நெஞ்சையள்ளும் மணிமேகலை : கல்யாணராமன்

manimekalai 4இத்தலைப்பைப் படிக்கும் பலருக்கும் வியப்பாய் அல்லது உறுத்தலாய் இருக்கலாம். ‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்’ என்பது மகாகவியின் வாக்கு. அது முழுக்க முழுக்க உண்மைதான். இளங்கோவைப் போன்ற மாபெரும் கவிஞர்கள் பூமிதனில் எப்போதாவதுதான் பிறக்கிறார்கள் என்பதிலும் கருத்து வேறுபாட்டுக்கே இடமில்லைதான். ஆனால், இதன் அடிப்படையில், சிலப்பதிகாரத்தோடு ஒப்பிட்டு மணிமேகலையை மட்டம் தட்ட நினைப்பதில் நியாயமிருப்பதாகக் கூற முடியவில்லை. மணிமேகலையோடு ஒப்பிட்டுச் சிலப்பதிகாரத்தைப்பாரதி புகழ்ந்துரைக்கவில்லை; சிலம்பின் தனித்தன்மையும் இலக்கியத்தகுதியும் கருதியே அவர்  இளங்கோவைத் தமிழின் முதன்மையான கவிகளுள் ஒருவராக உயர்த்திப் பிடித்தார். அது சரிதான்.

ஆனால், மணிமேகலைக்கும் நெஞ்சையள்ளும் வனப்புகள் உண்டு. இளங்கோவின் பெருவெற்றியால், அவருக்கு இணையான கவித்திறன் பெற்ற கூலவாணிகன் சாத்தன், தமிழ்ச்சூழலில் அவருக்குரிய உயர்வான அங்கீகாரத்தைப் பெறமுடியாமல் போய்விட்டது சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்பது, அவற்றின்‘கதைப்பொருள்’ தொடர்பு கருதித்தானே தவிரப் பிறவகை இலக்கியத்திறன்களைக் கணக்கிலெடுத்தன்று  என்பதை நினைவில்கொள்ள வேண்டும். சிலப்பதிகாரத்தின் காவியக் கட்டுமானம் வேறு  மணிமேகலையின் காவியக் கட்டுமானம் வேறு. சிலம்பும் இளங்கோவும் தமிழ்ச்சூழலில் பெறும் உயர்வான அங்கீகாரத்திற்கு முழுமையான நியாயமுண்டு. எனினும், மணிமேகலையும் சாத்தனும் புறக்கணிக்கப்படுவதற்கும், அல்லது உரியமுறையில் சிறப்பளித்துப்

பேசப்படாமைக்கும் சிறிதும் நியாயமில்லை. இத்தகைய ‘கண்டு கொள்ளாமை தொடர்ச்சியாகத் தமிழ்ச் சூழலில் நிகழ்ந்து வருகிற ஒன்றுதான். குறுந்தொகையும் நற்றிணையும் புறநானூறும் போற்றப்பட்டு அகநானூறும் ஐங்குறுநூறும் பதிற்றுப்பத்தும் பின்தள்ளப்படுவதும், கம்பராமாயணம் கொண்டாடப்பட்டு வில்லிபாரதம் மௌனமாக்கப்படுவதும், வில்லிபாரதத்தோடு ஒப்பிடும்போது நல்லாப்பிள்ளை பாரதம் படிக்கப்படாமலே போவதும், நால்வர் வாக்கு அருட்பாவாகக் கொள்ளப்பட்டுச் சோதி ராமலிங்கர் குரல் மருட்பாவாகத் தள்ளப்படுவதும், பாரதியா பாரதிதாசனா சண்டைகளும், புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும்  சுந்தர ராமசாமியும் பேசப்படுமளவுக்குக் கு.ப.ராஜகோபாலனும், கு.அழகிரிசாமியும், ப.சிங்காரமும் கவனத்திற்குள்ளாக்கப்படாததுமெனத் தரப்படுத்தப் பட்ட ‘உயர்வர்க்க ரசனை’ சார்ந்த ஒருவகை ‘பொதுபுத்தி வாசிப்பு அரசியல்’ தமிழிலக்கிய உலகில் நெடுங்காலமாகச் செயல்பட்டு வருகிறது. போற்றப்படும் இலக்கியங்களும் ஆசிரியர்களும் சரியான காரணங்களுக்காகவே போற்றப்படுகின்றனர்  என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், முழுமையான தகுதிப்பாடுகளிருந்தும் சில பேரிலக்கியப் பனுவல்களும் சில தலைசிறந்த ஆசிரியர்களும் ஏன் ஓரம்கட்டப்பட்டு மையநீரோட்டத்திலிருந்து விலக்கி நிறுத்தப்படுகின்றனர் என்பதுதான், இங்குக் கேள்வியாகிறது.

இத்தகைய ‘வாசிப்பு’சார் ‘நுண்ணரசியல்’ பின்னணியிலிருந்துதான், ‘நெஞ்சையள்ளும் மணிமேகலை’ என்ற தலைப்பிற்கான ‘இலக்கிய நியாயத்தை’ விளங்கிக்கொள்ள வேண்டும்.

பெண்ணின் பெயரைக் காவியத் தலைப்பாகச் சூடிப் பாடிய முதல் தமிழ்க் கவிஞர் சாத்தன்தான் மனையுறை வாழ்விலிருந்து வெளியேற்றிப் பொதுவெளிக்குள் நிறுத்திப் பெண்ணின் அகப்புறப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த முதல் கதையிலக்கியமும் மணிமேகலைதான்!manimegalai 1

உலகக் கவிதை இலக்கியத்தின் கொடுமுடிகளுள் ஒன்றாகப் பழந்தமிழரின் சங்க இலக்கியம் அறியப்படுகிறது. சங்க இலக்கியத்துக்கு இணையான மிக அரிய கவித்துவ உச்சங்கள், அன்றிலிருந்து இன்றுவரையில், மிகச்சிறிய அளவிலானாலும், அவ்வப்போது தமிழில் அடையப்பட்டுத்தான் வருகின்றன. இந்த அறுபடாத தொடர;ச்சி சார;ந்த இலக்கியச்செழுமையைக் கருதித்தாம், ‘கன்னித்தமிழ்’ என்றும், ‘என்றுமுள தமிழ்’ என்றும் ‘நூலறி புலவர்’ வியக்கின்றனர். ‘மணிமேகலை’ காவியத்தில், ஆசிரியர; கூலவாணிகன் சாத்தன், அவ்வளவு எளிதாக மொழிக்குள் மடக்கிக்கொண்டுவர இயலாத சில அசாதாரணமான உள்ளெழுச்சிகளைக் குறிப்பான பொருளமைதியுடன் கூடிய மின்வெட்டுப் போன்ற சொற்தெறிப்புகளில் காட்சிப்படுத்த முயன்றுள்ளார்.

விரிந்த கரங்களோடும், முகமெங்கும் அடர;ந்த ஞானச்சிரிப்போடும், பெருவெடிப்புக்கு முந்தைய ஆனந்த மோனத்தோடும், அண்டங்கள் அனைத்தும் அதிரும் எல்லையற்ற சிலிர;ப்போடும், தொண்டு உண்டு செழித்த தொல்குமரனாகிக் கல்லைப் பிசைந்து கனியாக்கிக் கடைவிரித்துக் ‘கொள்வோர; அனைவரும் வருக’ எனத் தழுதழுத்துக் குரல் கசியும் தண்டமிழ் ஆசானின் பெரும்பரிவு, உலகக் கவிதையிலக்கியத்தின் ஒப்பற்ற சிகரங்களுள்

“காணார; கேளார; கால் முடப்பட்டோர;

பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்

யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி

உண்டொழி மிச்சில் உண்டு ஓடு தலைமடுத்து

கண்படைகொள்ளும் காவலன் தான்என்” (13:111-115)

உணர்வு வழியின் உச்சத்தில் நின்றவாறு, ‘யாவரும் வருக’ எனப் பிறவிப்பேறைத் திறந்துவைக்கும் சாத்தனின் ‘பச்சை மனம்’, கவிஞர;களிலிருந்து காவியகர;த்தாக்களைப்  பிரித்துக்காட்டும் தனித்தோங்கிய உயர;தனிக் கலையு+ற்றாகும். இப்படிப்பட்ட சில அரிய  ஊற்றுகள், காவியக் காட்சிகளினூடே மிகஇயல்பாகச் சாத்தனுக்கு வசப்பட்டுள்ளன. தெளிவுற அறிந்து தெளிவுதர மொழிதல் என்பது, மகத்தான கவித்துவத் தருணங்களைக் கவிமொழிக்குள் மடக்கிப் பிடிப்போருக்கு இயல்பாகும். இந்த இயல்புணர;வால்தான், பௌத்த சமயத்தின் சாரத்தையும்- புத்தரின் முடிவான இலக்கையும்,

“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்

பிறவார் உறுவது பெரும் பேரின்பம்

பற்றின் வருவது முன்னது பின்னது

அற்றோர; உறுவது அறிக” (2:64-67)

“துன்பம் தோற்றம் பற்றே காரணம்

இன்பம் வீடே பற்றிலி காரணம்” (30:186-187)

எனத் துல்லியமான மொழியில் தொகுத்துரைக்கச் சாத்தனாரால் முடிகிறதெனலாம். இவ்வாறு அடிப்படையான பௌத்தப் பேருண்மைகளைக் குறைவான சொற்களில் அடக்கிக் காட்டிய சாத்தனின் தனித்திறம் போற்றற்குரியதாகும் என்பார; கி. லட்சுமணன். (இந்தியத் தத்துவ ஞானம், ப.180) கவிதை என்பது, சொற்களைப் பெருக்கித் தொனிப்பொருளைச் சிதைப்பதன்று.

manimegai 2சொற்சிக்கனம்வழி அனுபவப் பெருக்கத்தை எல்லையற்று விரிப்பதே கவிதையாகும். இவ்விரிவு சாத்தனுக்குக் கூடியுள்ளது. இந்நோக்கில் இங்கு, உதயகுமரன்-மணிமேகலை தொடர;புடைய சிலவற்றை

“பொதியறைப்பட்டோர; போன்று உளம் வருந்தி,

மதுமலர;க் கூந்தல் சுதமதி உரைக்கும்

இளமை நாணி, முதுமை எய்தி,

உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு

அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்

செறிவளை மகளிர; செப்பலும் உண்டோ?

அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல்!

வினைவிளங்கு தடக்கை விறலோய்! கேட்டி,

வினையின் வந்தது, வினைக்கு விளைவாயது,

புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது

மூப்பு விளிவுடையது, தீப்பிணி இருக்கை,

புற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்,

புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை,

அவலக் கவலை கையாறு அழுங்கல்

துவலா உள்ளம் தன்பால் உடையது,

மிக்கோய்! இதனைப் புறமறிப் பாராய்!

என்றவள் உரைத்த இசைபடு தீஞ்சொல்

சென்றவன் உள்ளம் சேரா முன்னர்ப்

பளிங்குபுறத்து அறிந்த பவளப் பாவையின்,

இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன்என்”

(பளிக்கறை புக்க காதை :4:105-125)

காற்றுவராத அறைக்குள் அடைப்பட்டுக் கிடப்பவளைப் போலச் சுதமதி உளம் வருந்துவது எதற்காக? manimegalai 5மணிமேகலையைப் போகப்பொருளாகக் கருதித் துய்க்க உதயகுமரன் முனைவதைக் கண்டு,

மறுபடியும் மாருதவேகன் இவன் உருவில் நேரில் வந்துவிட்டானோ என ஒருகணம் சுதமதி குழம்பியிருக்கக்கூடும்! ‘கரிகாலன் மரபில் வந்த உதயகுமரனுக்குத் தன்னைப் போன்ற பெண்ணா அறிவுரை கூறமுடியும்?’ எனச் சுதமதி கேட்பதில், பெண்குலத்தின் ஆற்றாமையும் பரிதவிப்புமல்லவா வெளிப்படுகிறது! இதைக் கூறிய பின்னும் அமைதியுறமுடியாத சுதமதி, மலர் கொய்ய வந்த மணிமேகலைக்குப் பாதுகாப்பாக வந்துள்ள தன் பொறுப்பைக் கருதிப் ‘பௌத்த நிலையாமை’ சார;ந்து ‘குற்றக் கொள்கலமாய்’’ யாக்கையைக் கண்டு உதயகுமரனை நல்லாற்றுப்படுத்த முனைகிறாள்.

இங்கு உடலைப் பழிப்பது மட்டும் சுதமதிக்கு நோக்கமன்று. உடலின் நிலையாமையை விதந்தோதுவதன்வழி, மணிமேகலையை விழுங்கத் துடிக்கும் உதயகுமரனின் மனநெருப்பின் வேகத்தைச் சற்று மட்டுப்படுத்தவே, சொற்களை அவள் விரைந்து வீசுகிறாள். இவ்வாறு பொருள் கொள்வது சிறிது மிகையானது எனச் சிலர; நினைக்கலாம். ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்பார்க்கு, இப்படியும் பொருள் கொள்வதற்குக் கவிதை இடமளிக்கும் என்பது வியப்பாகாது.

மேலும், “தீநெறிப் படரா நெஞ்சினை ஆகுமதி” (5:29) எனப் “பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய” (5:35) சுதமதி உதயகுமரனிடம் இறைஞ்சுவதும், இங்குக் கருதத்தக்கதாகும். சுதமதியின் சொற்கள், உதயகுமரனின் செவிகளில் சென்று சேர;வதற்கு முன்னால், அவன் விழிகளுக்கு மணிமேகலையின் உருவம் புலப்பட்டுவிடுவதாகச் சாத்தனார; சுட்டுகிறார். ஆசை கொழுந்துவிட்டெரியும் மனத்தை அறிவுரைகள் தணிப்பதில்லை. இது ஒரு போராட்டம். இப்போராட்டத்தை

இதற்குமுன் சுதமதியும் அனுபவித்தவள்தான். அன்று சுதமதியும் மாருதவேகனும் என்றால், இன்று மணிமேகலையும் உதயகுமரனும் என்பது மட்டுமே வேறுபாடு! இப்போராட்டம் முளைவிடத் தொடங்குவதுடன், பளிக்கறை புக்க காதையைச் சாத்தனார; முடித்துவிடுகிறார். வீணாக ஒரு

சொல்லைக்கூடச் சாத்தனார் விரயம் செய்வதில்லை என்பதற்கு, இது ஒரு சிறந்த சான்றாகும். உதயகுமரனிடம் பெரிதாக வளராமல் உடனுக்குடன் முற்றுப்பெற்றுவிடும். இப்போராட்டம், மணிமேகiலா தெய்வம் வந்து தோன்றிய காதை’யில், மணிமேகலையிடம் சிக்கலும் சிடுக்குமாகித் தன் முடிவான உச்சத்தை அடைகிறது.

“பளிக்கறை திறந்து பனிமதி முகத்துக்

களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகிக்

கற்புத் தானிலள் நற்றவ உணர;விலள்

வருணக் காப்பிலள் பொருள்விலையாட்டி என்று

இகழ்ந்தனனாகி நயந்தோன் என்னாது

புதுவோன் பின்றைப் போனதுஎன் நெஞ்சம்

இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை?

இதுவே ஆயின் கெடுக அதன் திறம்! என-

மதுமலர்க் குழலாள் மணிமேகலைதான்

சுதமதி தன்னொடும் நின்ற எல்லையுள்-”

(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை:5:84-93)

பிழைமணம் புரிந்த சுதமதி, அத்தகைய பிழைமணவாழ்வு மணிமேகலைக்கும் வாய்த்துவிடக்கூடாதே என்ற விழிப்புணர்வால், அவளுக்குக் காவலாகிறாள். நன்மணத்தைச் சுதமதியோ சாத்தனோ எதிர்ப்பதில்லை. பிழைமணமே அவர்களுக்கு ஒவ்வாமையாகிறது. ‘புதுவோன் பின்றைப் போனதோ என் நெஞ்சம்?’ என மணிமேகலை ஐயுறுவதில்லை. புதுவோனிடம் தன் மனம் போய்விட்டது என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துவிடுகிறாள். முன்பின் பார்த்தறியாத ஒருவனைக் கண்டவுடன் அவன்பால் மனம் செல்வதுதான் காமத்தின் இயல்பு என்றால், அத்தகைய அறிவுக்குப் பொருந்தாத காமம் கெடுக என்கிறாள் மணிமேகலை. இது ஒரு கடுமையான சிக்கல். இதைத்தான் “வெண்ணிற இரவுகள்” என்ற தன் நெடுங்கதையில், தஸ்தயேவ்ஸ்கியும் எதிர்கொண்டார்.

காதல் என்பது மெய்யா? இல்லை பொய்யா? மெய்போலத் தோன்றும் பொய்யா? இல்லை பொய்போலத் தோன்றும் மெய்யா? இவை எல்லாமும்தான்! இப்புரிதலைத்தான் வெண்ணிற இரவுகளில் அடைகிறோம். இக்கருத்தியலில் தஸ்தயேவ்ஸ்கிக்குச் சாத்தனாரை முன்னோடியாகத் துணியலாம். இப்புதிருக்குப் பௌத்தமரபில் நின்று விடைகாணும் பொருட்டுப் பழம்பிறவியைக் கற்பிக்கும் சாத்தனார் சென்றபிறவியில் உதயகுமரனும் மணிமேகலையும் கணவனும் மனைவியுமாயிருந்தனர் எனக் கூறிச் சிக்கலைத் தளர்த்துகிறார். நின் செவ்வி முகந்து தன் கண்ணால் பருகாள் என்றும், ஊழ்தரு தவத்தள் என்றும், சாப சரத்தி என்றும், காமம் கடந்த வாய்மையள் என்றும் விதந்துரைத்து மணிமேகலையைப் பிறவித்துறவியாகச் சுதமதி காட்ட முனைந்தாலும், உதயகுமரனை நோக்கி மணிமேகலையின் மனம் விரைந்து தாவுவதைத் தவிர;க்க அவளால் முடிவதில்லை. இதற்குப் ‘பூர;வ ஜென்ம பந்தத்தை’ச் சாத்தனார;

“என்னமர் காதலன் இராகுலன் ஈங்கிவன்

தன்னடி தொழுதலும் தக என வணங்கி

அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்

இறைவளை முன்கை ஈங்கிவன் பற்றினும்

தொன்று காதலன் சொல்லெதிர; மறுத்தல்

நன்றியன்று என நடுங்கினள் மயங்கி”manimegalai 3

எனக் கணவனின் அடிதொழுது வணங்குவதுடன், தன்கையை அவன் பற்றிக்கொள்ளவும் இடமளித்துவிட்டுத் தொன்று காதலன் சொல்லெதிர; மறுத்தல் நன்றியன்று என்றுமுரைத்துக் காதலாகிக் கசிந்துருகி மனம் மயங்குகிறாள் மணிமேகலை. இதுதான் அவளது உண்மையான உள்ளம்! எனினும், மாதவி- கோவலன்  சுதமதி – மாருதவேகன் எனத் தன்முன் திரண்டுகிடக்கும் பல கசப்புகளைக் கருதித் தன் மனத்துக்குக் கடிவாளமிட அவள் முனைகிறாள். அதற்குச் ‘சாத்தனாரின் பௌத்தம்’ பெருந் துணையாகிறது.  முழுவதுமாகக் கட்டுப்பாடிழந்து உதயகுமரனிடம் சென்றுவிட்ட நெஞ்சத்தைப் பிடித்திழுத்துத் திருப்பச் சுதமதி முன்பு வலியுறுத்திய பௌத்த நிலையாமைக் கொள்கையைப் பின்வருமாறு மணிமேகலையும் பயன்படுத்திக்கொள்கிறாள்.

“பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்

இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்

மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து

மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்

மண்டமர் முருக்கும் களிறு அனையார்க்குப்

பெண்டிர் கூறும் பேரறிவு உண்டோ?”

(உதயகுமரன் அம்பலம்புக்க காதை:18:136-141)

என, உதயகுமரனிடம் மணிமேகலை உரையாடுகிறாள். இப்படி மணிமேகலை இடும்பைக் கொள்கலமாக யாக்கையை இழித்துப் பேசினாலும், பெண்டிர; கூறும் பேரறிவுக்கு ஆண்முதன்மைச் சமூகத்தில் மதிப்பில்லாத நிலைமையால்தான், இவ்வாறு அவள் கூறுகிறாள் என்றும் துணியலாம்.

வாளுக்கு இரையாகிறபோது, பிறந்தோர; இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் இயல்பென நன்கறிந்திருந்தும், வெய்துயிர;த்துப் புலம்பி அயாவுயிர;த்து அழுது ஏங்காமலிருக்க மணிமேகலையால் முடிவதில்லை! இதை இவ்வாறும் கூறலாம். உதயகுமரன்மீது மணிமேகலை கொண்டது மெய்க்காதல்தான். ஆனால், தான் பிறந்த கணிகையர் குலம் காரணமாகப் பொருள்விலை யாட்டியாகத் தன்னை உதயகுமரன் காணும் இழிநிலைக்கு அஞ்சியே, அக்காதலை ஏற்க மணிமேகலை தயங்குகிறாள் எனலாம். நால்வருணத்திலும் சேராமை கருதி, ‘வருணக்காப்பிலள்’ எனத் தன்னை உதயகுமரன் ஏசுவதாகச் சுதமதியிடம் மணிமேகலை பகிர்ந்துகொள்வதிலிருந்து, அவளது ‘பாதுகாப்பற்ற வாழ்நிலைமையின் பேரவலத்தைத் தெளியலாம். காஞ்சனன் வாளுக்கு உதயகுமரன் இரையாகாமலிருந்திருந்தால், ஒருவேளை

உதயகுமரனும் மணிமேகலையும் இணைந்திருக்கக்கூடும்! ஆனால், அப்போதும் கணிகையர் குலம் எனப் பழிக்கப்படுவதில் இருந்து மணிமேகலை தப்பியிருக்க முடியாது என்பதுதான், சாத்தன் காட்டும் நெஞ்சையள்ளும் காவியமாக மணிமேகலை திகழ்வதற்கான காரணங்களைப் பின்வருமாறு நேர்க்கோட்டுக் கதையமைப்பை மணிமேகலை பின்பற்றவில்லை

1.  கொத்துக் கொத்தாய்த் தோன்றி விரியும் கிளைக்கதை வேர்ப்பூக்களைக் கோத்துத் தோட்டமாக்கியுள்ளது. இத்தகைய நேர்க்கோடல்லாத எழுத்தாக்கத்தில் பொதுவாகக் காணப்படும் ‘வாசிப்புச்சுவை வறட்சி, வியக்கத்தக்க விதத்தில் மணிமேகலையில் தவிர்க்கப்பட்டுள்ளது. மையத்தை நோக்கி ஒருமைப்பட்டுத் தேங்காமல், விளிம்புகளை நோக்கிச் சிதறிப் பரவிக் கதைக்குள் கதைகளாகப் பன்மைப்பட்டு விரிவதுதான், மணிமேகலையின் வலிமையாகும். பிரதியைப் பல்வேறு பெண் பாத்திரங்களின் உள்வெளியாட்டமாக்கித் தற்காலத்தன்மையை எப்போதும் தக்கவைத்துக்கொள்ளும் ‘படைப்பு விளையாட்டை’ச் சாத்தனார் மணிமேகலையில் வெற்றிகரமாகச் சாதித்துள்ளார்.

2.மானுட வாழ்வின் எல்லையற்ற சாத்தியப்பாடுகளைத் திரும்பத் திரும்பப்‘பாத்திர மாதிரிகள்’ மூலம் பரிசோதித்துப் பார;க்கும் எத்தனிப்பைக் கூர்மையான விழிப்புடன் பேரிலக்கியப் பனுவல்கள் செய்ய முனைகின்றன. மணிமேகலையில் சாத்தனார; செய்ய முனைந்ததும் அதைத்தான். காளிதாசனின் சாகுந்தலத்தில் காதலே வாழ்வின் சாரமாகிறது. இளங்கோவுக்குக் கற்பே கண்ணகியாகி ஒளிரும் விழுமியமாகிறது. கம்பனுக்கு ராமன் மானுடம் வென்றதன் அடையாளமாகிறான், ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டும் ஒதெல்லோவும் எஞ்சும் வெறுமையின் சாட்சியங்களாகின்றனர;. ஆனால், சாத்தனாரின் மணிமேகலை, ஒற்றை மணிமேகலையின் கதை மட்டுமன்று. சித்திராபதி, வயந்தமாலை, மாதவி, சுதமதி, கோதமை, மணிமேகலா தெய்வம், தீவதிலகை, ஆதிரை, காயசண்டிகை, சம்பாவதித்  தெய்வம், கந்தில்பாவை, விந்தாகடிகை, மருதி, விசாகை, வாசந்தவை, இராசமாதேவி, அமரசுந்தரி, அமுதபதி, தாரை, வீரை, இலக்குமி, நீலபதி, சாலி, சிந்தாதேவி, நீலி, வாசமயிலை, பீலிவளை போன்ற இருபதுக்கும் மேற்பட்ட பெண்களின் கண்ணீர;க்கதையே மணிமேகலை யாகியுள்ளது. ஆண்முதன்மைச் சமூகத்தில் வாழ முடியாமல் வஞ்சிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டோரின் ஏக்கமும் பொருமலும் அழுகையும் வெஞ்சினமும் கேலிச்சிரிப்பும் அறச்சீற்றமுமான பெண்குரல்களின் கூட்டுக்கதைத் தொகுப்பே.

3.பௌத்த சமயத்தைப் பரப்புவதைத் தன் முதன்மையான நோக்கமாகக் கொண்ட ‘பிரச்சார இலக்கியமாகச் சாத்தனாரின் மணிமேகலையை விமர்சிப்பது சரியானதாகத் தோன்றவில்லை. சங்க இலக்கியத்தைத் தவிரச் ‘சமயம் சாராத இலக்கியமென்று’ வேறு எதுவும் தமிழில் 20ஆம் நூற்றாண்டுக்குமுன் இருப்பதாகத் தெரியவில்லை. குறளும் சிலம்பும் சமயப்பொதுமையைப் பேசினாலும், அவற்றுக்குள் சமணச்சார்பான குரல்களுக்கும் இடமுண்டு! அருளாளாளர்களாகப் போற்றப்படும் சைவ நால்வரின் பாடல்களிலும், பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்களிலும் சமண பௌத்தக் காழ்ப்புணர்வு இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. எனவே, ‘பௌத்த சமயப் பிரச்சார இலக்கியம்’ எனக் கூறிச் சாத்தனாரின் மணிமேகலையைப் புறந்தள்ளி, அதன் இலக்கிய மதிப்பைக் கீழிறக்க முனைவதில், ‘பௌத்த எதிர்ப்பு’ அரசியல்நோக்கு ஒளிந்துள்ளதாகத்தான் கருத வேண்டியுள்ளது. கணிகையர் வாழ்வை வெறுத்துக் குடும்ப வாழ்விற்குள்ளும் சிறைப்பட்டுவிடாமல் பிக்குணியாக முடிவு செய்யும் மணிமேகலையின் மனம், அச்சமும் மடமும் நாணமும் பயிர்ப்பும் பேணும் தமிழ் மரபில் மிகப்புரட்சிகரமான ஓர் ஆளுமையின் காலத்தை மீறும் வெளிப்பாடேயாகும். மேலும், ‘அமுதசுரபி’ என்ற பாத்திரப்புனைவும், ‘ஆபுத்திரன்’ என்ற மாந்தன் படைப்பும் மணிமேகலையின் இலக்கியத் தகுதியை உலகம் முழுமைக்கும் பொதுமையானதாக்கிப் பேரிலக்கியப் பனுவலாக்கிவிடுகின்றன!

4. மணிமேகலையைப் பிற தமிழிலக்கியப் பனுவல்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் சிறப்பம்சங்களுள் முதன்மையானது, அதன் சாதியெதிர்ப்புப் பண்பாகும். மணிமேகலை அளவுக்குச் சாதி எதிர்ப்பைத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வெளிப்படையாகவும் பதிவு செய்த தமிழிலக்கியப்பிரதி வேறில்லையென்றுகூடக் கூறிவிடலாம். அந்தணர் உயர்வைத் தீவிரமான கருத்தியல்தளத்தில் வைத்து விவாதித்து மறுத்துரைத்த பெருமையும் மணிமேகலைக்கே சிறப்பாக உரியதாகும். ஆபுத்திரன் கதையைக் கூர்மையாக வாசிக்கும் எவரும், வேதம்-வேள்வி-அந்தணர்-சாதி- என்ற மேட்டிமைக் கருத்தியல்களைச் சாத்தனார் தகர்க்கும் புரட்சியைப் புரிந்து கொள்வர்.ஒருவேளை இக்காரணத்தால்தான், தமிழ்ச்சூழலில் மணிமேகலை அதற்குரிய சிறப்பான முதன்மையளிக்கப்பட்டுப் போற்றப்படவில்லையோ! சாதிப்பொதுமையைப் பேசும் பெரியபுராணத்துடன் சாதியெதிர்ப்பைப் பேசும் மணிமேகலையை ஒப்பிட்டால், ஒருவேளை உண்மை விளங்கக்கூடும்! சாதியெதிர்ப்புடன் ஆணாதிக்க எதிர்ப்பும் மணிமேகலையில் அழுத்தமாகக் காணப்படுகிறது. ஒரு தீவிரமான பெண்நிலைப் பிரதியாக மணிமேகலை திகழ்வதேகூட, அது பிரச்சார இலக்கியம் என்றும், மிகைப்புனைவு இலக்கியம் என்றும் கூறப்பட்டுப் பொதுவாசகவெளியிலிருந்து அந்நியப்படுத்தப்படுவதற்குக் குறிப்பிடத்தக்க காரணமாகியிருக்கலாம்!

5.தமிழிலக்கிய வெளியில் சொல்லப்படாத கதையொன்றை மணிமேகலை சொல்ல முனைவதுதான், அதன் தனிப்பெருமையாகும். ஆண்களால் வஞ்சிக்கப்படும் பெண்களைக் காட்டி, அப்பெண்களுக்காகப் பரிவுடன் குரலெழுப்ப மணிமேகலை துணிந்துள்ளதைப் ‘பெருமையும் உரனும் ஆடூஉமேன’ எனக் கருதிய தமிழ் மரபில் நிகழ்ந்த புதிய பாய்ச்சலாகத் துணியலாம். ஆண்கள் பெண்களிடம் வேண்டுவது இன்பம் ஒன்றைத்தான் என்பதைத் திட்டவட்டமாகச் சிறிதும் ஐயமேதுமின்றிப் புரிந்துகொண்டவளாய்ச் சித்திராபதியைச் சாத்தனார் படைத்துள்ளார். இப்படிப்பட்ட கடைந்தெடுத்த ஆணாதிக்க இன்பவாதிகளுக்கு எதிராகத்தான், கணிகையர் வாழ்வின் கொண்டாட்டங்களுக்காகச் சித்திராபதி வாதிடுகிறாள். இம்முற்றெதிர் நிலையை ஏற்க மறுத்துக் குலமாதராகியும் தப்பிக்க முடியாத சூழலில்தான், வேறு வழியின்றிப்  பெண் துறவியாகிறாள் மாதவி. சித்திராபதியையும் மாதவியையும் உற்றுநோக்கும் வாய்ப்புப் பெற்ற மணிமேகலை, அவர்களது ஏதோ ஒன்று குறையும் வாழ்வைப் பிறர்நலம் பேணும் பொதுமை மூலம் நிறைவாக்கக் கருதியே, அமுதசுரபி ஏந்திய பௌத்தப் பிக்குணியாகிறாள். இம்மூன்று பெண்கள் மட்டுமல்லர்; மணிமேகலையில் வரும் ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒருவகையில் குறியீட்டுப் பொருண்மையுடையவர்களாகவே புனையப்பட்டுள்ளனர்.manimegalai 6

6.குழந்தைப்பருவத்தில் தாயை இழந்த அந்தணப் பெண்ணான சுதமதி, பு+க்கொய்யத் தனியே சென்ற ‘குற்றம்’ காரணமாக, மாருதவேகன் என்பவனால் கெடுக்கப்பட்டுத் தனிமையில் தவிக்குமாறு விடப்படுகிறாள்! மணிமேகலா தெய்வமும், பளிக்கறையிலிருந்து மணிமேகலை வெளியே சென்றால் உதயகுமரனால் அவள் கைப்பற்றிக்கொள்ளப்படுவாள் எனக் கூறியே எச்சரிப்பதாகச் சாத்தனார்.காட்டுகிறார். மருதிக்கும் விசாகைக்கும்கூட, இதே காமத்தொல்லைதான் காவியத்தில் நேர்கிறது. மண உறவுக்கு வெளியே பிறனோடு நேர்ந்த உறவின் விளைவாகச்  சாலிக்குத் துன்பமயமாகிறது வாழ்வு. மாதவிக்காகவும் மணிமேகலைக்காகவும் கண்ணீர் பெருக்குகிறாள் வயந்தமாலை. இராகுலனை இழந்த இலக்குமி தீப்பாய்கிறாள். மகன் பறிகொடுத்த துக்கத்தை ஆற்றியிருக்க இயலாமல் அழுதுபுலம்பித் தவிக்கிறாள் இராசமாதேவி. துக்கத்தால் வாடியிருப்போருக்குத் தேறுதல் சொல்வதே வாசந்தவைக்கு வாழ்வாகிறது. மகன் சாரங்கலன் உயிரை மீட்டுத் தருமாறு சம்பாவதித் தெய்வத்துடன் சண்டையிட்டுப் பலன் பெறாமல் இறந்துபடுகிறாள் கோதமை. கணவன் காஞ்சனனுடன் சேரமுடியாமல் விந்தாகடிகையால் விழுங்கப்பட்டுக் காயசண்டிகை ஊழ்வினைப்படுகிறாள். தீயும்கொல்லாத் தீவினையாட்டியாகிறாள் ஆதிரை. தருமதத்தனையும் விசாகையையும் முறைமை மீறியவர;களாகப் பழிக்கும் ஊரார; திருந்தக் கந்தில்பாவையே வந்து அறிவுறுத்த வேண்டியுள்ளது. கணவன் சங்கமன் வஞ்சனையால் கொல்லப்பட்டதைத் தாங்கமுடியாமல் மலைமீதேறிக் கீழே விழுந்து உயிர் துறக்கிறாள் நீலி. நெடுமுடிக்கிள்ளியுடன் ஒருமாதம் உறவாடிவிட்டுத் திடீரெனக் காணாமல்போகிறாள் நாகக்கன்னி பீலிவளை. இப்பெண்மக்களின் இன்னல்களைப் பொறுக்கமுடியாமல்தான், ‘அணிநகர் தன்னை அலைகடல் கொள்க’ எனக் காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல் விழுங்குமாறு சாபமிடுகிறாள் மணிமேகலா தெய்வம் என்றும், மணிமேகலைப் பிரதியை மறுவாசிப்புச் செய்யவியலும்!

7. கண்ணீர் + வெறுமை = பெண்வாழ்வு. இதுதான் சாத்தனார் காட்டும் சமன்பாடு. சாத்தனாரின் உலகத்தில் வாழும் எந்தப் பெண்ணுக்கும் அமைதியில்லை. அது ஆண்களின் உலகம். அங்குப் பெண்களுக்குத் துக்கமே இயல்பானது என்கிறார் சாத்தனார். புலன்வழிப்பட்டு அலைபாயும் மானுடவாழ்வைத் துன்பப்பெருக்காகக் காணும் பௌத்த தருமத்தைப் பின்பற்றித்தான் சாத்தனார் இவ்வாறு புனைந்துள்ளார்  என்பது பகுதி உண்மைதான்; ஆண்களின் துக்கத்துக்கும் பெண்களின் துக்கத்துக்குமான அடிப்படை வேறுபாட்டைத் துல்லியமாகச் சாத்தனார் தெளிந்துள்ளார் என்பதுதான் முழுமையான மெய்ம்மையாகும். இன்பத்தை இழப்பதை ஆண் துக்கமாகக் காணும்போது, அன்பை இழப்பதைப் பெண் துக்கமாகக் கொள்கிறாள். இதுதான் உதயகுமரனும் மணிமேகலையும் வேறுபடும் இடமாகும். தன் ஆளுமையை விரிவுசெய்வதில் ஆண் கவனம் செலுத்தும்போது, தன்னுணர்வைத் தகர்ப்பதில் பெண் திசைகாட்டியாகிறாள். இதுதான் ஆபுத்திரனும் மணிமேகலையும் வேறுபடும் இடமாகும். மரணத்தின்முன் மானுடர் அனைவரும் மண்டியிடவேண்டும் என்றாலும், அதற்குமுன் நாளும்நாளும் ஆண்களிடமிருந்து பலவகைகளிலும் தப்பித் தப்பிப் பிழைக்கப் பெண்கள் பாடுபடுவதுதான் யதார்த்தமாயுள்ளது. இரண்டாம்பாலினமாகப் பெண்கள் முடக்கப்படும் இந்த யதார;த்தத்தைச் சாத்தனார் நுட்பமாகப் பதிவு செய்துள்ளார்.

manimegalai 78.கன்னிக்காவல் – கணவன்காவல் – பிள்ளைகள்காவல் – பிறர் நெஞ்சு புகாமை – பிற ஆடவரைப் பாராமை – தம் நிறையைத் தாமே காக்கும் நிறைக்காவல்- பரத்தமைத் திரிபை வெறுத்துப் பத்தினிக்காவலை விரும்பி ஏற்றல்- கொண்ட கணவனையல்லாமல் தெய்வமும் பேணாமை- தாய்மையில் திளைத்தல் இல்லறம் சிறக்க உழைத்தல்…… இப்படித்தான் ஆண்டாண்டுக் காலமாகக் கருத்துச்சங்கிலிகளால் பெண்கள் இறுக்கிக் கட்டப்பட்டுள்ளனர. இந்த இறுக்கத்தைச் சாத்தனார்  ‘முற்பிறவி- மறுபிறவி- பாவம்- புண்ணியம்- பற்று- வினைத்தொகுதி- வினைப்பயன்- துக்கம்- தவத்திறம்- தருமம்- பிறப்பறுத்தல்’ எனப் பல பௌத்தச் சொல்லாடல்களுடன் பொருத்தித் தளர்த்தி, ‘உலக வாழ்வில் உள்ளன யாவும் வெளிப்படுமாறு’ காவியமாக்கியுள்ளாரர். ஆபுத்திரனுக்குச் சிந்தாதேவி அருளிய அமுதசுரபியைக்கூடப் பயன்படாதவிடத்துக் ‘குமரியாகவே மூப்பெய்திவிடுகிற பெண்ணாகத்தான்’ சாத்தனார்  காண்கிறார். தன்னிருப்பிற்குப் பயனில்லாமல் போகிறதே என்றெண்ணித் தனித்துயரில் உழன்று ஆபுத்திரன் வருந்த நேர்கிறது. இந்த வருத்தம் மணிமேகலைக்கு வருவதில்லை. மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளுமே அறமெனக் கூறி, ஆபுத்திரனையும் அவள் தெளிவிக்கிறாள். மக்களின் மகிழ்ச்சியே அவளுக்கு அறமாகிறது, அமுதசுரபிக்குப் பயனில்லாமல் போனாலும் மக்களுக்குப் பசிப்பிணி தொலைந்தால் போதும் என்பதுதான், மணிமேகலையின் நிலைப்பாடு! ‘மணிமேகலைத் துறவு’ என இக்காவியத்திற்குச் சாத்தனார் கொடுத்திருக்கும் வேறுபெயர், துக்க நிவர்த்திக்குத் துறவைப் பரிந்துரைக்கும் அவர்தம் பௌத்த சமயப் பிடிப்பாலன்று, தன்னொத்த பெண்களின் துயரைக் காணச் சகியாமல் ‘பாதுகாப்பரணாகக் கருதி’மணிமேகலையெடுத்த ‘பிக்குணி’ முடிவின் பொருட்டுத்தான் என்றும் துணியலாம்.

9.சுடுகாட்டைப் பற்றிய விரிவான சித்திரத்தைச் ‘சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை’ வாயிலாகப் புலப்படுத்தும் சாத்தனார;, இந்த ஆண்களின் எதேச்சதிகார உலகம், சமத்துவமின்மையின் சிறைவெளியாகிப் பெண்களுக்குச் ‘சுடுகாடு’ போலக் காணப்படுவதைப் பல்வேறு பெண்களின் அவலக்கதைகள் மூலம் குறிப்புணர்த்துகிறார். வஞ்சிக்கப்பட்ட பெண்மைக்குச் சுதமதி அடையாளமாகிறாள், பழிக்கப்பட்ட பெண்மைக்கு விசாகை சாட்சியமாகிறாள், முடிவற்று நீள்வதாய்ச் சாத்தனார் காட்டும் இப்பெண் வரிசையில், ‘சித்திராபதி-மாதவி-மணிமேகலை’ ஆகிய மூவரும், காவியக் கட்டுமானத்தில் முதன்மையான மையத்திற்குரியவர;களாகின்றனர;. கணவன் இறந்தபின் தீக்குளிக்கும் பத்தினிப் பெண்ணின் வாழ்வைச் சித்திராபதி வெறுக்கிறாள், அது ஆடவரின் சதி என்பதுதான் அவளது புரிதலாகும். ‘பிக்குணி வாழ்வு’ வெறுமையானது எனக் கருதும் சித்திராபதி, கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப் பயன் பல பெற்றுச் செழிக்கும் கணிகையர் வாழ்வே மணிமேகலைக்குரியது என்கிறாள். இதற்கு மாறாகத் தவநெறியில் செலுத்துவதல்லாது, திருந்தாச் செய்கைத் தீத்தொழிலில் மாபெரும் பத்தினி மகளான மணிமேகலையைச் சிதையவிடேன் என்கிறாள் மாதவி. சித்திராபதியும் மாதவியும் இவ்வாறு கூறுவதற்குத் தத்தம் உள்ளுணர்வின் அடிப்படையில் அவர்கள் இருவரும் ஆண்களை  ஐயுறுவதே காரணமாகும். இந்த ஐயம், மணிமேகலைக்குள்ளும் இருக்கிறது. அதனால்தான், ‘ஆடவர் செய்தி அறிகுநர் யார்?’ எனக் கேட்டு, உதயகுமரனைப் பார்த்து அவளும் திகைக்கிறாள். எனவே, ‘சித்திராபதி-மாதவி-மணிமேகலை’ ஆகிய இம்மூவரும், அவரவர் பார்வை வேறுபாடுகளுக்கப்பாலும் (சித்திராபதி-குலப்பெருமை பேசிக் கணிகையர் வாழ்வைப் போற்றிக் கொண்டாடுபவள்; மாதவி- கோவலனை இழந்தபின் கலைவாழ்வை உதறிவிட்டுப் பௌத்தமடத்தில் அடைக்கலமானவள்; மணிமேகலை- பிறவிப்பேறாகக் கையில் அமுதசுரபியை ஏந்திப் பசிப்பிணி தீர்க்கும் பிக்குணியானவள்) பெண்களின் இழிநிலைக்குக் காரணமாகும் ஆண்களைக் கூர்மையாக மதிப்பிட்டுப் புறந்தள்ளுகிறவர்கள் என்ற வகையில், தம்முள் ஒன்றுபட்டுள்ளவர்களே எனலாம்.

10. ‘துயர்நிலை உலகம் காத்தலின்றி உயர்நிலை உலகம் விரும்புதல் கூடாது’; ‘எவ்வுயிர்க்காயினும் இரங்கல் வேண்டும்’ என்பவை மணிமேகலையின் சாரமான கருத்துகளாகும். ‘பத்தினி இல்லோர் பலவறம் செய்யினும் புத்தேள் உலகம் புகார்’ என்ற வைதீகக்குரலை மணிமேகலை ஏற்கவில்லை. ‘புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை’ என்பதுதான், சாத்தனாரின் விழுமிய பார்வையாகும். ஆன்மகன் அசலன், மான்மகன் சிருங்கி, புலிமகன் விரிஞ்சி, புரையோர் போற்றும் நரிமகன் கேசகம்பளன், கடவுள் கணிகையான திலோத்தமையின் பிள்ளைகளே வசிட்டரும் அகத்தியரும் எனக் கூறிக் கற்புத் தவறித் தன்னைப் பெற்றவளாகச் சாலியைப் பழிக்கும் அந்தணர் வாயை அடைக்கிறான் ஆபுத்திரன்.

நுதல்விழி நாட்டத்து இறைவனான சிவன் முதலாகப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமான சதுக்கப்பூதம் ஈறாக உள்ள அனைத்துக் கோவில்களிலும், “வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின்” என்றுதான் சாத்தனார் கூறுகிறாரேயன்றிப் பௌத்தப் பீடிகைகள் மட்டுமே புகாரிலிருக்க வேண்டுமெனப் பிடிவாதம் பிடிப்பதில்லை. “பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும், செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்;” எனச் சமாதானக்கொடியைத்தான் எங்கும்  அவர் பறக்கவிடுகிறார். பிற சமயத்தாரின் கருத்துகளைப் ‘படிற்றுரை’ அதாவது பொய்யானவை எனக் கூறி மணிமேகலை விலக்குவதாகக் காட்டுவது, சாத்தனாரின் பௌத்தப் பிடிப்பைக் காட்டுவதேயல்லாமல், பிற சமயக் காழ்ப்பையும் காட்டுவதாகக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், சாத்தனார் சமயப் பொதுமைவாதியல்லர்; சைவ மற்றும் வைணவ  சமய அருளாளர்களைப் போல், அவர் தேர்ந்த சமயவழியில், முதலும் முற்றுமாய் அவர்  ஒரு பௌத்தர்! ஆம்! மானுடர்; அனைவரும் சமம் எனப் பேசும் பௌத்தர் அவர்!

நன்றி : அம்ருதா இலக்கிய இதழ்

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*