மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜனவரி 14,15, 16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பான பணிகளை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்கள், பார்வையாளர்கள் அமரும் கேலரி, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் இடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.