முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை… வேட்டையைத் தொடங்கிவிட்டதா திமுக அரசு?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்சஒழிப்புப் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். திமுக அரசு பதவியேற்ற பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு எதிராக சோதனைகள் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலையில் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கோவில் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக 2-வது தளத்தில் வீடு உள்ளது. இந்த வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

கரூர் ஆண்டாள்கோவில் கிழக்கு ஊராட்சி செல்வன் நகரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டு அருகில் உள்ள சாய பட்டறை, சகோதரர் ரெயின்போ சேகர் வீடு ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

கரூர் தோரணகல்பட்டியில் வசித்து வரும் அதிமுக முன்னாள் கவுன்சிலரான ஏகாம்பரத்தின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சென்னையில் மூன்று இடங்களிலும், கரூர் மாவட்டத்தில் 20 இடங்களிலும் இன்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அனைத்து இடங்களிலும் இன்று காலை 7 மணிக்கு ஒரே நேரத்தில் சோதனையை போலீசார் தொடங்கினர்.

இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்ப தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, ”21 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும், என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன? என்பது பற்றிய விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.

விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடைபெற்றதை அறிந்ததும் கரூர் மற்றும் சென்னையில் அ.தி.மு.க. தொண்டர்கள் வர தொடங்கினர். ஆனால் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் வெளியில் இருந்து யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் சென்னை, கரூரில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தி வரும் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்று உள்ளது. இந்தச் சோதனை மாலை 3 மணி அளவில் முடிவடைந்தது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து கழகத்துக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் வாங்கியதில், பணிநியமனங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு எழுந்தது.

தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தியதிலும் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விஜயபாஸ்கர் மறுத்து வந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது பழைய அதிமுக சகாவான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினார். திமுக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும், தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊழல் புரிந்த அதிமுக அமைச்சர்கள் சிறைக்கு அனுப்பப் படுவார்கள் என்று எச்சரித்திருந்தார்.

ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொரோனா பரவலைத் தடுப்பதில் தீவிரக் கவனம் செலுத்தி வந்ததால் மற்ற விவகாரங்களில் ஸ்டாலின் அரசு கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிரான லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடவடிக்கை, அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வேட்டையை திமுக அரசு தொடங்கிவிட்டதற்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.