தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக மாறி, வட தமிழக கடற்கரையை நெருங்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று விட்டதாகவும், அடுத்த 6 மணி நேரத்தில் புயலாகவும், நாளை தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
30ஆம் தேதி மாலை வட தமிழக கடற்கரை, தெற்கு ஆந்திர கடற்கரையை நெருங்கக் கூடும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இதனால் வட தமிழக கடற்கரைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் 27, 28 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக் கடலுக்கும், 29, 30 மற்றும் 1 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடலுக்கும் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்கள், நாளைக்குள் கரை திரும்பவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையைத் தொடர்ந்து தமிழக துறைமுகப் பகுதிகளில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகை, கடலூர், புதுச்சேரி, ராமேஸ்வரம், காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் யாரும் ஆழ் கடல் மீன்பிடிப்புக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.