2021 சிங்கப்பூர் தைப்பூசத் திருவிழா : காவடிகள், ஊர்வலம் செல்லத் தடை..

தைப்பூசத் திருநாளில் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்துக்கு காவடி தூக்கிச் சென்ற பக்தர். கோப்பு படம்

முதன் முறையாகக் காவடிகள் இல்லாமல், ஊர்வலம் இல்லாமல் அடுத்த ஆண்டின் தைப்பூசத் திருவிழா நடைபெறவுள்ளது.
கொவிட்-19 நோய்த்தொற்று அபாயம் இன்னும் முற்றிலுமாக தீராத பட்சத்தில் அதிகக் கட்டுப்பாடுகளுடன் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் மட்டும் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படும்.
பக்தர்களின் காவடிகள், பால் குடங்கள், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து ஊர்வலம் என சிங்கப்பூரில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா, கொவிட்-19 சூழல் காரணமாக எதிர்வரும் தைப்பூசக் கொண்டாட்டம் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்று ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயம், இந்து அறக்கட்டளை வாரியம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

150 ஆண்டு கால பாரம்பரியத்தைத் தொடரும் நோக்கில் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு கட்டுப்பாடுகளுடன் தைப்பூசம் கொண்டாட முடிவெடுத்திருப்பதாக அறிக்கை குறிப்பிட்டது.

தைப்பூசக் கொண்டாட்டத்தின் முக்கிய மாற்றங்கள்:

  • அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து ஊர்வலம் இருக்காது.
  • ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே தைப்பூச திருவிழா கொண்டாடப்படும்.
  • எந்தவிதமான காவடியும் எதிர்வரும் தைப்பூச நாளில் அனுமதிக்கப்படாது.
  • அலகு குத்தி வரும் பக்தர்களுக்கு ஆலயத்துக்குள் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் தயார் செய்யப்படும் பால்குடங்களை மட்டுமே சுவாமிக்குச் செலுத்த முடியும். வெளியிலிருந்து பக்தர்கள் கொண்டு வரும் பால்குடங்களைத் தயாரிக்கவும் வழிபாட்டுக்கும் இடம் இல்லை என்பதால் அவற்றுக்கு அனுமதி இல்லை.
  • இணையம் வழியாக முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே ஆலயத்தில் பால்குடம் எடுக்க முடியும். இணைய முன்பதிவுக்கான ஆதாரம் இல்லாமல் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அன்றைய தினம் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • ஆலயத்துக்குள் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, பால்குடங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு உள்ளது.
  • பால்குடம் எடுப்போருடன் ஒருவர் மட்டுமே ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படுவர். பால்குடம் எடுப்போருடன் ஒருவருக்கு மேற்பட்டோர் வந்தால் அவர்கள் பால்குட வரிசையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • அதே போல, அன்றைய தினத்தில் சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோரும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பதிவு செய்து, அந்த நேரத்தில் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்.
  • தைப்பூச நாளில் நடப்பில் இருக்கும் நடைமுறைப்படி பக்தர்கள் ஆலயத்துக்குள் நுழைய வேண்டும். கோயிலுக்குச் செல்வோர் அனைவரும் ‘டிரேஸ் டுகெதர்’ செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் அல்லது ‘டிரேஸ் டுகெதர்’ டோக்கனை வைத்திருக்க வேண்டும்.
  • 37.5 டிகிரி செல்சியசுக்கு மேல் உடல் வெப்பநிலை இருப்போர் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்க விரும்புவோர் கீழ்க்கண்ட கூடுதல் பொது ஆலோசனைகளையும் கருத்தில் கொள்வது நலம்:

  • ஆலயத்துக்குள் நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், எந்தவொரு குறிப்பிட்ட நேரத்தில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கைக்கும் வரம்பு உள்ளது.
  • திருவிழா கொண்டாட்ட நேரத்திலும் கட்டுப்பாடுகள் இருக்கும்.
  • ஒலிப்பான்கள், இசைக்கருவிகள் போன்றவற்றைக் கொண்டு வருவோர் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
    நன்றி
    தமிழ் முரசு