ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் இல்லையா?: அபாண்ட அரசியலின் அதிர வைக்கும் பின்னணி

கொரோனா இரண்டாவது அலைத் தாக்கத்தின் போது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றிய எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நாடாளுமன்றத்திற்குப் பதிலளித்த ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா 2ஆம் அலைப் பாதிப்பின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எந்த மாநிலமும் தெரிவக்கவில்லை என்றும், சுகாதாரத்துறை மாநிலங்களின் வரம்புக்கு உட்பட்டது என்பதால், அவர்களே அதற்கு பொறுப்பு என்றும் கூறினார்.

ஒன்றிய அரசின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

“டெல்லி உட்பட பல மாநிலங்களிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து மருத்துவமனைகள் அன்றாடம் முறையிட்டனவே… இன்னும் சிறிது நாளில் இப்படி ஒரு பெருந்தொற்றே வரவில்லை என்று கூறிவிடுவார்கள் போலிருக்கிறது.” எனக் கொந்தளித்துள்ளார் டெல்லி மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின். “டெல்லி மாநில அரசின் சார்பில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோர் பற்றி கணக்கெடுத்து இழப்பீடு வழங்க குழு அமைத்தோம். ஆனால், ஒன்றிய அரசு, துணைநிலை ஆளுநர் மூலமாக அந்தக் குழுவைக் கலைத்து விட்டது. உண்மைகளை மறைப்பதற்காகவே இதுபோன்ற நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டது” என்று மேலும் குமுறியுள்ளார் அவர். “உண்மைகளை மறைக்க முயலும் ஒன்றிய அரசின் கொள்கைகள், நாட்டுக்கே பேரிடர்” என்று விமர்சித்துள்ளார் டெல்லி மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணீஸ் சிசோடியா. இதே குற்றச்சாட்டுகளை மகாராஷ்ட்ராவை ஆளும் சிவசேனா கட்சியும் முன்வைத்துள்ளது.

ஆனால், ஒன்றிய சுகாதாரத்துரை இணை அமைச்சர் மீனாட்சி லக்வியோ, “மகாராஷ்ட்ர அரசும், டெல்லி அரசும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோர் குறித்த புள்ளி விவரங்களை ஒன்றிய அரசிற்கும், ஊடகங்களுக்கும் வழங்கட்டும்” என்று சர்வ அலட்சியத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லி ஓர் உதாரணம்தான். தமிழ்நாட்டில் தி.மு.க அரசு பதவியேற்கும் முன்னர் ஏப்ரல் மாதத்தில் என்ன நடந்தது என்பது குறித்து சிறு பிள்ளைக்குக் கூடத் தெரியும். ஆக்சிஜனுக்காகவும், படுக்கைக்காகவும் ஓடியலைந்த பலர் கடைசியில் கிடைக்காமலே உயிரிழந்த பரிதாபங்களை அனைவருமே நேரில் பார்த்துப் பதறினோம். பெரும்பாலும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும், உறவுகளிலும் குறைந்த பட்சம் ஒரு உயிரையாவது இதனால் இழந்திருப்போம். இதை யாராலும் மறுக்கவோ, அத்தனை எளிதில் மறக்கவோ முடியாது. இன்னும் தங்கள் உயிருக்கு உயிரான உறவுகளை இழந்த துயரத்தில் இருந்து பல குடும்பங்கள் மீளவில்லை. உயர்மட்ட அரசியல் தலைவர்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை பட்டவர்த்தனமாக அறிந்துள்ள இந்த உண்மையை, ஒன்றிய அரசு எந்த அடிப்படையில் மறுத்துள்ளது? மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஓர் அரசு, இத்தகைய பொறுப்பற்ற பதிலைக் கூறுவது எதனால்? எந்தத் துணிவில்?

கொரோனா உயிரிழப்புகள் குறித்து மாநிலங்கள் அளித்த தகவல்களின் துல்லியமின்மையே, ஒன்றிய அரசிற்கு இந்தத் துணிவைத் தந்திருக்க வேண்டும் என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். ஆனால், மாநில அரசுகளின் அத்தகைய துல்லியமற்ற கணக்கீட்டுக்குக் காரணமே ஒன்றிய அரசுதான் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“அதற்கு உதாரணம் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கூறும் காரணம் தான். ஆக்சிஜன் உயிரிழப்புகள் குறித்து கணக்கெடுக்க அமைக்கப்பட்ட குழுவையே ஒன்றிய அரசு, துணைநிலை ஆளுநர் மூலம் கலைத்துள்ளது. இதேபோல் அனைத்து மாநிலங்களிடமிருந்தும் கொரோனா உயிரிழப்புகள் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்களைப் பெற ஒன்றிய அரசு அக்கறை காட்டவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் உச்சத்தில் இருந்த போது, அதிமுகவின் காபந்து அரசுதான் பதவியில் இருந்தது. அது கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகளையே சரியாகக் கையாளாத போது, கணக்கீட்டை எப்படி முறையாக எடுத்திருக்கும். திமுக அரசு பதவிக்கு வந்ததும் கொரோனா பரவலை – உயிரிழப்பைத் தடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்தியதால், கணக்கெடுப்பு என்பதை இனிமேல்தான் நடத்த முடியும். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு காரணங்களால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய துல்லியமான விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதே உண்மை. இதைத் தனக்கு வசதியாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒன்றிய அரசு, இப்போது, சர்வ அலட்சியமாகப் பதில் சொல்கிறது” என்று இதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் விரிவாகக் கூறுகின்றனர்.

ஆக்சிஜன் போதாமையால் உயிரிழப்புகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ வேண்டிய ஒன்றிய அரசு, அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று கூறுவதை எப்படி எடுத்துக் கொள்வது? கொடுந்தொற்றை விடக் கொடிது, அதன் கொடும் பாதிப்புகளை அலட்சியப் படுத்துவது. அதைத்தான் மோடியின் அரசு இப்போது செய்து கொண்டிருக்கிறது. கொடுங்கோன்மைக்கு இதைவிட உதாரணம் தேவையில்லை.

  • புவனன்      

தமிழ் எழுத்துகளால் வள்ளுவர் ஓவியம்… ஓவியருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

மோடியை வறுத்தெடுத்த மம்தா… அவரது டார்கெட் இதுதானா?

Recent Posts