நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை மீண்டும் டிச.26 முதல் 31 வரை சந்திக்கவிருக்கிறார். இதற்காக பாதுகாப்பு கேட்டு ரசிகர்மன்ற தலைவர் சுதாகர் கமிஷனர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளார்.
கடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதன் முறையாக ரசிகர்களை ரஜினி சந்தித்தார். “நான் ஆண்டவனின் கருவி இன்று நான் நடிகனாக வேண்டும்” என்று அவர் விரும்பினார். அதேபோல் நாளை நான் என்னாவாக வேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிப்பார். முரட்டு தைரியம் கூடாது ரஜினிகாந்துக்கு பயம், தயக்கம் ஆகவே அவர் ஒவ்வொரு முடிவையும் எடுப்பதில் அதிகமாக யோசிக்கிறார் என்கிறார்கள்.
“ஆற்று நீரில் காலை வைக்கும்போது முதலைகள் உள்ளது தெரிகிறது. அப்போது போய், முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்ற முரட்டு தைரியம் கூடவே கூடாது” என்று முதல் நாள் ரஜினிகாந்த் பேசினார். இறுதிநாளன்று பேசும்போது தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டுவிட்டது. போர் வரும் போது பார்த்து கொள்ளலாம். ஆண்டவன் இருக்கான் என்று தெரிவித்தார். இந்த பேச்சு அப்போது பரபரப்பானது.
32 மாவட்டங்களில் சுமார் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். மீதமுள்ள 17 மாவட்ட ரசிகர்களை அடுத்த மாதமே சந்திப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சந்திக்கவில்லை.
இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையரிடம் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நிர்வாகி சுதாகர் மனு ஒன்றை அளித்தார். அவரது மனுவில்:
“வரும் டிச.26 முதல் 31 வரை கோடம்பாக்கம், விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரஜினி தனது ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார்.
தமிழகம் முழுவதிலுமிருந்து இதற்காக ரசிகர்கள் வர உள்ளனர். தினமும் காலை 8 மணியிலிருந்து மதியம் 3 மணிவரை ரசிகர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துக்கொள்கிறார். தினமும் ஆயிரம் ரசிகர்கள் வரை இதில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்க வேண்டும்.” என்று கேட்டுள்ளார்.
இதன் மூலம் மீண்டும் ரஜினி பொதுவெளிக்கு வந்துள்ளார். கடந்த முறை சிஸ்டம் கெட்டுவிட்டது, போர் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பேசி பரபரப்பூட்டிய ரஜினி இந்தமுறையும் அரசியல் கருத்துக்களை கூறுவாரா? என்பது அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.