இந்தியாவின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு நிறுவன நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். ஆனால் கொடி ஏற்றுவதற்கு பதிலாக கீழே இறங்கியது. இதனால் கட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிறுவன தினத்தையொட்டி சோனியா காந்தி வெளியிட்டுள்ள காணொலியில், நாம் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். காங்கிரஸ் என்பது ஒரு அரசியல் கட்சியின் பெயர் மட்டுமல்ல. ஒரு இயக்கத்தின் பெயர். காங்கிரஸ் கட்சி எந்த சூழ்நிலையில் உருவானது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. காங்கிரசும், அதன் தலைவர்களும் சுதந்திரப்போராட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று போராடி சிறையில் பல சித்ரவதைகளை அனுபவித்து பல தேசபக்தர்கள் உயிரை தியாகம் செய்தார்கள். அப்போதுதான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது.
சுதந்திரப்போராட்டத்தில் பங்கு கொள்ளாதவர்களால் அதன் மதிப்பை புரிந்து கொள்ளவே முடியாது. இன்று இந்தியாவின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, வரலாறு பொய்யாக்கப்படுகிறது. நாட்டின் சாதாரண குடிமக்கள் பாதுகாப்பின்மை மற்றும் பயத்துடன் இருக்கிறார்கள். ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் புறக்கணித்து சர்வாதிகாரம் நடத்தப்படுகிறது.
இது போன்ற நேரங்களில் காங்கிரஸ் அமைதியாக இருக்க முடியாது. நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். ஜனநாயக பாதுகாப்பிற்காக சமூக விரோத சக்திகளுக்கு எதிராக அனைத்து போராட்டங்களையும் மேற்கொள்வேன். இன்றைய வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு காங்கிரசாரும் தீர்மானம் எடுத்து காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்