தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று (23.11.2020) அண்ணா அறிவாலயத்தில் கழகத்தின் உயர்நிலைச் செயல்திட்டக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் வருமாறு:
மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக முன்னணியினர் இருபது பேர் பங்கேற்கும் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற பரப்புரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அந்தப் பிரச்சாரப் பயணத்தை முதற்கட்டமாக 20.11.2020 அன்று தொடங்கிய கழக இளைஞரணிச் செயலாளர் திரு. உதயநிதி உள்ளிட்ட கழக நிர்வாகிகளைத் தொடர்ந்து நடத்த விடாமல் தடுப்பதற்கும், கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து கைது செய்து, நீண்ட நேரம், இரவு வரை காவல்துறைக் கட்டுப்பாட்டில் வைக்கும் அ.தி.மு.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்குக்கும் இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
கொரோனா ஆய்வு என்ற போர்வையில், மாவட்டந்தோறும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, அரசு செலவில் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அரசு விழாவை – அரசியல் கூட்டமாகவே நடத்தி வருகிறார். பேனர் வைத்து, கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிச் சற்றும் பொருட்படுத்தாமல், பெருந்திரளான கூட்டத்தைக் கூட்டி வரவேற்புத்தர வைப்பது – எதிர்க்கட்சிகள் மீது பொய்யான குற்றசாட்டுகளைக் கூறி தரக்குறைவாகப் பேசுவது போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சரைப் போலவே, அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மாவட்டங்களில் இதனையே பின்பற்றுகிறார்கள்.
அ.தி.மு.க. ஊழியர்கள் கூட்டம், தகவல் தொழில் நுட்ப அணியின் சார்பில் எல்லா மாவட்டத்திலும் கூட்டங்கள், அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் கூட்டங்கள் என்று தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர், வெளிப்படையாக அறிவிக்கப்படாத தேர்தல் பிரச்சார வேலைகளை, கொரோனா பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கை எதையும் பின்பற்றாமல் நடத்தி வருவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
அரசு விழாக்களை, அரசியல் விழாக்களாக மாற்றியுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் – முதலமைச்சர் – அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையும் காவல்துறை கைது செய்வதும் இல்லை; பிடித்து வைத்து இரவு வரை சிறைப்படுத்துவதும் இல்லை. அ.தி.மு.க.வின் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினரே தாராளமாகப் பாதுகாப்பு அளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
ஏன்; மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா சென்னை வந்தபோது – வரவேற்பு என்ற பெயரில், சென்னை விமான நிலையத்திலும், ஆங்காங்கே சாலைகள் நெடுகிலும் கூடி நின்ற அ.தி.மு.க.வினரை காவல்துறை கண்டு கொள்ளவே இல்லை. மாறாக, சென்னை காவல் ஆணையரே சாலையில் இறங்கிப் பாதுகாப்பு அளித்த, எல்லை மீறிய பாரபட்சமான செயல்பாடுகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது; அதைக் கண்ணுற்ற நடுநிலையாளர்கள் நாணித் தலை கவிழ்ந்தார்கள். உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா பங்கேற்ற அந்த அரசு விழா, தேர்தல் கூட்டணியே அறிவிக்கப்படும் அளவுக்கு அரசியல் விழாவாக, அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியின் பிரச்சாரத் தொடக்க விழாவாகவே நடத்தப்பட்டது என்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.
இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மக்கள் குடியிருக்கும் அல்லது அவர்கள் தொழில் செய்யும் பகுதிகளுக்கே நேரில் சென்று, அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களையும், அதனால் அவர்கள் அனுபவித்து வரும் இன்னல்களையும் கேட்டறிந்து, அந்தக் குறைகளை கழக தலைவர் முதல்வர் ஆனவுடன் தீர்ப்பார் என்ற உறுதியினையும் அளித்து வருகிறோம்.
இப்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டத்திற்கும், பாதுகாப்பு விதிமுறைகளுக்கும் உட்பட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு மட்டும் காவல்துறை தடை போடுவதும், அந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வதும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற விதிமுறைக்கு விடை கொடுத்து, அ.தி.மு.க.விற்கு ஒரு நியாயம் – தி.மு.க.விற்கு அநியாயம் என்ற மாறுபாடான நிலையும் அ.தி.மு.க. ஆட்சியில் கடைப்பிடிக்கப்படுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது என்று இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.
ஊழல்களில் ஊறித் திளைத்து – தனது நிலை மறந்து, தன்மானம் துறந்து, மத்திய பா.ஜ.க. எஜமானர்களுக்கு மண்டியிட்டுச் சேவகம் செய்யும் அ.தி.மு.க. ஆட்சியின் மீது, தமிழக மக்கள் வெறுப்பிலும், கடுங்கோபத்திலும் இருக்கிறார்கள். அதனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்”என்ற பரப்புரை நிகழ்ச்சிக்கு, மக்கள் மத்தியில் கிடைத்துள்ள மனமுவந்த பேராதரவு – மகத்தான வரவேற்பு, அ.தி.மு.க. ஆட்சியைப் பெரிதும் மிரள வைத்துள்ளது. அதன் காரணமாகவே, தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரத்தைத் தடுக்கும், ஜனநாயகத்திற்குப் புறம்பான, இழிசெயலில், அ.தி.மு.க. அரசு காவல் துறையைத் தவறான வழி முறைகளுக்குப் பயன்படுத்தி வருவதை, இனியும் பொறுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என்று இந்த உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
மக்களாட்சியில், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்யும் உரிமை உண்டு. ஆகவே, எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை உடைத்தெறிந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பரப்புரைப் பயணம், தன்னெழுச்சியான பொது மக்களின் பேராதரவுடன், தொடரும். அதைத் தடுக்க அ.தி.மு.க. அரசு நினைத்தால், ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம் என்ற ஆணவத்தில் காவல்துறையைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்தால், அதற்குத் துணைபோகும் காவல்துறை அதிகாரிகளும், சட்டத்துக்குப் புறம்பாக அவர்களைத் தூண்டும் முதலமைச்சர் திரு. பழனிசாமியும், கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்று, இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் எச்சரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.