திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரியின் கருணாநிதி நினைவிடம் நோக்கிய அமைதிப் பேரணி இன்று காலை தொடங்கியது.
முன்னாள் முதல்வா் கருணாநிதி உயிருடன் இருந்த காலத்தில் அவரது மகன் அழகிரிக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளா் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.
பின்னா் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கடந்த 2014 மார்ச் மாதம் கட்சியில் இருந்து அழகிரி நீக்கப்பட்டார். அதன் பின்னா் கருணாநிதி அழகிரியை மீண்டும் கட்சியில் இணைக்க வில்லை.
கடந்த மாதம் கருணாநிதி உயிாிழந்த நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதி தனது குடும்ப உறுப்பினா்களுடன் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற அழகிரி தனது தந்தையிடம் எனது ஆதங்கங்களை தெரிவித்துள்ளேன்.
கருணாநிதியின் உண்மையான ஆதரவாளா்கள் அனைவரும் என் பக்கம் தான் உள்ளனா் என்று தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பினார்.
இந்நிலையில் செப்டம்பா் 5ம் தேதி தனது ஆதரவாளா்கள் 1 லட்சம் பேருடன் கருணாநிதி சமாதியை நோக்கி அமைதி பேரணி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
இந்த பேரணிக்கு காவல் துறையினரும் அனுமதி வழங்கியுள்ளனா். பேரணிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே வாலாஜா சாலையிலிருந்து காலை 10 மணிக்கு அழகிரி தலைமையில் தொடங்கும் அமைதிப் பேரணி வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைகிறது.
இதனைத் தொடா்ந்து தனது அரசியல் பயணத்தின் அடுத்தக்கட்ட நகா்வு குறித்த முக்கிய அறிவிப்பை அழகிரி வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.