கடந்த 2013-ம் ஆண்டு, சோலார் பேனல் தகடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர் அளித்த பாலியல் புகார் அடிப்படையில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீதும், காங்கிரஸ் தலைவர் கே.சி வேணுகோபால் மீதும் போலீஸார் பலாத்கார வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரம், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று போலீஸாரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
அதில் சரிதா நாயரின் சோலார் தகடு நிறுவனத்தை ஊக்கப்படுத்தும் வகையில், அவரிடம் சட்டத்துக்கு புறம்பான வகையில் பாலியல் தொடர்பு வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் முதல்தகவல் வெளியே தெரியாத நிலையில் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
சோலார் பேனல்களை பொருத்திக் கொடுக்கும் நிறுவனம் நடத்திய சரிதா நாயகர், பண மோசடி செய்து விட்டதாக கைது செய்யப்பட்டார்.
அதன்பின் ஜாமீனில் வெளியேவந்த சரிதா நாயர் பல்வேறு புகார்கள் அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் மீது சுமத்தினார்.
சோலார் பேனல் பொருத்தும் பணியைத் தனது நிறுவனத்துக்கு வழங்குவதற்குப் பலருக்கும் பணம் லஞ்சமாக கொடுத்ததாகவும், பணத்திற்குப் பதில் சிலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.
சோலார் பேனல் பொருத்தும் பணி தொடர்பாக தான் பலமுறை உம்மன் சாண்டியை சந்தித்து பேசியுள்ளதாகவும், அப்போது உம்மன் சாண்டியும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். .
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை உம்மன்சாண்டி மறுத்தார். இதேபோல கே.சி.வேணுகோபாலும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
சரிதா நாயர் புகார் தொடர்பாக சிவராஜன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் முன்பு உம்மன் சாண்டி ஆஜராகி விளக்கமளித்தார். சரிதா நாயரும் விசாரணை கமிஷனில் இதே குற்றச்சாட்டை வலியுறுத்தினார்.
சரிதாநாயர் புகார் தொடர்பாக திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான சரிதா நாயர் தனது குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பரபரப்பு வாக்குமூலத்தையும் அளித்தார்.
சமீபத்தில் கேரள குற்றப்பிரிவு காவல்துறையிடமும் உம்மன்சாண்டி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது சரிதாநாயர் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் உம்மன் சாண்டி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதில் கடந்த 2013-ம் ஆண்டு உம்மன் சாண்டியை அவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்திக்கச் சென்றபோது தன்தொழிலுக்கு உதவுவதாகக்கூறி தன்னை பலாத்காரம் செய்தார் என்று புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் உம்மன்சாண்டி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட சிவராஜன் ஆணையம் அளித்த 1,073 பக்க அறிக்கையைக் கடந்த செப்டம்பர் மாதம் அளித்தது.
அதில் சரிதாவின் சோலார் பேனல் தொழில்நிறுவனத்தை ஊக்கப்படுத்த அவரிடம் அரியல் தலைவர்கள் பாலியல்ரீதியான சலுகைகளைக் கேட்டுள்ளனர்.
சரிதா குறிப்பிட்டுள்ள அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
பாலியல் பலாத்கார வழக்கு செய்யப்பட்ட கே.சி.வேணுகோபால் தற்போது ஆலப்புழா தொகுதி எம்.பி.யாகவும், கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.