சென்னை அருகே உள்ள எண்ணூர் கழிமுகத்தை உதாசீனப்படுத்தினால், வட சென்னைக்கு ஆபத்து ஏற்படும் என நடிகர் கமல்ஹாசன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கொசஸ்தலை ஆற்றின் கழிமுகத்தில் உள்ள ஆயிரத்து 90 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.
வல்லூர் மின் நிலையமும், வட சென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலை ஆற்றில் கொட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ள கமல்ஹாசன், இதற்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடியும் அரசு அலட்சியமாய் உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
நில வியாபாரிகளுக்கு உதவுவதும், ஏழைகளுக்கு உதவ மறுப்பதுமான எந்த ஒரு அரசும், நல்ல ஆற்றை புறக்கணிக்கும் உதவாக்கரைதான் எனவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படைவீதி குப்பத்து மீனவ நண்பர்களின் குரலை, ஊடகங்கள் உயர்த்த வேண்டும் எனவும் நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.