திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு வர உள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியை சந்திரபாபு நாயுடு,
ராகுல் காந்தி மற்றும் இடதுசாரிகள் துவக்கியுள்ளனர்.
பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்த சந்திரபாபு நாயுடு இதில் முனைப்பு காட்டி வருகிறார். இதற்காக அவர் முதலில் ராகுல் காந்தியை சந்தித்தார்.
பின்னர் பல்வேறு மாநிலங்களிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர்களை சந்தித்து வருகிறார். கடந்த வாரம் சென்னை வந்த அவர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் தெலுங்கானா மாநில தேர்தலில் காங்கிரஸும் தெலுங்குதேசமும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
இந்நிலையில் திமுகவும் பாஜகவை வீழ்த்த அகில இந்திய அளவில் கூட்டணி அமைக்க முடிவு செய்து காங்கிரஸ் மற்றும் சந்திரப்பாபு நாயுடுவின் முயற்சிக்கு ஆதரவு அளித்து வருகின்றது.
இந்நிலையில் இடதுசாரி கட்சியின் பிரதான கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்தார்.
ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்த அவரை ஸ்டாலின் பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார்.
பின்னர் நடப்பு அரசியல் பற்றி யெச்சூரியும், ஸ்டாலினும் பேசினர்.
இந்த சந்திப்பின்போது திமுக துணைப்பொதுச்செயலாளர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அ.ராசா,
திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் உடனிருந்தனர்.
மார்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியுடனான சந்திப்பு குறித்து ஸ்டாலின் ட்விட்டர் மற்றும் முகநூலில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு வருமாறு:
“இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, 2019-ல் வரவிருக்கும் பொதுத் தேர்தலில், மத்தியில் ஆளும் மதவாத பாசிச பாஜக அரசை இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வீழ்த்துவது குறித்து கலந்துரையாடினோம்.”
இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.