பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் அமமுக இடம்பெறாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ள சசிகலாவைப் சந்திப்பதற்காக புறப்படும் முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் கூறியதாவது:
சர்க்கார் திரைப்படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. ஜெயலலிதாவை இழிவு படுத்தும் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தால் அதனை எதிர்ப்பேன். கோமளவல்லி என்பது தம்முடைய பெயரே அல்ல என்று ஜெயலலிதாவே என்னிடம் தெரிவித்துள்ளார். 2001 – 2002 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தம்மை கோமளவல்லி எனக் கூறிய போது, தமது பெயர் கோமளவல்லி அல்ல என ஜெயலலிதாவே என்னிடம் கூறியுள்ளார். அதுபோன்ற பெயருள்ள எதிர்மறைப் பாத்திரத்திலும் தாம் நடித்ததில்லை எனவும் கூறினார். இலவசப் பொருட்கள் வழங்குவது குறித்து படத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை, மக்களைப் பற்றித் தெரியவில்லை என்பது இதில் இருந்தே தெரிகிறது. வளர்ச்சியடையாத நாட்டில் இலவச பொருட்கள் வழங்குவது தவறல்ல. அதிலும், அதிமுக வழங்கிய இலவச பொருட்களை மட்டுமே படத்தில் சுட்டிக்காட்டி இருப்பதாக தெரிகிறது. திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச தொலைக்காட்சிகளையும் இவர்கள் ஏன் காட்டவில்லை. மேலும், ஜெயலிலதா இருக்கும் போது இதுபோன்ற படத்தை எடுத்திருந்தால் இவர்களை வீரர்கள் என பாராட்டலாம்.
பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவது குறித்து கேட்கிறீர்கள். பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் திமுக இருந்தால் அதில் நாங்கள் சேர மாட்டோம். கடந்த 2014ல் ஜெயலலிதா தலைமையில் தனித்து நின்று 37 எம்பிக்கள் வென்றது போல், தற்போதும் அமமுக தனித்து நின்றே 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.