முக்கிய செய்திகள்

ஆட்சிப் பெருமிதம் காட்சிக்குத்தான் பயன்படும்!: தலையங்கன்(ம்)

நாடு முழுவதும் 19 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துவிட்டதாகவும்,  இந்திராகாந்தியைத் தாங்கள் விஞ்சி விட்டதாகவும் கூறி, பிரதமர் மோடி பெருமைப்பட்டிருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற அக்கட்சியின் எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய மோடி, மீதமுள்ள மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவினர் தயாராக வேண்டும் என்று முடுக்கி விட்டிருக்கிறார்.

பத்தொன்பது மாநிலங்களில் ஆட்சியில் இருப்பது பா.ஜகவுக்கு வேண்டுமானால் பெருமிதமாக இருக்கலாம். மக்களுக்கு?

பாஜக வாஜ்பாய் காலத்தில் ஆட்சிக்கு வந்த போது, அதை எதிர்ப்பவர்களுக்குக் கூட ஒரு நம்பிக்கை இருந்தது. அதாவது பாஜகவின் தாய் அமைப்புகளான ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள், கோட்பாட்டு அளவில் சுதேசிப் பொருளாதாரத்தைப் பேணவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவை என்பதால், விவசாயம் போன்ற நாட்டின் உயிராதாரத் தொழில்களை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வாஜ்பாய் காலத்திலேயே, அந்த எதிர்பார்ப்பு ஏறத்தாழ பொய்த்துப் போனது. 70 கள்வரை எங்கு, எப்போது பார்த்தாலும் விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என அரசியல் தலைவர்கள் பேசுவதைப் பார்க்க முடியும். 90 களின் இறுதியில், அரசியல் அரங்குகளில், பேச்சளவில் கூட விவசாயம் சார்ந்த அக்கறை  காணாமல் போனது. தற்போது மோடி தலைமையிலான ஆட்சியோ, அடிப்படையான உற்பத்தித் தொழில் சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்த குறைந்த பட்ச வேலைத்திட்டங்களைக் கூட உருவாக்க முயற்சிப்பதாக தெரியவில்லை.   மாறாக, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என எஞ்சியிருக்கும் ஆதாரங்களைக் கூறு போடுவதிலேயே உற்சாகம் காட்டுகின்றனர்.

இதுபோன்ற நடவடிக்கைகளால், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதை ஆய்வு செய்து அறிந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை. நமது அன்றாட வாழ்க்கை அனுபவங்களே நமக்கு அவற்றை உணர்த்துகின்றன. விவசாயம் நலிவதால், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயரும் போக்கு கடந்த 20 ஆண்டுகளகா வேகமாக அதிகரித்து வருகிறது. சுதேசிப் பொருளாதாரம் என்பது நகரமயமாதலை அடிப்படையாக கொண்டதல்ல. கிராமப்புற மேம்பாடு, தன்னாட்சி, உற்பத்தி சார்ந்த தன்னிறைவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. ராஜீவ் காலத்தில் கொண்டு வரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் என்ற திட்டம் இந்தப் பார்வையை அடிப்படையாக கொண்டதுதான். ஆனால், பின்னாளில் காங்கிரசே அந்தத் திசையில் இருந்து திரும்பப்பயணித்தது வேறுகதை. அக்கட்சி சந்தித்த வீழ்ச்சிக்கான பிரதான காரணங்களுள் அதுவும் ஒன்று. காங்கிரசை எதிர்க்கிறோம் என்று கூறி, ஆட்சியைப் பிடித்திருக்கும் பாஜகவும் அதே திசையில் பயணிப்பதுதான் இந்த நாட்டுக்கு நேர்ந்த பேரவலம். பொருளாதார வளர்ச்சிக் குறியீடு சொல்லும் செய்திகள், வாழ வழியில்லாமல் கிராமப்புறங்களை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களில் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தஞ்சமடையும் விளிம்புநிலை மக்களின் வேதனைகளைப் பிரதிபலிப்பதில்லை. அது வேறு கணக்கு. காங்கிரசேனும் அவர்களைக் கணக்கில் கொண்டு ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி, அரைவயிற்றுக் கஞ்சிக்கேனும் வழிசெய்தது. அதனையும் ஒருவழியாக முடக்கியாயிற்று. சிறு, குறு விவசாயிகள், இவற்றைச் சார்ந்து வாழும் தொழிலாளர்கள் தான் இந்த  நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பகுதி என்பது இன்றுவரை தொடரும் நிஜம். அவர்களை உள்ளடக்காத  பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளெல்லாம் வெறும் புனைகதைக்கு ஒப்பனாவையே. வளர்ச்சி என்ற முழக்கத்தோடு, எளிய மக்களுக்கு முற்றிலும் எதிரான பாதையில் முன்னை விட பன்மடங்கு வேகத்துடன் தமது தலைமையிலான ஆட்சி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில்தான், 19 மாநில ஆட்சி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் பேசி இருக்கிறார். ஆட்சிப் பெருமிதம் வெறும் காட்சிக்குத்தான் பயன்படும். தங்களது காலடியின் கீழ் நசுங்கிக் கொண்டிருக்கும் எளிய மக்களின் உலகத்தைச் சற்று குனிந்து பார்க்கும் மனநிலையை, அதிகார உச்சத்திலும், அது தரும் போதையிலும் திளைத்திருப்போருக்கு அத்தனை எளிதில் வாய்த்துவிடுமா என்ன?

Modi’s Proud