புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டு இருந்த வழிபாட்டு தலங்கள் முதல்வர் நாராயணசாமி உத்தரவை தொடர்ந்து இன்று திறக்கப்பட்டது.
குறிப்பாக கடந்த 80 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த பிரசித்தி பெற்ற காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் பகவான் ஆலயம் இன்று திறக்கப்பட்டது.
சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் தரிசனம் செய்ய வட்டமிடபட்டுள்ளது, பக்தர்களுக்கு கிருமி நாசினி கொடுப்பது, தெர்மல் கருவி பரிசோதனை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் அர்ச்சனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தரிசனம் மட்டுமே செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ‘நலன்’ குளத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு குளத்தின் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ‘
10 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளும், 60 வயதிற்கு மேல் உள்ள முதியவர்களும் கோவிலுக்கு வருவதை தவிர்க்கலாம் என்றும், வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு கோவில் வருவதற்கு தற்போதைக்கு அனுமதி கிடையாது என்றும் காரைக்கால் துணை ஆட்சியர் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கபட்டாலும் குறைவான அளவிலான பக்தர்களே இன்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.