“காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல” : நெதன்யாகுவை சந்தித்த ஜோ பைடன் கருத்து…

“காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல; வேறு ஏதேனும் குழு தாக்குதல் நடத்தியிருக்கலாம்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரை அடுத்து, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவுக்கு வந்துள்ளார். அவருக்கு விமான நிலையம் சென்று இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்பு அளித்தார். இதன்பின் இரு தலைவர்களும் போர் தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஜோ பைடன், “காசா மருத்துவமனை மீதான தாக்குதலால் நான் மிகுந்த வேதனையும், அதேநேரம் கோபமும் அடைந்துள்ளேன். நான் பார்த்தவரையில் மருத்துவமனை தாக்குதலை இஸ்ரேல் செய்யவில்லை. மாறாக, வேறொரு குழு இதை செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஹமாஸ் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும். ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை விட ஹமாஸ் மோசமானது. ஹமாஸ் தாக்குதலில் 30 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீன மக்களை ஹமாஸ் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அவர்களுக்கு துன்பத்தை மட்டுமே அளிக்கிறது. இஸ்ரேலுக்கு வந்துள்ளதை பெருமையாக கருதுகிறேன். இஸ்ரேல் மக்களுக்கு சொல்ல விரும்புவது, உங்களின் தைரியம், அர்ப்பணிப்பு, துணிச்சல் என்னை பிரமிக்க வைக்கிறது. அமெரிக்கர்கள் உங்களுடன் இருப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

மருத்துவமனை மீதான தாக்குதல்: காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்துவிட்டதாக காசா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த வான் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என ஹமாஸ், பாலஸ்தீன அதிகாரிகள் மற்றும் பிற நாடுகள் சிலவும் குற்றம்சாட்டியுள்ளன. ஆனால், ஹமாஸ் தான் காரணம் என இஸ்ரேல் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் 11 நாட்களாக மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,300 ஆக அதிகரித்துள்ளது என பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் 1,300 பேர் கொல்லப்பட்டதும், ஹமாஸின் பிடியில் 199 பேர் பிணைக் கைதிகளாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் இன்று 12-வது நாளாக நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள கான் யூனிஸ், ரஃபா உட்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.

இஸ்ரேல் ராணுவ மூத்த தளபதி மைக்கேல் தற்போது இஸ்ரேலில் முகாமிட்டுள்ளார். அமெரிக்காவின் முப்படைகளை சேர்ந்த 2,000 வீரர்கள் விரைவில் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட உள்ளனர். இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள். ஆனால், இஸ்ரேல் ராணுவத்துக்கு தேவையான ஆலோசனைகள், உதவிகளை வழங்குவார்கள்” என்று தெரிவித்தன.

இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட், டெல் அவிவ் நகரில் நேற்று கூறும்போது, “ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான போர் தீவிரமடைந்து வருகிறது. தற்போது அடுத்தகட்ட போருக்கு தயாராகி வருகிறோம். இது தரைவழி தாக்குதல் என்று எல்லோரும் கூறி வருகின்றனர். ஆனால் இது வேறு மாதிரியான போராக இருக்கும்” என்றார்.

இதனிடையே, ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கொமேனி கூறும்போது, “காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என்றார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 2250 காலி பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..

மருது சகோதரர்களின் 222வது நினைவு தினம் :சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

Recent Posts