ஜெயலலிதா கைரேகை உள்ளிட்ட ஆவணங்களுடன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளர் டிசம்பர் 8ஆம் தேதி நேரில் ஆஜராக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதற்கு எதிராக தி.மு.க வேட்பாளர் சரவணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்த மருத்துவர் சரவணன், அதிமுக வேட்பாளராக ஏ.கே.போசை அங்கீகரித்து B படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தது குறித்து சந்தேகம் எழுப்பியிருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோது, அவரது ஒப்புதலுடன் கைரேகை பெறப்பட்டதா என்பது தொடர்பான இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டபோது, அங்கு கைரேகை உள்ளிட்டவை பெறப்பட்டிருக்கும் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அந்த ஆவணங்களுடன் சிறைக் கண்காணிப்பாளர் டிசம்பர் 8ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
இதேபோல இந்திய தனித்துவ அடையாள ஆணையமும் ஜெயலலிதா கைரேகை அடங்கிய ஆதார் விவரங்கள் இருந்தால் தாக்கல் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Jayalalithaa Finger print case