டார்.
அதன் பிறகு இதுநாள்வரை தமிழகத்தில் மேலவை கொண்டு வரப்படவில்லை. கடந்த 2006-ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் மீண்டும் மேலவையை கொண்டுவர முயற்சி செய்தார்.

இதற்காக புதிய தலைமை செயலகம் கட்டும்போது அதில் மேலவை நடத்துவதற்கான கூட்ட அரங்கத்தையும் சேர்த்து கட்டினார். ஆனாலும் அவரது காலகட்டத்தில் மேலவை கொண்டு வருவதற்கு அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக தமிழகத்தில் மேலவை கொண்டுவர முடியவில்லை. மீண்டும் மேலவையை கொண்டு வரவேண்டும் என்றால் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும்.
இந்த சூழ்நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 374-வது வாக்குறுதியாக தமிழகத்தில் மீண்டும் மேலவைக் கொண்டு வரப்படும் என்று கூறி இருந்தனர்.

அதில் அரசியல் அறிஞர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள், சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் இடம்பெற்று அரிய ஆலோசனை கூறத்தக்க வகையில் தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேலவையை விரைவில் கொண்டுவர உரிய அரசியல் சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டு இருந்தது.

தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதும் முதல்வரான மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் மீண்டும் மேலவையை கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பிலும் மேலவையை கொண்டுவர அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி வருகிற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது இதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்துள்ளதால் அடுத்த கூட்டம் ஜனவரி மாதம் கூடும் என தெரிகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்க இருக்கும் இந்த கூட்டத்தொடரின்போது மேலவையை கொண்டு வருவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதற்காக சட்ட நிபுணர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மேல்-சபை உள்ளது. அசாம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மேலவையை கொண்டு வருவதற்கான மசோதா நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலவையை கொண்டு வருவதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும்போது அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தாலும் பாஜக எம்.எல்ஏ.க்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் மேலவை அமைப்பதற்கு பாஜக தேர்தல் வாக்குறுதியில் ஆதரவு தெரிவிக்கும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் மேலவையைக் கொண்டு வரும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும் போது பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவிக்காது என தெரிகிறது.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த முறை இந்த சட்ட மசோதா எளிதாக நிறைவேறும் என கூறப்படுகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் மேல்- சபையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.