பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் விதிமீறல் இல்லை : தேர்தல் ஆணையம் முடிவு ?…

தொடர்ந்து மதத்தை பற்றி பேசும் பிரதமர் மோடியின் பேச்சு தேர்தல் விதிமீறல் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் பதில் அளிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் மோடி முஸ்லிம்கள் நாட்டின் வளங்கள் மீது முதல் உரிமை உள்ளவர்கள் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார் என்றும், மக்களின் செல்வங்கள் முஸ்லிம்களுக்கு மறுவிநியோகம் செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள் என்றும் பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். அதே போல உத்திரபிரதேச மாநிலம் பில்லிபித்தில் பேசிய பிரதமர் மோடி, ராமர் கோவில் திறப்பு விழாவில் காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் கலந்து கொள்ளவில்லை என்றும், இவர்களுக்கா உங்கள் ஓட்டு என்றும் பேசியிருந்தார்.

மதங்களின் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் செய்வது தேர்தல் விதிமுறை விதிமீறல் என்பதால் பிரதமர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்று கூறி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
அதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த வழக்கில் பிரதமர் பேச்சு தேர்தல் விதிமீறல் இல்லை என்று பதில் அளிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி அப்பட்டமாக வெறுப்பு பேச்சை கக்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.