முக்கிய செய்திகள்

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

 

இன்றைய தலைமுறைக்கு குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதைவிட
வெளிவட்டத்தில் நேரம் அதிகம் செலவாகிறது. அலுவலகத்தில் சக பணியாளர்களாக இருக்கலாம் அல்லது வெளியில் அறிமுகமானவர்களாக இருக்கலாம். எப்படியாக இருந்தாலும், நட்புவட்டம் பெரிது. பெரிதினும் பெரிது கேள் என்றான் பாரதி. அதை இலட்சியமாக சொல்லிவைத்தான். இளம் தலைமுறையோ அதை நட்புக்கு எடுத்துக்கொண்டுவிட்டது. நட்பு தவறல்ல. உங்களை உயர்த்தக்கூடிய தீயதை சுட்டிக் காட்டக்கூடிய சிறந்த நட்பைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றித்தான் இங்கே பேசப்போகிறேன்.

பிளஸ் டூ படிக்கும் காலத்தில் நட்பு அரும்பத் தொடங்கும். வெளித் தொடர்புகள் மலரும். சில நட்புகள் வலுக்கட்டாயமாக அறிமுகமாகும். சில காரியங்களை
நட்புக்காகவே செய்யத்தொடங்கும் சூழல் ஏற்படும். அல்லது கட்டாயம் ஏற்படும்.
நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். எது நல்லது எது கெட்டது என்பதை
தேர்ந்தெடுக்கிற பக்குவம் இருக்காது. தனக்குத்தான் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்
இருக்கிறார்கள் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். எதில் இருந்து விலகி
இருக்கவேண்டும் எனத் தெரியாது. அனுபவங்களுக்குப் பிறகுதான்
தெரிந்துகொள்வார்கள்.

சில நட்புகளால் நடத்தை மாறிவிடும். பேசுகிற முறை மாறிவிடும். உடல்மொழி
மாறிவிடும். சிலநேரங்களில் சிலர் நல்ல பண்புள்ளவர்களாகவும் மாறிவிடக்கூடும். இரண்டும் உண்டு. தப்பு என்று தெரியும். ஆனால் பெரியவர்களிடம் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஈகோ தடுக்கும். எரிந்து விழுவார்கள். கத்துவார்கள். அழுவார்கள். கோபப்படுவார்கள். எதுவும் செய்வார்கள். பையனோ பெண்ணோ உள்ளுக்குள் இரண்டு பர்சனாலிட்டியாக இருப்பார்கள். ஒருசிலர் ஏன் இப்படி மோசமாக நடந்துகொண்டோம் என்று பின்னால் வருந்துவார்கள். நல்ல நிலைக்கும் மோசமான நிலைக்கும் நிறைய இடைவெளிகள் உருவாகிவிடும்.

பழைய நிலைக்கு வரமுடியாமல் தவிப்பார்கள். தங்களின் நிலை அவர்களுக்குத்
தெரியும். நட்பினால் விழுந்தவர்கள் நல்லவர் துணையால் எழுந்து நிற்பதும் உண்டு.

சிலர் எழமுடியாமல் தவிப்பார்கள். இளையவர்களுக்கு படிப்பும், நல்ல உடல்நலமும் முக்கியம்தான். கூடாநட்பு கேடாய் முடியும் என்பார்கள். கூடாநட்பில் இருந்து வெளியேறும்போது, அதற்குள் கிடைத்தற்கரிய காலம் விரயமாகியிருக்கும். காலம் பொன்னைவிட மேலானது என்பது அதை இழந்து நிற்கும்போதுதான் புரியவரும்.

அதற்கு முன் புரியாது. புரிந்தவர்கள் சொன்னால் மனம் தெளியாது. பொதுவாகவே நட்பில் இருந்து சில அடிகள் தள்ளிநின்று பார்ப்பதும் பழகுவதும் பெரும் பாதிப்பைத் தராது. தள்ளி நின்று பார்க்கிற பழக்கம் வேண்டும். இவரைத்தான் நண்பராக ஏற்றுக்கொள்ளவேண்டும் என பெற்றோர்கள் சொல்லிவிடமுடியாது. நண்பர்கள் சூழல்களால் அமைகிறார்கள்.

நட்பினால் வாழ்க்கையின் பாதை திசைமாறுவது ஒருபுறம் என்றால்,
பொருளாதாரரீதியாக இழப்பவர்களும் இருக்கிறார்கள். அந்த இழப்பிற்கு என்ன
செய்யமுடியும். எப்படி ஈடுகட்டமுடியும். சாமானிய குடும்பங்களில் இருந்து படிப்பால் உயர்ந்து நல்ல நிலைக்கு வரும்போது, தவறான நட்பு வட்டத்தால் பொருளாதாரத்தை இழந்தால் என்ன செய்வார்கள். யோசிக்கவேண்டும். என் படிப்பு, என் உடல்நலம், என் குடும்பம், என் வாழ்க்கை என்ற மேடையில் நின்றுகொண்டுதான் நட்பில் இணைந்திருக்கவேண்டும். எதுவொன்றையும் இழந்து நீங்கள் நட்பை அடைபவராக இருக்கக்கூடாது. சுயபாதுகாப்பும், தைரியமும் இருக்கவேண்டும்.

நல்லதே நடக்கவேண்டும். கெட்டது நடக்கக்கூடாது என்ற தீர்மானம் வேண்டும்.
உங்களிடம்தான் அது இருக்கிறது. ஓடுகிற ஓட்டத்தில் எதுவும் தெரியாமல்
போய்விடக்கூடும். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு உடல்ரீதியாகவும்
மனரீதியாகவும் தனித்துவம் இருக்கிறது. ஆணைவிட பாதிப்புகள் அதிகம். அதில் இருந்து மீட்டெடுப்பது சிரமம். இயற்கையே பெண்களை தனித்துவமானவர்களாக அழகானவர்களாக உருவாக்கும் சக்தியாக படைத்திருக்கிறது. இழந்தால் எதுவும் திரும்பக்கிடைக்காது. கவலைகளே மிஞ்சும். மனத்துக்குள் சின்ன எச்சரிக்கை இருந்து கொண்டே இருக்கவேண்டும். சமூகக்கட்டுப்பாடு இருக்கிறது.

ஒருகட்டத்தில் பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் விலகி வெளியுலகில் ஐக்கியம் அடைகிறார்கள். நண்பர்கள் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த தருணத்தில் வெகு எளிதாக அவர்களை திசைதிருப்பிவிடமுடியும். அதுபோன்ற ஒரு பருவம் அது.

கடைசி ஒரு மாதம் படித்தால் போதும் என்று நினைப்பார்கள். துணிச்சல் வேண்டும்.

ஆனால் அசட்டுத்துணிச்சலாக இருக்கக்கூடாது. புலியை பூனையென்று
நினைத்துவிடக்கூடாது. சுயமதிப்பீடு மிக முக்கியம். எல்லாவற்றையும் பேலன்ஸ்
செய்கிற மனப்பக்குவம் முக்கியம்.

நேர மேலாண்மையும், எதிர்காலம் பற்றிய நேர்மறையான எண்ணங்களும்
பிள்ளைகளை வளர்க்கும். அந்தக் காலத்தில் பள்ளி முதல் கல்லூரி வரையில் ஒரே நண்பர்கள் கூட்டம் வரும். இன்று அப்படியில்லை. பள்ளியிலேயே புதிய நண்பர்கள் வருவார்கள். போவார்கள். சில வேறு பள்ளியில் இருந்து வந்து சேர்வார்கள்.

கல்லூரிக்குச் செல்லும்போது அப்படியே நிலை மாறும். புதிய நட்புவட்டம் சூழும்.
இக்கரைக்கு அக்கரை பச்சை. எதையும் கவர்ச்சியைக் கொண்டு
தேர்ந்தெடுக்கக்கூடாது. யார் உண்மையிலேயே திறமையும் நற்பண்பும் உடையவர்கள் என்பதை அடையாளம் காண்பது அறிவு.

இளம் தலைமுறையினரிடம் மிக அதிகமாகக் காணப்படுவது டோன்ட் கேர்
மனநிலை. அதென்ன…

தொடரும்.